Wednesday, April 11, 2018

ரஜினி என்னும் தலைவன்ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று !!! அவரை முதல்வர் ஆக்கும் மிக பெரிய கடமை நம்மிடம் உள்ளது. இனியும் ரஜினியை நடிகனாக முன்னுறுத்தி பயன் இல்லை. அவரை தலைவராக முன்னிறுத்த வேண்டிய நேரம் வந்தாயிற்று!!! 
 
                                 


எம்.ஜி.ஆரின் மிக பெரிய வெற்றிக்கு காரணம், அவரும் சரி, அவரது ரசிகர்கர்களும் சரி. எம்.ஜி.ஆரை நம் சமகாலத்து அரசியல் கட்சி தலைவரான கலைஞரை விட மிக பெரிய தலைவராக காட்ட விரும்பினார்களே தவிர, அண்ணா, பெரியார், காமராஜர் போன்றவர்களை விட பெரிய தலைவராக காட்ட விரும்பவில்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம், எம்,ஜிஆர் தன்னுடைய தலைவராக அண்ணா அவர்ளை ஏற்றுக்கொண்டது கூட இருக்கலாம். ரஜினியை பொறுத்தவரை , ரஜினி நிச்சயமாக தன்னுடைய அரசியல் தலைவராக யாரையும் அறிவிக்க மாட்டார். எல்லா தலைவர்களிடமும் உள்ள, நல்ல குணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படுவார்.இதனைத்தான் ஜெயலலிதாவின் ஆளுமை, கலைஞரின் தன்னம்பிக்கை , எம்.ஜி.ஆரின் ஏழைகளுக்கான ஆட்சி, ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாக எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கூறினார்.

ஆனால் பல ரசிகர்கள் என்ன செய்கின்றனர்?? ரஜினியை பெரியார், அண்ணா ,ஜெயலலிதா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களை விட மிக பெரியவராக காட்ட முயல்கின்றனர். இது மிக பெரிய தவறு. மிக பெரிய ஆபத்தை உண்டாக்கும். ரஜினியை ஸ்டாலின்,கமல் ,OPS ,EPS ,அன்புமணி, சீமான் போன்ற சமகாலத் தலைவர்களை விட பெரிய தலைவர் என்பதை தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதைத் தான் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ரஜினியே தற்பொழுது தான் தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக தெளிவாக கூறியுள்ளார். அதேபோல், சமகால அரசியல் தவறுகள் மற்றும் திட்டங்களை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும் .மாறாக, அண்ணா, எம்,ஜிஆர், பெரியார், கலைஞர்,ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளையும் அவர்களின் திட்டங்களையும் விமர்சனம் செய்வது, அவர்களை நேசிக்கும் தொண்டர்களிடம், ரஜினி மீது வெறுப்பை உண்டாக்கலாம்.

அண்ணா,பெரியார் போன்றவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சொந்தமான பெரிய தலைவர்கள். அவர்களை பற்றி தவறாக பேசினால், பெருவாரியான மக்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் கலைஞர், திமுகவினர் நேசிக்கும் ஒரு பெரிய தலைவர். திமுகவினர் பலர் ஸ்டாலின் மீது தற்பொழுது கோபமாக உள்ளனர். அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். மாறாக, இந்த நேரத்தில் கலைஞரை பற்றி நாம் தவறாக பேசினால், அவர்களுக்கு ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம். அதேபோல் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா. அதிமுகவினருக்கு தற்பொழுது OPS மற்றும் EPS மீது வெறுப்பு உள்ளது. அதனை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நாம் விமர்சனம் செய்தால், அதிகவினருக்கும் ரஜினி மீது வெறுப்பு ஏற்படலாம்.

இதையே தான் ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசும் பலர் செய்கின்றனர். தலைமை என்னதான் விளக்கம் கொடுத்தாலும், ரஜினியை ஆதரித்து தொலைக்காட்சிகளில் பேசுபவர்களின் கருத்துக்களை ரஜினியின் கருத்தாக நம்ப பல பேர் இருக்கின்றனர். ரஜினியை ஆதரித்து பேசுகிறேன் என்ற போர்வையில் பாஜகவை சேர்ந்த சிலர் பெரியார், அண்ணா,கலைஞர் ஆகியோரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். நான், மனது விட்டு சொல்கிறேன். குறிப்பாக ஒரு அமைப்பை சார்ந்த ஒருவர்( (பெயர் சொல்ல விரும்பவில்லை) , ரஜினியை ஆதரித்து பேசும் ஒவ்வொரு விவாத நிகழ்ச்சியிலும் நாம் சில ஓட்டுக்களை இழக்கின்றோம். இதனைத்தடுக்க தலைமை சார்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச மிக சிறந்த அறிஞர்களை கூடிய விரைவில் தேர்வு செய்து ரஜினி அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு சமகால அரசியல் தலைவர்கள் மற்றும் சம்பவங்களை மட்டும் குறிப்பிட்டு பேச அறிவுறுத்தப்பட வேண்டும்.

இதனால் பெரியார், அண்ணா,ஜெயலலிதா,கலைஞர், எம்.ஜி,ஆர் போன்றவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா?? என்று கேட்பது எனக்கு புரிகிறது. கண்டிப்பா கிடையாது தான். தற்பொழுதைய நிலையில் நாம் ரஜினியை வெற்றிபெற செய்வது தான் முக்கியம். நாம் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த எண்ணினால் , மாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும். இப்போதைக்கு, அர்ஜுனன் அம்புக்கு தெரிந்த கிளியை போல, ரசிகர்களாகிய நமக்கு வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...