Wednesday, April 11, 2018

மறப்போம் !!! மன்னிப்போம் - ரஜினிகாந்த்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

இந்த திருக்குறளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் ரஜினி தான். ஏன் என்று சில நிகழ்வுகள் மூலம் காண்போம்.


1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ரஜினியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய, ஜெயலலிதா தேர்ந்து எடுத்த ஒருவர் தான் ஆச்சி மனோரமா. இவருக்கு கொடுத்து இருக்கும் வேலையே ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேச வேண்டும். அதாவது, வடிவேலு அவர்களை விஜயகாந்திற்கு எதிராக கலைஞர் எப்படி பயன்படுத்தினாரோ, அப்படிதான் !!! உண்மையிலேயே மனோரமா அப்படி எல்லாம் பேசுவாரா?? என்று எண்ணும் வண்ணம் ரஜினியைப் பற்றி மிகவும் கண்ணியம் இல்லாமல் பேசி விட்டார். ரஜினியை பைத்தியக்காரன் என்று கூறும் அளவிற்கு சென்று விட்டார். தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் அதிர்ந்து விட்டன. வழக்கம் போல் ரஜினியிடம் இருந்து எதிர்வினை எதுவும் வரவில்லை. ( எப்படிதான், இவ்வளவு பொறுமையுடன் நிதானமாக செயல்படுகிறார் என்று தெரியவில்லை). 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வருகின்றன. ரஜினி ஆதரித்த திமுக-தாமக கூட்டணி மகத்தான வெற்றி பெறுகிறது. அதன் பிறகு, மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு வரவில்லை. எங்கே, இவருக்கு படம் கொடுத்தால் ரஜினியைப் பகைத்து கொண்டது போல ஆகி விடுமோ?? என்று பயந்தனர்.

இதனை கவனித்த ரஜினி, தான் நடித்த அருணாச்சலம் படத்தில் மனோரமா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பின் மனோரமா அவர்களுக்கு பட வாய்ப்பு குவிந்தது.

இதனைப்பற்றி சில வருடங்களுக்கு முன்பு நடந்த மனோரமா பாராட்டு விழாவில் குறிப்பிட்ட ரஜினி, உங்கள எவ்வளவோ பேசி இருக்காங்க, உங்களுக்கு மனஸ்தாபம் இல்லையா? அப்படினு நிறைய பேரு என்கிட்டே கேட்டாங்க !!! பில்லா படப்பிடிப்பின்போது "நாட்டுக்குள்ளே எனக்கொரு பேர் உண்டு" பாடல் காட்சி சென்னையில் ஒரு கடற்கரையில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போ ஷூட்டிங் வேடிக்கை பார்த்த ஒருத்தர் , " பரவாயில்லை!!! பைத்தியம் நல்லா ஆடுது" அப்படினு சொல்லிட்டார். அப்ப நான் நெர்வஸ் பிரேக்டௌன் ஆகி மருத்துவமனையில இருந்து வந்து இருக்கேன். அவர் என்னை பைத்தியம்னு சொன்ன உடனே, ஆச்சிக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. அவரை பிடிச்சு கன்னத்துல அடிச்சு, அந்த ஆளு அங்க இருந்து போனாதான் நான் நடிப்பேன்னு சொன்னாங்க!! அந்த ஒரு முறை என்னை காத்த கைகள் எத்தனை முறை என்ன அடிச்சாலும் அத ஏத்துக்கும் !!! அப்படினு சொல்லி மிக நெகிழ்ச்சியாக பேசி முடித்தார். ஆச்சி மனோரமா அவர்களும் கண் கலங்கி விட்டார்.

1993 ஆம் ஆண்டு உழைப்பாளி படப்பிடிப்பின்போது, விநியோகஸ்தர்கள், நடிகர்கள் இடையே ஒரு கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட விநியோகஸ்தர்கள், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். கோடிகளில் எல்லாம் சம்பளம் தர முடியாது என்று கூறுகிறார்கள். அங்கு இருந்த ரஜினி சட்டென்று எழுந்து, இதில் எனக்கு உடன்பாடு இல்லை. மார்க்கெட் இருக்குறதுனாலதான், நீங்க நடிகர்களுக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்குறீங்க !! உங்களுக்கு விருப்பம் இல்லனா, அவங்களை வெச்சு படம் எடுக்காதீங்க !! அதை விட்டுட்டு சம்பளத்தை குறைத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆத்திரம் அடைந்த விநியோகஸ்தர்கள், ரஜினிக்கு ரெட் கார்டு போட்டு விட்டனர். உழைப்பாளி படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் ரஜினியைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள். "தலைவா!! ஆணையிடு!! விநியோகஸ்தர்களின் தலை உங்கள் முன்னால்" என்கின்ற ரீதியில் அமைந்தன. ரஜினி விபரீதத்தை உணர்ந்தார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து தியேட்டர்களிலும் நானே படத்தை வெளியிடுறேன் என்று கூறினார்.

விநியோகஸ்தர்கள் தியேட்டர்களைத் தரக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். அதையும் மீறி தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட தகுந்த தியேட்டர்கள், ரஜினியிடம் படத்தை நேரடியாக வாங்க முன்வருகின்றன. படமும் மாபெரும் வெற்றி பெறுகிறது. விநியோகஸ்தர்கள் தாங்கள் அவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்று எண்ணி ரஜினியிடம் மன்னிப்பு கேட்டனர். அவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு விளக்கிக்கொள்ளப்பட்டது அப்பொழுது ரஜினியை மிரட்டிய அனைத்து விநியோகஸ்தர்ககளுக்கும் தன்னுடைய அடுத்த படத்தை கொடுப்பதில் அவர் எந்த இடையூறும் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், உழைப்பாளி படத்தை தன்னிடம் நேரடியாக வாங்கிய தியேட்டர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் தரப்படுகின்றதா ?? என்பதை கண்டறிந்து உறுதி செய்தார். (இதனை சந்திரமுகி படம் வரையில் அவர் உறுதி செய்ததாக ஏதோ ஒரு தியேட்டர் ஓனர் (பெரம்பூர் பிருந்தா??) கூறியதை படித்து இருக்கிறேன்)

1998 ஆம் ஆண்டு மன்சூர் அலிகான், ரஜினியைத் தேவை இல்லமால் தரக்குறைவாக பேசினார். அவருக்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனது. படையப்பா படத்தில் ஒரு சிறிய ரோல் கொடுத்து அவருக்கு பட வாய்ப்பு வர வழி செய்தார். ஆனால் ,மன்சூர் அலிகான் திருந்துவதாக தெரியவில்லை. தற்பொழுதும் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி இணையும் படத்தில் நடிக்க இவ்வாறு செய்கிறாரா?? என்று தெரியவில்லை.

பாரதிராஜா - இவரைப்பற்றி கூறவே வேண்டாம். ரஜினியை கேவலமாக விமர்சித்தவர்களில் முதலிடம் இவருக்குத்தான். ஆனால், இவருடைய நடிப்பு தொழிற்கூடத்தை திறந்து வைத்தது நம் ரஜினி தான். இவரை போன்ற ஆட்களுக்கு நிச்சயமாக ரஜினி எவ்வளவு செய்தாலும், வருத்தம் ஏற்படாது. தற்பொழுதும் தேவை இல்லாததை பேசி வருகிறார்.

சத்யராஜ் - பச்சை, மஞ்சள், பிங்க் தமிழன் . ரஜினியை விமர்சித்து பச்சை தமிழன் என்று பெயர் பெற்றவர். இவருடைய மகன் தற்போது நடிக்கும் படத்தின் பெயர் ரங்கா. ரஜினி முழு மனதோடு படத்தின் பெயரை பயன்படுத்திக்கொள்ள சொல்லி இருக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி - கடந்த மே மாதம் ரஜினி போருக்குத் தயாராகுங்கள் என்று கூறியபோது, அவர் வீட்டில் பேரன், பேத்திகளோது, விளையாடட்டும் என்று கூறியவர். இவருக்கு ஜல்லிக்கட்டு வீரன் என்று நினைப்பு. ஆனால் அடுத்த இரண்டாவது மாதத்தில் நடத்த 2.0 இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கியதே இவர்தான். அதற்கு ரஜினி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதுபோன்று, இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை சொல்லி கொண்டே போகலாம். இது வரை ரஜினியாக சென்று யாரையும் புண்படுத்தும் வண்ணம் பேசியது கிடையாது. அதேபோல், மற்றவர்கள் பேசினாலும், அமைதி காத்து, அவர்கள் மனம் நோகும்படி நல்லது செய்து விடுவார். இவரை விமர்சனம் செய்பவர்கள், நாம் எதற்காக இவரை விமர்சனம் செய்கிறோம் என்று தங்களை ஒரு முறை சுயபரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.பொறுமையே உனக்கு மறு பெயர் தான் ரஜினியா?

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...