Wednesday, March 7, 2018

ரஜினி,பாமக மோதல் - வென்றது யார்


நான் என்னுடைய பதிவுகளில், ரஜினியைத் தவிர யாரைப் பற்றி குறிப்பிடும் பொழுதும் ,திரு அல்லது அவர்கள் என்று குறிப்பிடுறேன். ஆனால் தலைவர் அவர்களை ரஜினி என்றே எழுதுகிறேன்.இது நம் தலைவருக்கு நான் செய்யும் மரியாதை குறைவு அல்ல. ரஜினி என்று எழுதும் போது வரும் மகிழ்ச்சி, வேறு எப்படி குறிப்பிட்டாலும் வராது. சுருக்கமா சொல்லனும்னா, அவர் பெயருக்குள் இருக்கும் காந்தம் தான் காரணம்.பாபா படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு மாதம் முன்பு, பெங்களூருவில் கன்னட சூப்பர்ஸ்டார் திரு.ராஜ்குமார் அவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார். அப்பொழுது பேசும் அவர், பாபா படம் மட்டும் வெள்ளி விழா கண்டால், இது தான் என்னுடைய கடைசி படம். இதுக்குமேல படம் நடிக்க வேண்டாம் என்று நினைக்குறேன்!! நான் இப்படி சொல்றதுனால, என் ரசிகர்கள் நான் நிறைய படம் நடிக்கணும்னு நினைச்சு, இந்த படத்தை தோல்வியடைய செய்யக்கூடாது என்று கூறுகிறார். (அதனால் தான் என்னவோ, பாபா படம் தோல்வி அடைகிறது.)

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சந்தன கடத்தல் வீரப்பனை ஒரு அரக்கன் என்று கூறுகிறார். அந்த அரக்கனை சீக்கிரம் பிடிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று கூறுகிறார். அந்த நாட்களில், வீரப்பனுக்கு எதிராக யாரும் அப்படி ஒரு வார்த்தையைக் கூறியது கிடையாது. அதுவும், ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்டு சிறிது காலத்தில் இதனைக் குறிப்புடுகிறார். இதனால் வீரப்பன் தன் மீதும் கோபம் கொள்வான் என்கின்ற பயம் எல்லாம் ரஜினிக்கு கிடையாது. நியாயமாக பார்த்தால், ரஜினி கூறிய அந்த வார்த்தைக்கு, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால ,நடந்தது என்ன?

இன்று எப்படி வீரப்பன் இருந்து இருந்தால், கர்நாடகாவை மிரட்டி காவிரி நீர் வாங்கிக் கொடுத்து இருப்பார் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறார்களோ, அன்றும் அந்த கொலைகாரனை கொண்டாட, நம் நாட்டில் நிறைய பேர் இருந்தார்கள். முக்கியமாக வீரப்பனின் ஜாதியை வைத்து அரசியல் செய்ய பல பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் ஒருவராக வருகிறார், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு.ராமதாஸ் அவர்கள். அப்பொழுது நடந்த பொதுக்கூட்டத்தில், ரஜினியை அவன்,இவன் என்று பேசுகிறார். இவன் யாரு, வீரப்பனை அரக்கன்னு சொல்ல ?? இவன் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தது என்ன? சிகரெட் ,மது பிடிக்க மட்டும் தானே ? என்று கூறுகிறார். (பாமகவை பற்றி பேசும்போது அவர்கள் மரம் வெட்டதான் கற்று கொடுத்தார்கள் என்று கூறுவதை போல, ரஜினி படத்தில் கூறிய நல்ல விஷயங்களை மிக வசதியாக மறந்து விட்டார்.)

அவ்வளவுதான், ரஜினி ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கு போகிறார்கள். தமிழ்நாட்டில், ரஜினியை விமர்சிக்கும் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் டாக்டர்.ராமதாஸ் அவர்கள். அதற்கு முன்பு, யாரும் அதுவரை ரஜினியை அப்படி ஒருமையில் பேசியது இல்லை. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் கூட, மனோராமா அவர்களை வைத்துதான் ரஜினியை கேவலமாக பேச வைத்தார். ( இதனால் மனோராமா அவர்கள், படம் கிடைக்காமல் ஒரு வருடம் கஷ்டப்படுகிறார். ரஜினி அவரை மீண்டும் தன்னுடைய அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைக்கிறார் ). எனவே, தன் தலைவரை ஒருவர் ஒருமையில் பேசியதை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரஜினி ரசிகர்கள் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களை செய்கிறார்கள். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை !! ரசிகர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று ரஜினி கூறுகிறார்.
பாபா படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் படத்திற்கு எதிராக பாமகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். விருதாச்சலத்தில் படத்தின் பொட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் அந்த திரையரங்கிற்கு ஒரு பொட்டியை அனுப்பி வைத்து, அங்கு நடக்க இருந்த, மிக பெரிய வன்முறையைத் தடுத்தார். அப்பொழுதும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். " அய்யா,மருத்துவர் ராமதாஸ் அவர்களால் ஏற்படும் பிரச்னையை நான் சட்டபூர்வமாக சந்திக்கிறேன். ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும். கடவுள் சில மனிதர்களைப் படைப்பதே, நாம் அவர்களை பார்த்து எப்படி வாழக்கூடாது என்று தெரிந்து கொள்ளதான்" என்று கூறுகிறார். ரஜினியிடம் இருந்து மிக பெரிய எதிர்ப்பு வரும், இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்தவர்கள், ஏமாந்து போனார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு, ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட செயல்களை செய்து விட்டு, அமைதியாகி விட்டனர்.

2002 ஆம் ஆண்டு இறுதியில், தமிழகத்தில் காவிரி விவகாரம், விஸ்வரூபம் எடுக்கிறது. வழக்கம் போல், தமிழக அரசை விட்டுவிட்டு,ரஜினி ஏன் காவிரி நீரைக் கொண்டு வரவில்லை என்று பலர் உளறிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில், நெய்வேலி சென்று போராட்டம் செய்யலாம் என்று தமிழ் திரையுலகம் முடிவு செய்கிறது. கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக் கருதி, ரஜினி அதற்கு ஒத்துழைக்கவில்லை. பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்பது அவருக்கு பிடிக்காத செயல். அவ்வளவுதான், ரஜினியை அனைவரும் வசைப்பாட ஆரம்பித்தனர். கேவலப்படுத்தினர். அதிமுக, பாமக என்று பலரும் ரஜினியை தமிழர்களுக்கு விரோதிபோல சித்தரித்தனர். தமிழ்நாட்டின் பல இடங்களில் ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. 2 நாட்கள் அனைத்தையும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறார் ரஜினி. மறுநாள் தான் புதிதாகக் கட்டி உள்ள கேளம்பாக்கம் பண்ணை இல்லத்திற்கு பத்திரிக்கையாளர்களை வர சொல்கிறார். தமிழ்நாடு பரபரப்பு அடைகிறது.

அங்கு வந்த பத்திரிகையாளர்களிடம் , " நான் முதல்ல இந்தியன், அப்புறம் தமிழன் ". இதனை நான் பலமுறை சொல்லி இருக்கின்றேன். என்னை பத்தி எதிரா பேசுறவங்களை, நான் தேர்தல் நேரத்துல பார்த்துக்கிறேன். நெய்வேலியில் போராட்டம் நடத்துகின்ற அதே நாள்ல , நான் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுகிறார். பல நடிகர்கள், நெய்வேலி போக யோசிக்கின்றனர். கலைஞர் கருணாநிதி அவர்கள், நெய்வேலி போராட்டத்தில் திமுக நடிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ரஜினி நடத்தும் போராட்டத்தில் தான் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். மறுநாள் தினமலரில் வந்த தலைப்பு செய்தி என்ன தெரியுமா?? " ரஜினியால் FUSE போகிறது நெய்வேலியின் CURRENT மறியல் "", எங்கே, ரஜினி அதே நாளில் உண்ணாவிரதம் இருந்தால், நெய்வேலியில் ஒருவர் கூட வர மாட்டார்களோ என்று பயந்த அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், ரஜினியின் போராட்டத்தை ஒரு நாள் தள்ளி வைக்க சொல்கிறார். ரஜினியும் அதற்கு சம்மதம் தருகிறார். சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், எவ்வளவு பெரிய வெற்றி என்பதற்கு சான்று, உலகில் முதன் முறையாக நேரடியாக ஒளிப்பரப்பட்ட முழுமையான உண்னாவிரதம் அதுதான் !!!

ரஜினி அவர்கள் தேர்தல் நேரத்தில் எதிரிகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதால், ரசிகர்கள் 2004 ஆம் ஆண்டு நாடாளமன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில், உங்களுக்கு சில விஷயங்களைக் கூற விரும்புகின்றேன். 1990 களின் தொடக்கத்தில் வெளிவந்த ஒரு பேட்டியில், அரசியல் என்பது ஒரு சாக்கடை , இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே திருடர்கள் என்று கூறுகிறார். அப்பொழுது தமிழ்நாட்டு அரசியலில் அவருக்கு மிக பெரிய நண்பர்கள் எல்லாம் கிடையாது. அதேபோல் அவர் இருந்து இருந்தால், அவர் நிச்சயமாக எப்பொழுதோ அரசியலுக்கு வந்து இருப்பார். ஆனால் ,விதி வலியது. 1996 ஆம் ஆண்டு தேர்தலில், கலைஞர் அவர்களின் நட்பு கிடைக்கிறது. கலைஞர் அவர்கள் மீது நமக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும், இது வரை தமிழகத்தில் ரஜினியை விமர்சித்து பேசாத தலைவர் அவர். சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம், ரஜினிக்கு மிக பெரிய மரியாதை கொடுத்தவர். இதனால்தான் , கலைஞரைப் பற்றி ரஜினி குறிப்பிடும்போது, தென்னிந்திய அரசியல் மூத்த தலைவரும், என்னுடைய நண்பருமான கருணாநிதி என்று குறிப்பிடுவார். அவர் நன்றாக இருக்கும் போது, தான் அரசியலுக்கு வருவதை மிக பெரிய தர்ம சங்கடமாகக் கூட ரஜினி நினைத்து இருக்கலாம்.
இப்படி இருக்கும்பொழுது, ரஜினி அப்பொழுது தேர்தலில் எதிரிகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறும்பொழுது, பாமக அதிமுவுடன் கூட்டணியில் உள்ளது. அப்பொழுது வாஜ்பாய் அவர்கள் மத்தியில் மிக சிறந்த ஆட்சிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். திமுக அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. திமுக மற்றும் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யலாம் என்று நினைத்துக் கூறி இருப்பார். ஆனால் , நடந்த என்ன ?? தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பு உப்பு சப்பு இல்லாத காரணத்தைக் கூறி திமுக வாஜ்பாய் அரசில் இருந்து வெளி வருகிறது. பாமகவை தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறது. இதனை எல்லாம் ரஜினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று ஜெயலலிதாவை ஆதரித்தால், தன்னுடைய நம்பகத்தன்மை குறைந்து விடும் என்று நினைக்கிறார். இதனால் தேர்தல் நாள் அறவிக்கப்பட்ட பின்பும் அமைதி காக்கிறார்.

ஆனால் ரசிகர்கள் விடுவார்களா?? கடலூரில் பிரச்சாரம் முடிந்து வந்து கொண்டிருந்த டாக்டர்.ராமதாசை நோக்கி கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். பாமகவினர் அதே இடத்தில வண்டியை நிறுத்தி விட்டு, வண்டியில் இருந்த உருட்டுக் கட்டைகளை எடுத்து ரசிகர்களைத் தாக்குகிறார்கள். ரஜினி இடிந்து போகிறார். ரசிகர்ளை அழைத்து நடந்ததை கேட்டு அறிகிறார். என்னுடைய முடிவை ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு ஞாயிறு அன்று அறிவிப்பேன் என்று கூறுகிறார். கலைஞர் அவர்கள் மீது கொண்டு இருந்த நட்பின் காரணமாக அவருக்கு எதிராகவும் பேச முடியாமல் , ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் பேச முடியாமல், மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த ரஜினி, பேச ஆரம்பித்தார். அவர் என்ன பேசினார்?? அதற்கு காரணம் என்ன?? இறுதியில் வென்றது யார்?? நாளை இறுதி பாகத்தில் காண்போம்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...