Friday, February 23, 2018

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு - எப்படி நடக்க வேண்டும் ??



நேற்று நடந்த கமலின் முதல் அரசியல் மாநாட்டில் இருந்து, நம் ரசிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? மக்களின் மனதை கவர என் எண்ணத்தில் உதித்த சில யோசனைகள் !!!
 
 


1) ரஜினி இன்னும் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி, தெளிவான திட்டங்களோடு மாநாடு நடத்த வேண்டும். ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அழுத்தத்திற்கு செவி சாய்த்து, அவசர அவசரமாக மாநாடு நடத்த வேண்டாம். நம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவு இல்லாமல் போய் விடும். கட்சியின் பெயரை அறிவிக்க தாமதப்படுத்துகிறார் என்கின்ற கெட்ட பெயரை விட, தலைவர் ஒழுங்கான திட்டங்கள் அறிவிக்க இல்லை என்கின்ற கெட்ட பெயர், மிகவும் மோசமானது. அது நம் நம்பகத்தன்மையை கடுமையாக பாதிக்கும். இதற்கு நேற்று நடந்த கமல் அவர்களின் மாநாடு ஒரு சான்று.

2) ரஜினியை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்களில், ரஜினியின் தற்போதைய புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் ( அது ஒரே புகைப்படமாக இருந்தால் மிகவும் நன்று. இதனை தலைவரே கொடுத்தால் இன்னும் நன்று ). நேற்று நடந்த கமல் மாநாட்டில், கமலின் படங்களில் இருந்து நிறைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. அது ஒரு விதமான வெறுப்பையே மக்களுக்கு உண்டாக்கும். சினிமாவிற்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் வேறு. அரசியலுக்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் வேறு, என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ( கண்டிப்பாக, ரஜினிக்கு இணையாக காந்தியையோ, காமராஜரையோ, அப்துல் கலாமையோ சித்தரிக்க வேண்டாம். அது சமூக வலைத்தளங்ககில் கண்டிப்பாக கிண்டல் செய்யப்படும். இதனை தலைவரே விரும்ப மாட்டார்.

3) போஸ்டர்களில் ரஜினியின் பெயரை குறிப்பிட்டாலே போதும். நாளைய தமிழகம், நிரந்தர முதல்வர் இப்படி எல்லாம் குறிப்பிட வேண்டாம். இது மக்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம். ( நேற்று நடந்த மாநாட்டில், 90% போஸ்டர்களில் கமலின் பெயர் இடம் பெறவில்லை. அவருடைய அடை மொழிகள் தான் இடம் பெற்று இருந்தன)

4) கட்சியின் பெயர் மற்றும் கொடி, இவை இரண்டுமே ஒரு அடையாளத்திற்காகத்தான். அதில் பல ஆராய்ச்சிகள் செய்து, மக்களுக்கு புரியாத வண்ணம் வைக்க வேண்டாம். மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். ( இதுதான் நேற்றைய மாநாட்டில் இருந்து நாம் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்)

5) கட்சியின் கொடி அல்லது மேடையில் தப்புத்தவறி கூட ஒரு இடத்தில கூட காவி நிறம் வேண்டாம். ஊடகங்கள் மற்றும் சில தற்குறிகளுக்கு காவி நிறம் என்றால் பிஜேபி மட்டும் தான் ஞாபகம் வரும். நம் மூவண்ண கொடியில் இருக்கும் காவியை கூட இன்னும் சில நாட்களில் பிஜேபியின் நிறம் என்று கூறுவார்கள். ஆகவே அவர்களுக்குத் தீனி போட வேண்டாம்.

6) மாநாடு திடலில் மட்டும் ஒரே ஒரு கட் அவுட் இருந்தால் போதும். அல்லது அதையும் இல்லாமல் செய்தால், மக்கள் மனதில் நாம் மாற்றத்திற்கான கட்சி என்பது நிச்சயம் பதியும்.

7) மாநாட்டில் ரஜினி மட்டும் பேசினால் போதும். வேறு அரசியல் தலைவர்கள் யாரும் பேச வேண்டாம். ரஜினியின் ரசிகர்கள் பல கட்சிகளில் உள்ளதால் , அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். (நேற்று நடந்த மாநாட்டில் இது கண்கூடாகத் தெரிந்தது.

8) கண்டிப்பாக ரஜினியின் கட்சியில் சினிமா நட்சத்திரங்கள் இணைவார்கள். ஆனால் ,அவர்களுக்கு முதலிலேயே பதவி கொடுத்து, மேடையில் அமரவைக்க வேண்டாம். கூத்தாடிகள் சேர்ந்து அராஜகம் செய்கிறார்கள் என்று மக்கள் பேசக்கூடும். ( மாற்றத்திற்கான கட்சி என்று கூறி, நேற்று நடந்த மாநாட்டில் சினேகன் ஒரு மணி நேரம் பேசியது, அங்கு வந்து இருந்த மக்களை முகம் சுழிக்க வைத்தது.)

9) முதல் மாநாடு சென்னையில் நடந்தால் போதும். வேறு மாவட்டத்தில் நடத்தும்போது, சில தவறுகள் நிகழலாம். சென்னை தலைவருக்கு நன்றாக தெரிந்த இடம் என்பதால், முதல் மாநாடு சென்னையில் தீவு திடல் போன்ற இடத்தில நடத்தலாம். அனைத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வருவதற்கு வசதியாக இருக்கும். ( நேற்று நிறைய நிருபர்கள், திடீரென்று ஏன் மதுரையில் நடத்துகிறீர்கள் என்பன போன்ற கேள்வியை கமலிடம் கேட்டார்கள். இது போன்ற தேவை இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் ).

10) மாநாடு நடக்கும் தேதியில், வேறு எந்த நிகழ்த்தியிலும் தலைவர் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், மாநாடு இருக்கும் பதற்றத்தில் அல்லது அவசரத்தில், சில இடங்களில் அவர் ஒழுங்காக பேச முடியாமல் போகலாம். தலைவர் நிதானமாக மாநாட்டிற்கு வந்து தெளிவான உரை தந்தால் போதும். ( நேற்று கமல் பல இடங்களில் 2 நிமிடங்கள் பேசி விட்டு சென்றது, மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியது).

11) கொள்கை பற்றி கமல் பேசியதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடு உண்டு. கொள்கை முக்கியம் அல்ல, மக்களுக்கு செய்ய போகின்ற திட்டம்தான் முக்கியம் ( ஏற்கனேவே ரஜினி சொன்னது போல். நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நினைப்போம், நல்லதே நடுக்கும். இதுவே கொள்கையாக இருந்தால் போதுமானது).

12) தலைவர் எதையும் நாம் புதிதாக செய்வோம் என்று கூற வேண்டாம். அதேபோல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகள் வேண்டவே வேண்டாம். இதனை வைத்து பின்னாளில் கேலி பேச்சுகள் எழும். எதையும் புதிதாக தொடங்க தமிழகம் ஒன்றும் அத்தனை பின் தங்கிய மாநிலம் அல்ல. ஏற்கனேவே இலவச கல்வி இருக்கிறது, இலவச மருத்துவம் இருக்கிறது ( நான் பார்த்த வரை, தமிழ்நாட்டில் ஆயிர கணக்கில் ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்கின்றன ). தலைவர் இவற்றை நெறிமுறை படுத்துவேன் என்று கூறினாலே போதும். உதாரணத்திற்கு, தனியார் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் சிகிச்சையை விட, அரசு மருத்துவமனைகளில் நன்றாக சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் இருந்தால் போதும். நாம் சிஸ்டத்தை சரி செய்யத்தான் வருகிறோமே தவிர, புதிய சிஸ்டத்தை உருவாக்க வரவில்லை. அது உடனடியாக முடியாத காரியம் கூட!!

13) அதேபோல், ஊழலை முழுவதுமாக ஒழிப்பேன் என்று கூறுவதை விட, எப்படி ஒழிப்பேன் என்று ஏதாவது திட்டத்தோடு கூறினால், மக்களுக்கு இன்னும் நம்பகத்தன்மை வரும். உதாரணத்திற்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து, அவர்கள் மூலம் ஒப்புதல் வழங்க வேண்டும். எந்த அமைச்சர்களும், MLAக்களும் திட்டத்தை உருவாக்க தான் முடியுமே தவிர, அதற்கு நிதியை ஒதுக்க, முதல்வர் தலைமையில் நேரடியாக இயங்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் அமைச்சர்கள் மற்றும் MLAக்கள் செய்யும் ஊழல் மிக பெரிய அளவில் தடுக்கப்படலாம்.

இவை எல்லாம், நம் மனதில் தோன்றிய யோசனைகள். ரசிகர்கள் மனதில் தோன்றும் யோசனைகளை கமன்ட் செய்யலாம். கண்டிப்பாக, தலைவர் ,இதை விட சிறப்பான ஒரு கட்டமைப்போடுதான் வருவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...