Wednesday, March 7, 2018

ரஜினி பாமக மோதல் - வென்றது யார் ?? இறுதி பாகம்

2004 ஆம் ஆண்டு பாராளமன்ற தேர்தலில் என்னுடைய முடிவு குறித்து வரும் ஞாயிற்றுக் கிழமை அறிவிப்பேன் என்று ரஜினி கூறியது முதல், தமிழக தேர்தலில் நெருப்பு பற்றிக்கொண்டது. இதனை அவர் 4 நாட்களுக்கு முன்பே தெரிவித்து விட்டதால், அவர் ஞாயிறு அன்று என்ன கூறுவார் என்று அரசியல் கட்சிகளுக்கு ஒரே தவிப்பு. கலைஞர் அவர்களின் நட்பு காரணமாக அவருக்கு எதிராகவும் பேச முடியாமல், ஜெயலலிதாவிற்கு திடீரென்று ஆதரவு தெரிவித்தால் தன்னுடைய நம்பகத்தன்மை போய்விடும் என்கின்ற நிலையில், தன்னுடைய ரசிகர்கள் பாமகவால் தாக்கப்பட்ட வேலையில், ரஜினி என்ன முடிவு அறிவிப்பார் என்று எவராலும் யூகிக்க முடியவில்லை. முக்கியமாக, அப்பொழுது தான் எனக்கு 18 வயது நிரம்பி இருந்தது. முதல் முறையாக ஓட்டுப் போடும் தகுதியை அடைந்து இருந்தேன். ரஜினி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்கு ஒட்டுப் போடலாம் என்கின்ற முடிவில் இருந்தேன்.



அந்த நாள் வந்தது. ராகவேந்திர மண்டபம் முழுவதும் கல்யாண நாள் போல் கூட்டம். ஆனால் இந்த முறை வந்து இருந்தது, அனைவரும் பத்திரிகையாளர்கள். மின்னல் வேகத்தில் வந்த ரஜினி, தான் கொண்டு வந்து இருந்த அறிக்கையை படிக்க ஆரம்பித்தார். டாக்டர். ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் என்று கடுமையான விமர்சனத்தை வைத்தார். உங்களுடைய நல்ல நேரம், நீங்கள் என் நண்பர்கள் கூட இருக்கிறீர்கள்!! இந்த தேர்தலில், பாமக போட்டியிடும் ஆறு இடங்களிலும் என்னுடைய ஆதரவு திரு. வாஜ்பாய் அவர்களுக்கு என்று தெரிவிக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம், அவர் சென்ற முறை வாஜ்பாயை சந்தித்தபோது நதிகளை இணைக்காமல் நான் விட மாட்டேன் என்று உறுதி கூறியதாக கூறுகிறார். ( அப்பொழுதே அவர் நதிகளை இணைப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்று பாருங்கள். நிச்சயமாக நம் கட்சியின் முக்கியமான திட்டங்களில் இதுவும் இருக்கும்). ஆறு தொகுதிகளில் பாமகவை எதிர்க்கிறேன் என்று கூறிய ரஜினி, நான் எதிர்க்கிறேன் என்பதற்காக, ரசிகர்கள் பாமகவை எதிர்த்து ஓட்டு போடவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ அவர்களுக்கு ஓட்டு போடலாம் என்று கூறினார்.

அதாவது, கலைஞருக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவை ஆதரித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. ரசிகர்களையும் கை விடவில்லை. ரசிகர்களை பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று கூறியதற்கு முக்கிய காரணம், 1996 ஆம் ஆண்டு ரசிகர்கள் திமுகவின் துணையுடன் அதிமுவிற்கு எதிராக ஓட்டு கேட்கும்போது, பலரும் தாக்கப்பட்டனர். கடந்த வாரம் நடந்த ரசிகர் மன்ற சந்திப்பில் கூட, ரசிகர் ஒருவர் அப்பொழுது நடந்த கத்திக் குத்தை காம்பித்து ரஜினியை திகைக்க வைத்தார். திமுகவின் துணை இருக்கும்போதே ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இப்பொழுது திமுக, அதிமுக என்று எந்த கட்சியின் துணை இல்லாமல், பாமகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தால், நிச்சயம் வன்முறை சம்பவங்கள் நிகழும் என்று நினைக்கிறார். அதனால் தான், நான் எதிர்க்கிறேன் என்பதற்காக, நீங்கள் யாரும் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் விருப்பப்படி ஓட்டு போடலாம் என்று கூறுகிறார்.

இதனால், தன் செல்வாக்கு கொஞ்சம் குறையலாம் என்பது தலைவருக்கு தெரியும். ஆனால் , ரஜினி தன்னுடைய செல்வாக்கு , பொது அமைதி, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று வந்தால், எப்பொழுதும் பொது அமைதியை தான் தேர்ந்து எடுப்பார். அதனால் தான், பலரும் அவரை விமர்சனம் செய்யும்போது, அவர் அமைதி காக்கிறார். மேலே, குறிப்பிட்ட ஒரு நிகழ்வே போதும், ரஜினி எப்படி பட்ட அரசியல் சாணக்கியர் என்பதை தெரிந்துக் கொள்வதற்கு!!! யார் மனதும் புண்படாமல், கடினமான சமயங்களில் எப்படி ஒரு முடிவு எடுக்கிறார் என்று பாருங்கள்.

மேலும் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை அன்று தெரிவிக்கிறார். பாமக வெற்றி பெற்றால், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன் இன்னும் பாக்கி இருக்கிறது என்று அர்த்தம். இல்லையென்றால், புண்ணியத்தின் பலன் முடிந்து விட்டது என்று அர்த்தம் என்று கூறுகிறார்.
இதற்கு முன்பு வரை, ரஜினியை விமர்சித்து பேசி வந்த பாமக, ரஜினியின் இந்த அறிவிப்பு பற்றி பிரச்சாரங்களில் ஒரு எதிர்ப்பைக் கூட தெரிவிக்கவில்லை. திமுக, திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ( என்னதான் இமாலய கூட்டணி வெச்சாலும், ரஜினி அப்படினா ஒரு பயம் இருக்கத்தானே செய்யும்). திமுக தலைவர் கருணாநிதி கோவை செல்கிறார், அங்கு ஜெயா டிவி செய்தியாளர், ஒரு கேள்வி கேட்கிறார். நீங்கள் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணம், நீங்கள் எம்ஜியார் கிட்ட வாங்கின அடியா என்று?? கலைஞர், கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். இனிமேல், கோவை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறி, கோபமாக சென்று விடுகிறார்.

தேர்தல் நாள் வருகிறது. காலை எழுந்தவுடன் பேப்பரில் ஒரு அதிர்ச்சி. ரஜினியின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. படத்தின் பெயர் "ஜக்குபாய்". அந்த போஸ்டரில் எழுதப்பட்டு இருந்த வாசகம், நான் மேலே குறிப்பிட்டு உள்ள விஷயங்கள் எவ்வளவு உண்மை என்பதை உங்களுக்கு புரிய வைக்கும். அந்த போஸ்டரில் இருந்த வாசகம் " கடவுளே!! நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று !!! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் !!!! என்பது தான். இது நிச்சயமாக திமுக தலைவருக்குதான் என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும்.

கடவுள் புண்ணியத்தில் திமுக கூட்டணியில் உள்ள பாமாகவிற்கு என்னுடைய தொகுதியான அரக்கோணம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. காலையில் முதல் ஆளாக சென்று பாமகவுக்கு எதிராக, அதிமுகவிற்கு ஓட்டு செலுத்திவிட்டு வந்தேன். ஆனால், தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்கிறது. பாமக ஆறு தொகுதிகளிலும் ஜெயிக்கிறது. ரஜினி வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அறிக்கை விடுகிறார்.

அதற்கு பிறகு, சந்திரமுகி படம் மிக பெரிய வெற்றி பெறுகிறது. வீரப்பன் அந்த நேரத்தில் கொல்லப் படுகிறான். அப்பொழுது திரையுலகம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில், ரஜினி கலந்து கொள்கிறார். ஏற்கனேவே வீரப்பனை அழிக்க வேண்டும் என்று எண்ணிய அவர், செல்வி. ஜெயலலிதாவை தைரியலட்சுமி என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம், ரஜினி மற்றும் ஜெயலலிதா அவர்கள் இடையே நடந்த பனிப்போர் முடிவுக்கு வருகிறது.

இந்த நிகழ்வு மட்டும் 2004 தேர்தலுக்கு முன்பு நடந்து இருந்தால், ரஜினி அதிமுக,வாஜ்பாய் கூட்டணியை ஆதரித்து பாமகவை ஒன்றும் இல்லாமல் செய்து இருப்பார். அல்லது, திமுக கூட்டணியில் பாமக இல்லாமல் இருந்து இருந்தால், அப்பொழுதும் அந்த கட்சி காணாமல் போக வாய்ப்பு இருந்து இருக்கும். இதனைத்தான் ரஜினி, நீங்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன் மிச்சம் இருந்தால் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று கூறுகிறார். ஆனால், அந்த தேர்தலுக்கு பிறகு, பாமக கழுதை தேய்ந்து சிட்டெறும்பு ஆன கதையாக, அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக, தேர்தலை தனியாக சந்தித்த அந்த கட்சி, ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காமல் படுதோல்வி அடைகிறது. அந்த கட்சியின் கோட்டையான பெண்ணாகரத்தில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுகிறார் அன்புமணி. அவர்கள் போன ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலன் முழுவதுமாக முடிந்து விட்டது.

ரஜினி தன் எதிரி கூறுவதில் நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வார். டாக்டர்.ராமதாஸ் மட்டும் சிகரெட், மதுவை படங்களில் பயன்படுத்தாதீர்கள் என்று கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால் ரஜினி என்றோ செய்து இருப்பார். இவ்வளவு பெரிய பிரச்சனை கண்டிப்பாக வந்து இருக்காது. இருதாலும், ரஜினி அந்த கருத்தை ஏற்றுக்கொண்டார். சந்திரமுகி படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அமையவில்லை. அதனை பாராட்டி ,அப்பொழுது சுற்றுப்புற சூழல் அமைச்சராக இருந்த அன்பமணி ஒரு பாராட்டுக் கடிதம் ரஜினிக்கு எழுதினார் ( எதிரிகளும் போற்றும் குணம்!! அது தானே ரஜினி ??). அதற்கு பதில் எழுதிய ரஜினி, " நட்புக்கரம் நீட்டுபவர்களுக்கு நான் நிச்சயம் நட்புக்கரம் நீட்டுவேன்" என்று எழுதினார். அதன் பிறகு, ரஜினியின் மகள் திருமணத்திற்கு அன்புமணி வந்தது, அன்புமணி குடும்ப விழாவிற்கு ரஜினி சென்றது என்று அனைத்தும் நான் அறிந்ததே.

கடந்த வருடம் மே மாதம், ரஜினி ரசிகர் மன்ற கூட்டம் நடத்தியபோது, அன்புமணி அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவருடைய திட்டங்கள் எனக்கு பிடிக்கும் என்று கூறினார். (மற்ற அரசியல் கட்சி தலைவர்களை பற்றி குறிப்பிடும்போது திட்டங்கள் பற்றி குறிப்பிடவில்லை.) உண்மையில் அன்புமணி எடுத்து வைக்கும் திட்டங்கள் மிகவும் நல்லவை. எதார்த்தமானவை . ( மாடு மேய்க்கிற தொழிலை அரசு வேலையாக மாற்றுவேன் என்பன போன்ற முட்டாள் திட்டங்கள் எல்லாம் கிடையாது). இதனை தலைவரும் கவனித்து இருக்கிறார். அதனால்தான் அவருடைய திட்டங்களை பாராட்டுகிறார்.

இப்பொழுதும் அன்புமணி பாமகவின் ஜாதி பிம்பத்தை தூக்கி எறிந்துவிட்டு, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல் பட வேண்டிய வேலையை பார்க்கலாம். தலைவர் கட்சி ஆரம்பித்தபின் அவர்கள் ஆளும்கட்சியாக வர வாய்ப்பு இருக்குமா என்ன??

அன்பாலும், அறத்தாலும், அரசியல் நெறியினாலும் பாமகவை ரஜினி பாபா படத்தின்போதே வென்று விட்டார்.
இப்படிக்கு .
அ .அருள்செல்வன்.

ரஜினி,பாமக மோதல் - வென்றது யார்


நான் என்னுடைய பதிவுகளில், ரஜினியைத் தவிர யாரைப் பற்றி குறிப்பிடும் பொழுதும் ,திரு அல்லது அவர்கள் என்று குறிப்பிடுறேன். ஆனால் தலைவர் அவர்களை ரஜினி என்றே எழுதுகிறேன்.இது நம் தலைவருக்கு நான் செய்யும் மரியாதை குறைவு அல்ல. ரஜினி என்று எழுதும் போது வரும் மகிழ்ச்சி, வேறு எப்படி குறிப்பிட்டாலும் வராது. சுருக்கமா சொல்லனும்னா, அவர் பெயருக்குள் இருக்கும் காந்தம் தான் காரணம்.



பாபா படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு மாதம் முன்பு, பெங்களூருவில் கன்னட சூப்பர்ஸ்டார் திரு.ராஜ்குமார் அவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார். அப்பொழுது பேசும் அவர், பாபா படம் மட்டும் வெள்ளி விழா கண்டால், இது தான் என்னுடைய கடைசி படம். இதுக்குமேல படம் நடிக்க வேண்டாம் என்று நினைக்குறேன்!! நான் இப்படி சொல்றதுனால, என் ரசிகர்கள் நான் நிறைய படம் நடிக்கணும்னு நினைச்சு, இந்த படத்தை தோல்வியடைய செய்யக்கூடாது என்று கூறுகிறார். (அதனால் தான் என்னவோ, பாபா படம் தோல்வி அடைகிறது.)

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சந்தன கடத்தல் வீரப்பனை ஒரு அரக்கன் என்று கூறுகிறார். அந்த அரக்கனை சீக்கிரம் பிடிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது என்று கூறுகிறார். அந்த நாட்களில், வீரப்பனுக்கு எதிராக யாரும் அப்படி ஒரு வார்த்தையைக் கூறியது கிடையாது. அதுவும், ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்டு சிறிது காலத்தில் இதனைக் குறிப்புடுகிறார். இதனால் வீரப்பன் தன் மீதும் கோபம் கொள்வான் என்கின்ற பயம் எல்லாம் ரஜினிக்கு கிடையாது. நியாயமாக பார்த்தால், ரஜினி கூறிய அந்த வார்த்தைக்கு, தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால ,நடந்தது என்ன?

இன்று எப்படி வீரப்பன் இருந்து இருந்தால், கர்நாடகாவை மிரட்டி காவிரி நீர் வாங்கிக் கொடுத்து இருப்பார் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறார்களோ, அன்றும் அந்த கொலைகாரனை கொண்டாட, நம் நாட்டில் நிறைய பேர் இருந்தார்கள். முக்கியமாக வீரப்பனின் ஜாதியை வைத்து அரசியல் செய்ய பல பேர் காத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களில் ஒருவராக வருகிறார், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு.ராமதாஸ் அவர்கள். அப்பொழுது நடந்த பொதுக்கூட்டத்தில், ரஜினியை அவன்,இவன் என்று பேசுகிறார். இவன் யாரு, வீரப்பனை அரக்கன்னு சொல்ல ?? இவன் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தது என்ன? சிகரெட் ,மது பிடிக்க மட்டும் தானே ? என்று கூறுகிறார். (பாமகவை பற்றி பேசும்போது அவர்கள் மரம் வெட்டதான் கற்று கொடுத்தார்கள் என்று கூறுவதை போல, ரஜினி படத்தில் கூறிய நல்ல விஷயங்களை மிக வசதியாக மறந்து விட்டார்.)

அவ்வளவுதான், ரஜினி ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கு போகிறார்கள். தமிழ்நாட்டில், ரஜினியை விமர்சிக்கும் அரசியலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார் டாக்டர்.ராமதாஸ் அவர்கள். அதற்கு முன்பு, யாரும் அதுவரை ரஜினியை அப்படி ஒருமையில் பேசியது இல்லை. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் கூட, மனோராமா அவர்களை வைத்துதான் ரஜினியை கேவலமாக பேச வைத்தார். ( இதனால் மனோராமா அவர்கள், படம் கிடைக்காமல் ஒரு வருடம் கஷ்டப்படுகிறார். ரஜினி அவரை மீண்டும் தன்னுடைய அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைக்கிறார் ). எனவே, தன் தலைவரை ஒருவர் ஒருமையில் பேசியதை ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரஜினி ரசிகர்கள் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களை செய்கிறார்கள். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை !! ரசிகர்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று ரஜினி கூறுகிறார்.
பாபா படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் படத்திற்கு எதிராக பாமகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். விருதாச்சலத்தில் படத்தின் பொட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டனர். அடுத்த மூன்று மணி நேரத்தில் அந்த திரையரங்கிற்கு ஒரு பொட்டியை அனுப்பி வைத்து, அங்கு நடக்க இருந்த, மிக பெரிய வன்முறையைத் தடுத்தார். அப்பொழுதும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். " அய்யா,மருத்துவர் ராமதாஸ் அவர்களால் ஏற்படும் பிரச்னையை நான் சட்டபூர்வமாக சந்திக்கிறேன். ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும். கடவுள் சில மனிதர்களைப் படைப்பதே, நாம் அவர்களை பார்த்து எப்படி வாழக்கூடாது என்று தெரிந்து கொள்ளதான்" என்று கூறுகிறார். ரஜினியிடம் இருந்து மிக பெரிய எதிர்ப்பு வரும், இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்த்தவர்கள், ஏமாந்து போனார்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு, ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட செயல்களை செய்து விட்டு, அமைதியாகி விட்டனர்.

2002 ஆம் ஆண்டு இறுதியில், தமிழகத்தில் காவிரி விவகாரம், விஸ்வரூபம் எடுக்கிறது. வழக்கம் போல், தமிழக அரசை விட்டுவிட்டு,ரஜினி ஏன் காவிரி நீரைக் கொண்டு வரவில்லை என்று பலர் உளறிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில், நெய்வேலி சென்று போராட்டம் செய்யலாம் என்று தமிழ் திரையுலகம் முடிவு செய்கிறது. கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக் கருதி, ரஜினி அதற்கு ஒத்துழைக்கவில்லை. பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம் என்பது அவருக்கு பிடிக்காத செயல். அவ்வளவுதான், ரஜினியை அனைவரும் வசைப்பாட ஆரம்பித்தனர். கேவலப்படுத்தினர். அதிமுக, பாமக என்று பலரும் ரஜினியை தமிழர்களுக்கு விரோதிபோல சித்தரித்தனர். தமிழ்நாட்டின் பல இடங்களில் ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது. 2 நாட்கள் அனைத்தையும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறார் ரஜினி. மறுநாள் தான் புதிதாகக் கட்டி உள்ள கேளம்பாக்கம் பண்ணை இல்லத்திற்கு பத்திரிக்கையாளர்களை வர சொல்கிறார். தமிழ்நாடு பரபரப்பு அடைகிறது.

அங்கு வந்த பத்திரிகையாளர்களிடம் , " நான் முதல்ல இந்தியன், அப்புறம் தமிழன் ". இதனை நான் பலமுறை சொல்லி இருக்கின்றேன். என்னை பத்தி எதிரா பேசுறவங்களை, நான் தேர்தல் நேரத்துல பார்த்துக்கிறேன். நெய்வேலியில் போராட்டம் நடத்துகின்ற அதே நாள்ல , நான் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுகிறார். பல நடிகர்கள், நெய்வேலி போக யோசிக்கின்றனர். கலைஞர் கருணாநிதி அவர்கள், நெய்வேலி போராட்டத்தில் திமுக நடிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ரஜினி நடத்தும் போராட்டத்தில் தான் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். மறுநாள் தினமலரில் வந்த தலைப்பு செய்தி என்ன தெரியுமா?? " ரஜினியால் FUSE போகிறது நெய்வேலியின் CURRENT மறியல் "", எங்கே, ரஜினி அதே நாளில் உண்ணாவிரதம் இருந்தால், நெய்வேலியில் ஒருவர் கூட வர மாட்டார்களோ என்று பயந்த அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், ரஜினியின் போராட்டத்தை ஒரு நாள் தள்ளி வைக்க சொல்கிறார். ரஜினியும் அதற்கு சம்மதம் தருகிறார். சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம், எவ்வளவு பெரிய வெற்றி என்பதற்கு சான்று, உலகில் முதன் முறையாக நேரடியாக ஒளிப்பரப்பட்ட முழுமையான உண்னாவிரதம் அதுதான் !!!

ரஜினி அவர்கள் தேர்தல் நேரத்தில் எதிரிகளைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதால், ரசிகர்கள் 2004 ஆம் ஆண்டு நாடாளமன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில், உங்களுக்கு சில விஷயங்களைக் கூற விரும்புகின்றேன். 1990 களின் தொடக்கத்தில் வெளிவந்த ஒரு பேட்டியில், அரசியல் என்பது ஒரு சாக்கடை , இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே திருடர்கள் என்று கூறுகிறார். அப்பொழுது தமிழ்நாட்டு அரசியலில் அவருக்கு மிக பெரிய நண்பர்கள் எல்லாம் கிடையாது. அதேபோல் அவர் இருந்து இருந்தால், அவர் நிச்சயமாக எப்பொழுதோ அரசியலுக்கு வந்து இருப்பார். ஆனால் ,விதி வலியது. 1996 ஆம் ஆண்டு தேர்தலில், கலைஞர் அவர்களின் நட்பு கிடைக்கிறது. கலைஞர் அவர்கள் மீது நமக்கு தனிப்பட்ட விமர்சனம் இருந்தாலும், இது வரை தமிழகத்தில் ரஜினியை விமர்சித்து பேசாத தலைவர் அவர். சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம், ரஜினிக்கு மிக பெரிய மரியாதை கொடுத்தவர். இதனால்தான் , கலைஞரைப் பற்றி ரஜினி குறிப்பிடும்போது, தென்னிந்திய அரசியல் மூத்த தலைவரும், என்னுடைய நண்பருமான கருணாநிதி என்று குறிப்பிடுவார். அவர் நன்றாக இருக்கும் போது, தான் அரசியலுக்கு வருவதை மிக பெரிய தர்ம சங்கடமாகக் கூட ரஜினி நினைத்து இருக்கலாம்.
இப்படி இருக்கும்பொழுது, ரஜினி அப்பொழுது தேர்தலில் எதிரிகளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறும்பொழுது, பாமக அதிமுவுடன் கூட்டணியில் உள்ளது. அப்பொழுது வாஜ்பாய் அவர்கள் மத்தியில் மிக சிறந்த ஆட்சிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். திமுக அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறது. திமுக மற்றும் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யலாம் என்று நினைத்துக் கூறி இருப்பார். ஆனால் , நடந்த என்ன ?? தேர்தலுக்கு மூன்று மாதங்கள் முன்பு உப்பு சப்பு இல்லாத காரணத்தைக் கூறி திமுக வாஜ்பாய் அரசில் இருந்து வெளி வருகிறது. பாமகவை தன் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறது. இதனை எல்லாம் ரஜினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீர் என்று ஜெயலலிதாவை ஆதரித்தால், தன்னுடைய நம்பகத்தன்மை குறைந்து விடும் என்று நினைக்கிறார். இதனால் தேர்தல் நாள் அறவிக்கப்பட்ட பின்பும் அமைதி காக்கிறார்.

ஆனால் ரசிகர்கள் விடுவார்களா?? கடலூரில் பிரச்சாரம் முடிந்து வந்து கொண்டிருந்த டாக்டர்.ராமதாசை நோக்கி கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். பாமகவினர் அதே இடத்தில வண்டியை நிறுத்தி விட்டு, வண்டியில் இருந்த உருட்டுக் கட்டைகளை எடுத்து ரசிகர்களைத் தாக்குகிறார்கள். ரஜினி இடிந்து போகிறார். ரசிகர்ளை அழைத்து நடந்ததை கேட்டு அறிகிறார். என்னுடைய முடிவை ராகவேந்திரா மண்டபத்தில் ஒரு ஞாயிறு அன்று அறிவிப்பேன் என்று கூறுகிறார். கலைஞர் அவர்கள் மீது கொண்டு இருந்த நட்பின் காரணமாக அவருக்கு எதிராகவும் பேச முடியாமல் , ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் பேச முடியாமல், மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்த ரஜினி, பேச ஆரம்பித்தார். அவர் என்ன பேசினார்?? அதற்கு காரணம் என்ன?? இறுதியில் வென்றது யார்?? நாளை இறுதி பாகத்தில் காண்போம்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...