Saturday, February 24, 2018

ரஜினிக்கு புகழ் முக்கியமா???


நீட் போராட்டத்தில் மாணவி அனிதா உயிர் இழக்கிறார். அவர் உயிர் இழந்தவுடன் அவரை போய் பல அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பார்க்கின்றனர். ஒரு அரசியல் கட்சி இன்னும் ஒரு படி மேலே போய், அந்த மாணவியின் படத்தை வைத்து, உறுப்பினர் சேர்க்கை செய்கின்றனர். ரஜினியும் நினைத்து இருந்தால், அந்த பெண்ணின் பிணத்தை வைத்து, இவன் நல்லவன் அந்த பெண்ணை வந்து பார்த்தான் என்று இன்னும் தன்னுடைய புகழை கூட்டி இருக்கலாம். ஆனால் அவர் மீது அத்தனை விமர்சனங்கள் வந்த போதும் அதனைப் பற்றி பேசவில்லை.



அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில், மாணவர்கள் ஈடுபடும் போது, இவரும் அங்கு சென்று சில நடிகர்கள் போல தன்னுடைய புகழை கூட்டி இருக்கலாம். ஆனால் செல்லவில்லை. தன் மீது விமர்சனம் வரும் என்று தெரிந்தும் கூட, போராட்டத்தை நிறுத்தி அனைவரும் அமைதியாக வீடு திரும்ப வேண்டும் என்று மட்டும் அறிக்கை விட்டார்.

இப்படி பல நேரங்களில், மற்றவர்கள் பிணத்தை வைத்தோ, சிலர் நடத்தும் போராட்டங்களில் தலையை காட்டியோ, ரஜினி தன்னுடைய புகழை மேலும் கூட்டிக் கொண்டு இருக்கலாம். மக்களுக்கு தேவை என்ன?? இவர் வந்தாரா? அவர் வந்தாரா? என்பது மட்டும் தானே?? போராட்டம் வென்றதா?? என்பது எல்லாம் அவர்களுக்கு முக்கியம் அல்ல. ஆனால் ரஜினி ஏன் அவ்வாறு செய்யவில்லை.

ரஜினியை நன்கு அறிந்தவர்களுக்கு தெரிந்த பதில் தான். அவர் தன்னுடைய புகழ் அல்லது பொது அமைதி என்று வந்தால், அவர் தேர்ந்து எடுப்பது என்றுமே பொது அமைதி தான். நாம் இப்படி செய்தால் நம்முடைய புகழ் குறைந்தாலும் பரவாயில்லை, ஆனால் எரியுற கொள்ளியில் எண்ணெய் ஊற்றக்கூடாது, அதனால் பொது அமைதிக்கு குந்தகம் வரக்கூடாது என்ற எண்ணம்தான்.

இப்பொழுது ரஜினி இது வரை குரல் கொடுத்த நேரத்தையும், குரல் கொடுக்காமல் அமைதி காத்த நேரத்தையும் நினைத்து பாருங்கள். நான் மேலே கூறியது, எவ்வளவு பெரிய உண்மை என்று தெரியும்.
கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வந்தால், பந்த், மறியல் போன்ற போரட்டங்களில் தன்னுடைய கட்சியினரை செய்ய சொல்லி வற்புறுத்த மாட்டார். அவருடைய அறவழி போராட்டம் உண்ணாவிரதமாக மட்டும் தான் இருக்கும் !!

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

ரஜினியும், விடுதலைப் புலிகளும்!!!


2008 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் இறுதிக்கட்ட போர் உச்சக்கட்டத்தில் இருந்தது!!! அந்த நேரத்தில் நம் நடிகர் சங்கம் மற்றும் இயக்குனர் சங்கம் ஒரு போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள். ஏற்கனேவே குசேலன் பிரச்னையில் ரஜினியின் மீது தமிழக மக்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு இருந்த பாரதிராஜா போன்றவர்கள், இந்த போராட்டத்தின் மூலம் ரஜினியின் புகழை மேலும் சரிய வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள். இவர்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு போராட்டம் எல்லாம் இரண்டாவது நோக்கம் தான். ரஜினியின் புகழை சரிய வைப்பதே இவர்களுது முதல் நோக்கம். இதனால் தான் தமிழர் சார்பாக இவர்கள் எந்த போராட்டம் நடத்தினாலும், ரஜினியை மேடையில் வைத்து கேவலப்படுத்த காரணம்.



இயக்குனர் சங்கம் ராமேஸ்வரத்தில் போய் போராட்டம் பண்ணலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். ஏற்கனேவே காவிரி பிரச்சனையில் நெய்வேலியில் போய் பல்ப் வாங்கியதை நினைத்துப் பார்த்த நடிகர் சங்கம், எப்படியும் ரஜினி ராமேஸ்வரத்திற்கு போராட்டத்திற்கு வர மாட்டார், இங்கயே தனியாக உண்ணாவிரதம் இருந்து பெயர் சம்பாதித்து விடுவாரோ!! என்று அஞ்சுகிறார்கள். உடனே இயக்குனர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இங்கேயே சென்னையில் தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று அப்போதைய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தெரிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. அப்பொழுது நடந்த போராட்டத்தில் உணர்ச்சி பொங்க அனைவரும் பேசுகிறார்கள்.தமிழ் பெருந்தகை(!!!) இயக்குனர் சேரன், அப்பொழுது ரஜினியைப் பார்த்து , ராமேஸ்வரத்தில் ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள் ?? இழவு வீட்டில்தானே அழ முடியும் !! சென்னையிலா அழ முடியும் என்றுகேட்கிறார். இழவு வீடு இராமேஸ்வரம் அல்ல. இலங்கை என்று அவருக்கு தெரியவில்லை. அல்லது அங்கு செல்ல தைரியம் இல்லை. அந்த போராட்டத்தில் தான் ஒரு விரும்பத் தகாத சம்பவமும் நடக்கிறது. சீமான் மற்றும் அமீர் தமிழக அரசு மற்றும் இந்திய அரசை எதிர்த்து பேசுகிறாரகள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சீமானை கைது செய்ய முடியாமல் தமிழ்நாடு முழுக்க காவல்துறை தேடுகிறது. அப்பொழுது கிடைத்த விளம்பரத்தை பயன் படுத்தி சீமான் ஒரு கட்சியைத் தொடங்கி விட்டார்.

மறு நாள், சென்னையில் உண்ணாவிரதம் 9 மணிக்கு தொடங்கி விட்டது. பத்து மணி ஆகியும் ரஜினி வரவில்லை. அனைவரும் அவர் வருவாரா?? வர மாட்டாரா? என்று எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர். அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கும்போது ரஜினி எப்படி வராமல் இருப்பார்?? சரியாக பத்து மணிக்கு உள்ளே நுழைகிறார். அன்று அவர் அங்கு பேசிய பேச்சு, அனைவரையும் அதிர வைத்தது. அவர் பேசியதில் முக்கியமானது இது தான் .

"30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...? ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...?’"

பேசி முடித்துவிட்டு, இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். என்னுடைய சார்பாக 10 லட்சம் தருகிறேன் என்று கூறி சரத்குமாரிடம் அதற்கான காசோலையைக் கொடுத்தார். அப்பொழுது ரஜினிக்கு சமமாக 10 லட்சம் தமிழ்நாட்டில் கொடுத்தது, அப்போதைய முதல்வராக இருந்த திரு.கருணாநிதி மட்டும் தான். மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டதாக கூறிய சத்யராஜ், 2 லட்சத்திற்க்கான காசோலையைக் கொடுத்தார். கமல் ஐந்து லட்சத்திற்க்கான காசோலைக் கொடுத்தார். ஆனால் அந்த காசோலை திரும்பி வந்து விட்டதாக நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமார் தெரிவித்தார். இதற்கு, இதுநாள் வரை கமல் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

மறுநாள் விடுதலைபுலிகள் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது. பிரபாகரனுடன் ஒரு மணி நேரம் பேசியதாக இப்பொழுது சொல்லிக்கொள்கிறாரே சீமான், அவரைப்பற்றி ஒரு வார்த்தை அதில் இல்லை. ராமேஸ்வரத்தில் பேசிய இயக்குனர்கள் பற்றி ஒரு வார்த்தை இல்லை. புரட்சி தமிழன், மஞ்சை தமிழன் மற்றும் யார் பேசிய பேச்சை பற்றியும் அந்த அறிக்கையில் இல்லை. ரஜினி பேசிய பேச்சை மட்டும் பாராட்டிய அவர்கள், எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை ரஜினிகாந்த் கூறி இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினர் (இணைப்பு கீழே உள்ளது). போர் உச்சத்தில் இருந்த போதும், விடுதலை புலிகள் தமிழராக மதித்தது சுயநலம் இல்லாத ரஜினியை மட்டும் தான் என்பதை இப்பொழுது இலங்கை தமிழர்களுக்காக போராடும் போலி அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

Friday, February 23, 2018

ரஜினியின் முதல் அரசியல் மாநாடு - எப்படி நடக்க வேண்டும் ??



நேற்று நடந்த கமலின் முதல் அரசியல் மாநாட்டில் இருந்து, நம் ரசிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? மக்களின் மனதை கவர என் எண்ணத்தில் உதித்த சில யோசனைகள் !!!
 
 


1) ரஜினி இன்னும் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி, தெளிவான திட்டங்களோடு மாநாடு நடத்த வேண்டும். ரசிகர்கள் மற்றும் மீடியாக்களின் அழுத்தத்திற்கு செவி சாய்த்து, அவசர அவசரமாக மாநாடு நடத்த வேண்டாம். நம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவு இல்லாமல் போய் விடும். கட்சியின் பெயரை அறிவிக்க தாமதப்படுத்துகிறார் என்கின்ற கெட்ட பெயரை விட, தலைவர் ஒழுங்கான திட்டங்கள் அறிவிக்க இல்லை என்கின்ற கெட்ட பெயர், மிகவும் மோசமானது. அது நம் நம்பகத்தன்மையை கடுமையாக பாதிக்கும். இதற்கு நேற்று நடந்த கமல் அவர்களின் மாநாடு ஒரு சான்று.

2) ரஜினியை வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்களில், ரஜினியின் தற்போதைய புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் ( அது ஒரே புகைப்படமாக இருந்தால் மிகவும் நன்று. இதனை தலைவரே கொடுத்தால் இன்னும் நன்று ). நேற்று நடந்த கமல் மாநாட்டில், கமலின் படங்களில் இருந்து நிறைய புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. அது ஒரு விதமான வெறுப்பையே மக்களுக்கு உண்டாக்கும். சினிமாவிற்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் வேறு. அரசியலுக்கு ஒட்டப்படும் போஸ்டர்கள் வேறு, என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ( கண்டிப்பாக, ரஜினிக்கு இணையாக காந்தியையோ, காமராஜரையோ, அப்துல் கலாமையோ சித்தரிக்க வேண்டாம். அது சமூக வலைத்தளங்ககில் கண்டிப்பாக கிண்டல் செய்யப்படும். இதனை தலைவரே விரும்ப மாட்டார்.

3) போஸ்டர்களில் ரஜினியின் பெயரை குறிப்பிட்டாலே போதும். நாளைய தமிழகம், நிரந்தர முதல்வர் இப்படி எல்லாம் குறிப்பிட வேண்டாம். இது மக்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம். ( நேற்று நடந்த மாநாட்டில், 90% போஸ்டர்களில் கமலின் பெயர் இடம் பெறவில்லை. அவருடைய அடை மொழிகள் தான் இடம் பெற்று இருந்தன)

4) கட்சியின் பெயர் மற்றும் கொடி, இவை இரண்டுமே ஒரு அடையாளத்திற்காகத்தான். அதில் பல ஆராய்ச்சிகள் செய்து, மக்களுக்கு புரியாத வண்ணம் வைக்க வேண்டாம். மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். ( இதுதான் நேற்றைய மாநாட்டில் இருந்து நாம் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்)

5) கட்சியின் கொடி அல்லது மேடையில் தப்புத்தவறி கூட ஒரு இடத்தில கூட காவி நிறம் வேண்டாம். ஊடகங்கள் மற்றும் சில தற்குறிகளுக்கு காவி நிறம் என்றால் பிஜேபி மட்டும் தான் ஞாபகம் வரும். நம் மூவண்ண கொடியில் இருக்கும் காவியை கூட இன்னும் சில நாட்களில் பிஜேபியின் நிறம் என்று கூறுவார்கள். ஆகவே அவர்களுக்குத் தீனி போட வேண்டாம்.

6) மாநாடு திடலில் மட்டும் ஒரே ஒரு கட் அவுட் இருந்தால் போதும். அல்லது அதையும் இல்லாமல் செய்தால், மக்கள் மனதில் நாம் மாற்றத்திற்கான கட்சி என்பது நிச்சயம் பதியும்.

7) மாநாட்டில் ரஜினி மட்டும் பேசினால் போதும். வேறு அரசியல் தலைவர்கள் யாரும் பேச வேண்டாம். ரஜினியின் ரசிகர்கள் பல கட்சிகளில் உள்ளதால் , அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். (நேற்று நடந்த மாநாட்டில் இது கண்கூடாகத் தெரிந்தது.

8) கண்டிப்பாக ரஜினியின் கட்சியில் சினிமா நட்சத்திரங்கள் இணைவார்கள். ஆனால் ,அவர்களுக்கு முதலிலேயே பதவி கொடுத்து, மேடையில் அமரவைக்க வேண்டாம். கூத்தாடிகள் சேர்ந்து அராஜகம் செய்கிறார்கள் என்று மக்கள் பேசக்கூடும். ( மாற்றத்திற்கான கட்சி என்று கூறி, நேற்று நடந்த மாநாட்டில் சினேகன் ஒரு மணி நேரம் பேசியது, அங்கு வந்து இருந்த மக்களை முகம் சுழிக்க வைத்தது.)

9) முதல் மாநாடு சென்னையில் நடந்தால் போதும். வேறு மாவட்டத்தில் நடத்தும்போது, சில தவறுகள் நிகழலாம். சென்னை தலைவருக்கு நன்றாக தெரிந்த இடம் என்பதால், முதல் மாநாடு சென்னையில் தீவு திடல் போன்ற இடத்தில நடத்தலாம். அனைத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வருவதற்கு வசதியாக இருக்கும். ( நேற்று நிறைய நிருபர்கள், திடீரென்று ஏன் மதுரையில் நடத்துகிறீர்கள் என்பன போன்ற கேள்வியை கமலிடம் கேட்டார்கள். இது போன்ற தேவை இல்லாத கேள்விகளை தவிர்க்கலாம் ).

10) மாநாடு நடக்கும் தேதியில், வேறு எந்த நிகழ்த்தியிலும் தலைவர் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். ஏனென்றால், மாநாடு இருக்கும் பதற்றத்தில் அல்லது அவசரத்தில், சில இடங்களில் அவர் ஒழுங்காக பேச முடியாமல் போகலாம். தலைவர் நிதானமாக மாநாட்டிற்கு வந்து தெளிவான உரை தந்தால் போதும். ( நேற்று கமல் பல இடங்களில் 2 நிமிடங்கள் பேசி விட்டு சென்றது, மிகுந்த விமர்சனத்தை உண்டாக்கியது).

11) கொள்கை பற்றி கமல் பேசியதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடு உண்டு. கொள்கை முக்கியம் அல்ல, மக்களுக்கு செய்ய போகின்ற திட்டம்தான் முக்கியம் ( ஏற்கனேவே ரஜினி சொன்னது போல். நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நினைப்போம், நல்லதே நடுக்கும். இதுவே கொள்கையாக இருந்தால் போதுமானது).

12) தலைவர் எதையும் நாம் புதிதாக செய்வோம் என்று கூற வேண்டாம். அதேபோல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத வாக்குறுதிகள் வேண்டவே வேண்டாம். இதனை வைத்து பின்னாளில் கேலி பேச்சுகள் எழும். எதையும் புதிதாக தொடங்க தமிழகம் ஒன்றும் அத்தனை பின் தங்கிய மாநிலம் அல்ல. ஏற்கனேவே இலவச கல்வி இருக்கிறது, இலவச மருத்துவம் இருக்கிறது ( நான் பார்த்த வரை, தமிழ்நாட்டில் ஆயிர கணக்கில் ஆரம்ப சுகாதார மையங்கள் இருக்கின்றன ). தலைவர் இவற்றை நெறிமுறை படுத்துவேன் என்று கூறினாலே போதும். உதாரணத்திற்கு, தனியார் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் சிகிச்சையை விட, அரசு மருத்துவமனைகளில் நன்றாக சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் இருந்தால் போதும். நாம் சிஸ்டத்தை சரி செய்யத்தான் வருகிறோமே தவிர, புதிய சிஸ்டத்தை உருவாக்க வரவில்லை. அது உடனடியாக முடியாத காரியம் கூட!!

13) அதேபோல், ஊழலை முழுவதுமாக ஒழிப்பேன் என்று கூறுவதை விட, எப்படி ஒழிப்பேன் என்று ஏதாவது திட்டத்தோடு கூறினால், மக்களுக்கு இன்னும் நம்பகத்தன்மை வரும். உதாரணத்திற்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து, அவர்கள் மூலம் ஒப்புதல் வழங்க வேண்டும். எந்த அமைச்சர்களும், MLAக்களும் திட்டத்தை உருவாக்க தான் முடியுமே தவிர, அதற்கு நிதியை ஒதுக்க, முதல்வர் தலைமையில் நேரடியாக இயங்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இதன்மூலம் அமைச்சர்கள் மற்றும் MLAக்கள் செய்யும் ஊழல் மிக பெரிய அளவில் தடுக்கப்படலாம்.

இவை எல்லாம், நம் மனதில் தோன்றிய யோசனைகள். ரசிகர்கள் மனதில் தோன்றும் யோசனைகளை கமன்ட் செய்யலாம். கண்டிப்பாக, தலைவர் ,இதை விட சிறப்பான ஒரு கட்டமைப்போடுதான் வருவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

Wednesday, February 21, 2018

லதா ரஜினிகாந்த் மீது 8.5 கோடி கடன் பாக்கி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே ? இது பற்றி ரசிகனாக உங்கள் கருத்து என்ன?

2002 ஆம் ஆண்டு பாபா படம் தோல்வி அடைந்த பொழுது, விநியோகஸ்தர்கள் தன்னால் பாதிக்கப்பட கூடாது என்று 20 கோடி ருபாய் அளவிற்கு அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார். ( அதாவது 15 வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட இருபது கோடி). அப்பொழுது அவருக்கு பிற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தால், வியாபாரம் செய்ய முடியாது. வியாபாரத்தில் லாபம், நஷ்டம் என்பது இயல்புதான் என்று கருத்து தெரிவித்தனர். கமல் ஒரு படி மேலேபோய், ரஜினி செய்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதனால், படம் தோல்வி அடைந்தால், நாம் வாழ முடியாது என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் ரஜினி, என்னால் சினிமாவில் வாழ்ந்தவர்கள்தான் இருக்க வேண்டுமே தவிர, நஷ்டம் அடைந்தவர்கள் இருக்க கூடாது என்று அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுத்தார். ஆகா! இவர்தான் மகான் என்று அனைத்து விநியோகிஸ்தர்களும் பணத்தை வாங்கி கொண்டு சென்றனர். இதற்கு முன்பு, வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த வரலாறு இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது உண்டா?? அப்பேற்பட்ட, மனசிற்கு சொந்தகாரர் தான் ரஜினி. ரஜினி தான் பாபா படத்திற்கு தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.

2008 ஆம் ஆண்டு, ரஜினியின் குருவான பாலச்சந்தர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் குசேலன். இந்த படமும் தோல்வி அடைந்தது. உடனே விநியோகிஸ்தர்கள் ரஜினி நஷ்டஈடு தரவேண்டும் என்று கிளம்பி விட்டனர். பாபா படத்தில் ரஜினி தயாரிப்பாளர். அவர் அதற்கு மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு கொடுத்தார். இதில் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே. அதுவும் பசுபதி தான் இந்த படத்தின் முக்கிய கதாநாயகன். அப்படி இருக்கையில், நீங்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிவிட்டு, ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது, எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஆனால் ரஜினி மாமனிதர். மீண்டும் தனது கொடை பண்பை நிரூபித்தார். குசேலன் படத்தின் தமிழ் பதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்டஈடாக கொடுத்து உதவினார்.




2014 ஆம் ஆண்டு, லிங்கா படம் தோல்வியுற்ற பொழுது, (பல விநியோகிஸ்தர்கள் உண்மையான வசூலை மறைத்தனர்). விநியோகிஸ்தர் சிங்கார வேலன் என்பவர் ரஜினி படத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறினார். பாபா ரஜினியின் தயாரிப்பு, குசேலன் ரஜினியின் குருவான பாலச்சந்தர் தயாரிப்பு. அதற்கு ரஜினி நஷ்ட நீடு கொடுத்ததில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த படத்திற்கு ராக்லைன் வெங்கடேஷ் என்பவர் தான் தயாரிப்பாளர். இந்த படத்திற்கு ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?? ரஜினி அமைதி காத்ததால், ரஜினியின் வீடு முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தினார். அந்த உண்ணாவிரதத்திற்கு வந்து இருந்த சிறப்பு விருந்தினர் பெயரைக் கூறினாலே உங்களுக்கு அதன் உண்மைத்தன்மை தெரிந்துவிடும். அந்த நபர், வேறு யாரும் இல்லை. நமது அண்ணன் சீமான் தான். லிங்கா படத்திற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ?? பொறுத்து பார்த்த ரஜினி, சிங்கார வேலன் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கீழ்த்தரமாக சென்றதால், அவரை அழைத்து நஷ்டஈடு கொடுத்தார். வெளியே வந்த சிங்கார வேலன், ரஜினியை புகழ்ந்து விட்டு சென்றார். ஒரு வாரம் சென்று இருக்கும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, நஷ்டஈடு பத்தவில்லை. இன்னும் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் மத்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு நஷ்டஈடு கொடுக்காமல், சிங்காரவேலனே மொத்தத்தையும் எடுத்து கொண்டதாக புகார் கூறுகின்றனர். இதற்கு மேல், ரஜினி இவர்களுக்கு ஒரு பதில் கூட கூறவில்லை. அமைதி காத்தார்.

இப்படி தான் நடித்த படங்களுக்கும், தான் தயாரித்த படங்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்த இவர், (உலகத்தில் யாருமே செய்யாத செயல் இது!! திரைத்துறையில் யாராவது ஒருவர் நஷ்டத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம் ?) கோச்சடையான் பட விவகாரத்ததிலா ஏமாற்றி விடுவார்?? அதுவும் 15 ஆண்டுக்களுக்கு முன்பே பாபாவின் நஷ்டத்திற்காக 20 கோடி ருபாய் அளவிற்கு கொடுத்தவர், இந்த 8.5 கோடியை ஏமாற்றி விடுவாரா? கண்டிப்பாக ஏதோ சட்ட சிக்கல் இருக்கிறது. அதற்காக தான் வழக்கு நீதிமன்றம் சென்று இருக்கிறது. இல்லையென்றால், இதனை எப்பொழுதோ தீர்த்து வைத்து இருப்பார். கண்டிப்பாக, சட்டத்தின் படி இந்த பிரச்சனையை எதிர் கொள்வார்.

நம் மக்களுக்கு மறதி ஒரு தேசிய வியாதி என்பதால், அவர்களுக்கு அடிக்கடி ரஜினி செய்த நல்லவற்றை நினைவு படுத்த வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

(பி.கு ) நான் ரஜினி அவர்களைப் பற்றி பல பதிவுகளை எழுதி வருகிறேன். இது பதவியை எதிர்பார்த்தோ அல்லது வேறு எதற்காகவும் அல்ல. ரஜினிக்காக உயிரை கொடுக்க கூடிய தொண்டர்கள் அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நான் என்னுடைய பதிவின் இறுதியில் என் பெயரை குறிப்பிடுவேன். நண்பர்கள் இந்த பதிவை ஷேர் செய்யும்பொழுது,என் பெயருடன் சேர்த்து ஷேர் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், இது யாருக்காது சென்று, அது ரஜினி அவர்களுக்கு சென்று, அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டிய என் நீண்டநாள் விருப்பம் நிறைவேறாத என்ற பேராசைதான்.(நான் இதுவரை ரஜினியை தூரத்தில் நின்று கூட பார்த்தது கிடையாது). ஆனால் பல நண்பர்கள் என் பெயரை நீக்கிவிட்டு, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எழுதியது போல் ஷேர் செய்கிறார்கள். எனக்கு அதனால் வருத்தம் இல்லை. அவர்களும் ரஜினியனைப் பற்றிய நல்கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற ஆவலில் தான் செய்கிறார்கள். இருந்தாலும் என்னுடைய வேண்டுகோளாக இதனை வைக்கிறேன். நன்றி !!

Tuesday, February 20, 2018

வீரத்தில் மன்னன் நீ - ரஜினி

ரஜினி அரசியல்வாதிகளை எதிர்த்து, ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு பேசியது கிடையாது, அவர் ஒரு கோழை என்று சில தற்குறிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இது எனக்கு தெரிந்த வரை மட்டுமே !! நான் எதையாவது பதிவு செய்யாமல் விட்டு இருந்தால் நண்பர்கள் கமண்ட் செய்யலாம்.



1) இதற்குமேல் கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால், என்னுடைய ரசிகர்களை அங்கு கூட்டி வந்து போராட்டம் செய்வேன் - 1992 காவிரி பிரச்சனையின் போது

2) தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது ( செல்வி.ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, அதிமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு - 1995 மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வெடித்தபோது )

3) திரைப்பட நகருக்கு உங்களுடைய பெயர் வைத்தது மிக பெரிய தவறு. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இருக்க வேண்டும்( 1995 ஆம் ஆண்டு , சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில், செல்வி.ஜெயலலிதாவை மேடையில் இருக்கும் பொழுது கூறியது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அது எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என்று மாற்றப்பட்டது.

4) மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது

5) டாக்டர்.ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் - 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது.

6) "விஜயகாந்த் கலக்கி இருக்கீங்க . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" ( 2006 - சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் கூறியது. பல நடிகர்கள் விஜயகாந்தை போய் பார்த்து வாழ்த்து தெரிவித்தது, அவர் 2011 இல் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது)

7) கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். (அழகிரி, ஸ்டாலின் இடையே நடக்கும் பனிப்போரை, அவர்கள் ஒத்துமொத்த குடும்பத்தையும் வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டு அழகிரி அவர்கள் மகன் திருமணத்தின்போது கூறியது)

8) 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், அஜித் குமார் பேசிய சில தைரியமான கருத்துகளுக்கு தலைவர் அவர்கள் முதல்வர் அருகிலேயே எழுந்து கை தட்டினார் . அது மட்டும் இல்லாமல் அஜித்தின் பேச்சிற்கு ஆதரவு கூறினார். அதே நிகழ்ச்சியில் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிராக பேசினார். அதுமட்டுமல்லாமல், "அரசு ஒதுக்கிய இந்த நிலம் ஏழை தொழிலளர்களுக்கு போய் சேர வேண்டும் . இதை யாரும் ஏமாற்ற கூடாது. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்". என்று அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை முதல்வர் கலைஞரை வைத்துக் கொண்டு தைரியமாக பேசினார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியோ அஜித் பேசியதை மட்டும் இல்லாமல் , ரஜினி மேற்கொண்டு கூறிய வார்த்தைகளையும் எடிட் செய்து ஒளிபரப்பியது .

9) 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...? ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...?’ என்று கேள்வி கேட்டதாக தெரிய வில்லை )

10) வெளிய மக்கள் மழை வெள்ளத்தினால் அவஸ்தை படுறாங்க !!! இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க !!! ( 2010 ஆம் ஆண்டு இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் அப்பொழுதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு )

11) பொன்னர் ஷங்கர் இசைவெளியீட்டு விழாவில் முதல் நாள் கலைஞருடன் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் 2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டார் ரஜினி . ( அவர் யாரிடம் வேண்டுமானால் நெருக்கமாக இருப்பார். ஆனால் அதற்காக அவர்களுக்குதான் அவர் ஆதரவு தருவார் என்று நீங்கள் நினைப்பதில் அர்த்தமில்லை).

12) 2013 ஆம் ஆண்டு, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா அவர்களை வைத்துக்கொண்டு கலைஞரை புகழ்ந்தார். அவர் பேசியது , " இந்த நேரத்துல நலிந்த கலைஞர்களுக்கு இடஒதுக்கீடு செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13) 2008 ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆதரித்து பேசும் பொழுது, கர்நாடாகாவில் பிரச்னையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டும் என்று கூறினார்( பிறகு இதற்கு வருத்தம் தெரிவித்தார்). கர்நாடகாவில் இருந்து மும்பை சென்ற ஒருவர், அநாகரிகமாக பேசுவதாக கண்டித்தார். ( அப்பொழுது மும்பையின் கவர்னராக இருந்த S.M. கிருஷ்ணாவை குறிப்பிடுகிறார்)

இதற்கு முன்பு இந்திய அளவில், சினிமா துறையில் உள்ள ஒருவர், இப்படி முதலமைச்சர்களுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் என்று உங்களால் கூற முடியுமா?? அதுதான் ரஜினி. ஆதலால், அவர் இதற்கு முன்பு யாரையும் எதிர்த்து பேசியது இல்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, உங்களது பொழைப்பை பார்த்தால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

பச்சைத் தமிழனைக் கண்டு பிடிப்பது எப்படி - செய்முறை

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் கறுப்பர் மற்றும் வெள்ளையர் இடையே பல ஆண்டுகளாக பிரிவினை இருந்து வருகிறது. அங்கே, கறுப்பர் மற்றும் வெள்ளையர் ஆகியோரை கண்டுபிடிப்பது மிக சுலபம். பார்த்தவுடன் சொல்லி விடலாம். ஆனால் ஒருவன் உண்மையான தமிழனா?? என்று பார்த்தவுடன் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், வடகிழக்கு மாநிலம் தவிர, அனைத்து இந்திய மாநில மக்களும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். அதனால் ஒருவரை பார்த்தவுடன் தமிழன் என்று கண்டு பிடிக்க முடியாது.



ஒருவர் பிறந்த ஊரை வைத்து அவர் தமிழரா?? என்று பார்த்தோமே ஆனால், பிரபாகரன் அவர்களையே தமிழராக கருத முடியாது!! அதுவும் இல்லாமல் தமிழ்நாடு என்பது உதயமானதே அறுபது ஆண்டுகள் முன்பு தான். அப்பொழுது 60 வருடங்கள் முன்பு பிறந்தவர்கள் யாரும் தமிழர்கள் இல்லையா?
ஒருவர் பேசுவதை வைத்து அவர் தமிழர் என்று முடிவு செய்து விடலாமா? அது எப்படி?? வியாபாரம் செய்ய உதவும் மொழியை யார் வேண்டுமாலும் கற்றுக் கொள்ளலாம். அதனால் ஒருவர் தமிழே பேசினாலும், நீங்கள் தமிழர் என்று கூற முடியாது.

நேரில் பார்த்தும் கண்டு பிடிக்க முடியாது!! பிறந்த இடத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது!! பேசும் தமிழை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது!!
அப்பொழுது பிரிவினை பேசும் அரசியல்வாதிகள், ஒருவன் தமிழன் என்று எதனை வைத்துக் கண்டு பிடிக்கிறார்கள். வேறு எதை வைத்து ஜாதியை வைத்துதான்!! அதனை வைத்துதான் அவன் தமிழன் என்று கண்டுபிடிக்கும் வேலையை தும்பிகள் செய்து வருகிறார்கள்.

ஒருவன் ஒரு மதத்தை விரும்பி ஏற்று கொண்டால், அவனது மதத்தை மாற்றி விடுவீர்கள்!!! ஆனால் ஒரு மனிதன் தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு, நான் பச்சை தமிழன் என்று கூறினால் அவரை தமிழராக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்?? என்னங்க சார் உங்க சட்டம்??

தமிழ் போராளீஸ் !!

ஒவ்வொரு முறை காவிரி நீர் தொடர்பாக தீர்ப்பு வரும்பொழுதும், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும். ஆனால் கர்நாடகாவில் பயங்கரமான வன்முறை வெடிக்கும். தமிழர்கள் தாக்கப்படுவார்கள். தமிழக பேருந்துகள் கொளுத்தப்படும். இதற்கு யார் காரணம் ?? கன்னட மக்களா?? கன்னடத்தில் உள்ள பிரதான கட்சிகளா ( பிஜேபி மற்றும் காங்கிரஸ் ) ??. இவர்கள் இருவருமே கிடையாது. அங்கு கன்னட மொழியை வைத்து பிரிவினையைத் தூண்டும் வாட்டாள் நாகராஜ் போன்ற ஆட்களும், அவர்கள் நடத்தும் கட்சிகளும்தான். இவர்களுக்கு உண்மையில் பார்த்தால், அவர்கள் தாய் மொழி மீது எல்லாம் அக்கறை கிடையாது. மொழியின் காரணமாக மக்களை பதற்றத்தில் வைத்து, பணம்,புகழ் சம்பாதிப்பது மட்டும்தான்.



இதே கதைதான் மராட்டியத்தில், ராஜ் தாக்ரே கட்சிக்கும். மொழி வெறி என்பது, மதம் மற்றும் ஜாதி வெறியை விட கொடியது. உலகத்தில் மிக பெரிய இன அழிப்பு(genocide) அத்தனையும் மொழியை மையப்படுத்தி நடந்தது தான். மொழிப்பற்று இருக்கலாம், ஆனால் மொழிவெறி மற்றும் அதன் மூலமாக பரவும் இனவெறி அறவே கூடாது.

தற்பொழுது தமிழ்நாட்டில் வாட்டாள் நாகராஜ் போன்று மொழியைக் கொண்டு பிரிவினையைத் தூண்டி பலன் தேடும் முயற்சியில் சீமான், திருமுருகன் காந்தி மற்றும் வேல் முருகன் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பின்னால் இளைஞர்கள் சென்றால், தமிழ்நாட்டின் ஆணிவேரான அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட அனைத்தும் சுக்கு நூறாக உடைந்தது போகும்.

தமிழர்கள் கன்னட பேருந்துகளைக் கொளுத்தினர். தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கினர். கேட்பதற்கு எவ்வளவு கேவலமாக உள்ளது?? இதனை செய்யத்தான் நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் இனவெறியைத் தூண்டிக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் பின்னாலா, நீங்கள் செல்லப் போகிறீர்கள் ??
மொழிவெறியை வைத்து அரசியல் செய்யும் ஆட்களை மக்கள் அடையாளம் கண்டு,அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விடும்!!

இப்படிக்கு,
அ.அருள் செல்வன்.

ரஜினி கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டாரா??

நான் எந்த ஒரு பதிவு போட்டாலும் , சில தற்குறிகள் கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டவர் தானே இந்த ரஜினி என்று கமெண்ட் செய்கிறார்கள். அந்த அறிவாளிகளுக்கான பதில்தான் இது !!!

ரஜினி வருத்தம் தான் தெரிவித்தார், மன்னிப்பு கேட்கவில்லை என்று மற்ற புரட்சித் தமிழர்கள் போல் நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பவில்லை. ரஜினி மன்னிப்புதான் தெரிவித்தார். ஆனால் எதற்காக?? காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாலா? ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல் படுத்த தன்னுடைய ஆதரவைத் தெரிவித்ததாலா?? இல்லவே இல்லை.





2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து(??) வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். ஒருவரை மேடையில் வைத்து கொண்டு அவமானப்படுத்துவது அல்லவா தமிழர் பண்பாடு(???) அதனைத்தான் பாதுகாத்தார் சத்யராஜ். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.

இதனை எதிர்த்து குசேலன் பட வெளியீட்டின் போது பிரச்சனை செய்த கன்னட அமைப்பினரிடம், எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.

தன்னுடைய ரசிகர் மன்ற சந்திப்பின் போது , ரசிகர் ஒருவர் இந்த கேள்வியைக் கேட்டார். " என்ன தலைவா? கர்நாடகாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டீங்க? அதற்கு தலைவர் சொன்ன பதில் " என்ன பன்றது? உங்களுக்கே தெரியும். மேடைல எல்லாரும் எப்படி பேசுனாங்க அப்படினு, நானும் மனுஷன் தானே ? அதான் கோபம் வந்து சில தகாத வார்த்தைகளை பேசிட்டேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது". இது தான் ரஜினியின் மனசு.

சிவாஜி படத்தை சன் தொலைக்காட்சிற்கு தரவில்லை என்கின்ற கோபத்தில் இருந்த அவர்கள், சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும் ரஜினி மன்னிப்பு கேட்டார் என்று கூறி தலைப்பு செய்தியை ஒளிப்பரப்பி, ரஜினிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலைப் படுத்தினர். அப்பொழுது சத்யராஜ், "தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். காரணம் , அவர் பிற மொழி படங்களில் நடிக்க மாட்டாராம். ஆனால் பிற மொழி நடிகைகளை மட்டும் படத்தில் கொஞ்சுவார். அந்த தன்மான தமிழன் பாகுபலி படத்தின் போது கர்நாடகாவின் காலில் விழுந்தது நாம் அறிந்ததே !!!

ஒரு தமிழனாக இருந்து கர்நாடாகாவிற்கு எதிராக குரல் கொடுப்பதை விட, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் குரல் கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம்? அதனை நாம் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருக்கலாம் அல்லவா?

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி - ! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி !!! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

மும்பையின் தாராவி கழகு பார்வையில் காட்டப்படுகிறது !!! MADRAS திரைப்படம் போல பா.ரஞ்சித்தின் குரலோடு படம் தொடங்குகிறது.
இதுதான் தாராவி !!! மும்பைல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வசிக்கிற இடம். இங்க சுதந்தரம் வாங்குனதுல இருந்து, இந்த குடிசை பகுதிலதான் வாழ்ந்துட்டு வராங்க!!! இவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்துறேன்னு ஓட்டு வாங்கி ஜெயிச்ச ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, இலவசத்தை மட்டும் கொடுத்து மக்களை ஏமாத்துறாங்க !!! இவங்க முன்னேற கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருக்காங்க.



இப்போ ஆளுங்கட்சியா இருக்கிற கட்சியோட தலைவர் ஒரு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க !!! இப்போ ஆட்சி அதிகாரம் அவங்க பசங்க ரெண்டு பேரு கைலதான் இருக்கு !!! இவங்க ரெண்டு பேரு செய்கின்ற கோமாளித்தனத்தை பார்த்து மக்கள் கொதிச்சுப்போய் இருக்காங்க !!!
எதிர்க்கட்சி தலைவருக்கு ரொம்ப வயசு ஆகி போய்டுச்சு !!! எப்படியாவது தான் இறக்குறதுக்குள்ள தன்னுடைய மகனை பதவிக்கு வர வைக்கணும்னு பார்க்குறாரு !!!ஆனா அவர் அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டார்னு மக்கள் நினைக்குறாங்க !!! அதுமட்டும் இல்லாம அவங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது செய்த ஊழல்களை மக்கள் மறக்கல !!!

இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லாம ஜாதிய வெச்சு அரசியல் செய்யுற ஒரு கட்சியோட மகன் !!! தமிழ் தலைவர் கூட தான் இருக்குற மாதிரி போட்டோஷாப் செய்து அதை வைத்து பொழப்பு நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு அரசியல்வியாதி உள்ளிட்ட பல பேர் இந்த மக்களை சுரண்டக் காத்துகிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட இருந்து காப்பாத்த யாராவது அரசியலுக்கு வர மாட்டாங்களா அப்படினு மக்கள் நினைச்சிட்டு இருக்கும்போது தான் கரிகாலன் என்கிற காலா, இந்த வருட தேர்தலில் நான் நிக்குறேன் அப்படினு அறிவித்து இருக்கிறார். ( அப்பொழுது ரஜினியின் முதுகுபுறம் மக்கள் வெள்ளத்தில் காட்டப்படுகிறது)1980 களில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு பஞ்சம் பொழைக்கவந்த குடும்பம்தான் காலாவோட குடும்பம். இங்க வந்து தன்னோடு உழைப்பால முன்னேறி மக்களுக்கு பல நல்லது செஞ்சுட்டு வராரு. இவர் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் இவர் கூட நண்பனா இருந்த பல அரசியல்வாதிகள், இப்போ விரோதியா மாறிட்டாங்க.

ஏன் !! காலாவின் நண்பனாக இருந்த உலகநாதன் கூட, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டக் கதையாக தானும் ஒரு கட்சி ஆரம்பிக்க போவதாக கூறிக் கொண்டு அலைகிறார். ஆனால் மக்கள் அவரை சீண்டக்கூடவில்லை. இவர் எதிர்கட்சியோட ஆளா இருப்பாரோன்னு சந்தேக படுறாங்க !!!
இதுநாள் வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேராத இந்த அரசியல்கட்சிகள், இவரை எதிர்க்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க. இவங்க கிட்ட இருந்து அந்த மக்களை எப்படி காப்பாத்துறார்னு பார்ப்போம்.

முதல் காட்சி:

அரசியல்வியாதி ( குடிசை மக்களைப் பார்த்து) - இங்க பாரு!! எங்க இருந்தோ வந்த வந்தேறிய நீங்க எல்லாம் ஆதரிச்சீங்க!! உங்க எல்லாரையும் கொளுத்திடுவேன். எங்களை தவிர இங்க ஒரு நாய் உள்ள வர முடியாது.

அப்பொழுது காலாவின் நாய் (பயங்கர பின்னணி இசையுடன் வருகிறது). அதனை பார்த்த அரசியல்வியாதி, இது என்னடா நாய் வந்து இருக்கு !!

குடிசை மக்களில் ஒருவன் - இது உனக்கு ஒரு வார்னிங் !!! நாய் வரும்போதே நீ இந்த இடத்தை விட்டு போய்டு !!! ஏன்னா !! அடுத்து வர போறது ஒரு சிங்கம் !!! அதுகிட்ட நீ சிக்குன்ன சின்னாபின்னமா ஆயுடுவ !!!

அரசியல்வியாதி: வரட்டும்!! என்ன ஆகுதுன்னு பாப்போம் !!!

மக்கள் - (மனதிற்குள்) இவன் இவங்க ஆத்தா,அப்பத்தாகிட்ட போறது நிச்சயம்
(யமஹா RX 100 பைக் வேகமாக வருகிறது. தலைவரை பின்னால் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் வேகமாக ஒட்டி வருகிறான். தலைவரின் முகம் தவிர கால், கை என்று அனைத்தும் காட்டப்படுகிறது. வண்டி அரசியல்வியாதி இருக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறது. தலைவரின் நாய் ரஜினியின் காலைப் போய் கொஞ்சுகிறது. ரஜினி நாயைத் தூக்கி ஒரு முத்தம் இடுகிறார்).

ரஜினி - உனக்கு இருக்கிற நன்றி, இங்க மனுஷனுக்கு இல்லாம போச்சே !!!
ரஜினி அரசியல்வியாதியிடம் ஸ்டைலாக நடந்து வருகிறார்.
அரசியல்வியாதி - நீ எதுக்குடா இந்த மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரணும்னு நினைக்கிற?? அதுக்கு நாங்க இருக்கிறோம் !! நாங்க பார்த்துக்குறோம் !!! நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தோம், உன்ன இல்லாம பண்ணிடுவோம் !!
ரஜினி - என்னை எதிர்க்க ஒன்னு சேர்ந்த நீங்க, மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேர்ந்து இருந்தீங்கனா, நான் ஏன்டா அரசியலுக்கு வர போறேன்
அரசியல்வியாதி - அவங்களுக்கு நல்லது செய்ய நீ யாருடா!!
ரஜினி - உலகத்துக்கு ஒரு பிரச்சன்னைனா நான் மனுஷன் !!!
இந்தியாவுக்கு ஒரு பிரச்சனைனா நான் இந்தியன் !!!
தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா நான் தமிழன் !!!
அரசியல்வியாதி - டேய்!! இந்த வந்தேறிய அடிச்சு போடுங்கடா !!
ரஜினி - நான் வந்தேறி இல்லடா !! ஊழல் செய்யுற உங்கள மாதிரி ஆளுங்கள அடிக்க வந்து இருக்கிற காட்டேரி !!!
ரஜினி அனைவரையும் அடிச்சு துவம்சம் செய்கிறார். படத்தின் முதல் பாடலில் தியேட்டர் ரணகளம் ஆகிறது
இப்படிக்கு ,
அ.அருள்செல்வன்

Wednesday, February 7, 2018

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ??

நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது.



நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க முடியும்?? ஏன் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்று இடதுசாரிகளை எதிர்த்து இந்த திடீர் தமிழர்கள் என்றாவது கேட்டு இருக்கிறார்களா?

நம் ஆதரவு ரஜினி என்னும் நடிகருக்கு மட்டும் அல்ல. 25 வயது வரை ஒரு பேருந்து நடத்துனராக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து விட்டு, மொழி தெரியாத மாநிலத்தில் தன்னுடைய கருமையான நிறத்துடன் வந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு தான் நம் ஆதரவு.
இந்தியாவில் மிகவும் பிரபலமானத்துறை எது?? ஏன் உலகத்திலேயே மிகவும் பிரபலமானத்துறை எது. கலைத்துறை தானே? 100 கோடி வைத்து இருந்தால், நீங்கள் ஒரு பெரிய கட்சியிடம் சீட்டு வாங்கி, அமைச்சர் ஆகி விடலாம். ஆனால் 1000 கோடி இருந்தாலும், சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வளம் வர முடியுமா? காசு, பணத்தால் நிலைக்க கூடிய பதவியா அது? கடின உழைப்பு மட்டும் இல்லையென்றால் சாத்தியப்பட கூடிய ஒன்றா அது?? அந்த கடின உழைப்பைதான் நாம் ஆதரிக்கிறோம்.
நீ சிறு வயதில் இருந்து அவரையே நேசித்து வருகிறாய், உனக்கு பக்குவம் இல்லையா?? என்று ஒரு நண்பன் கேட்கிறான். நான் ரஜினியுடன் சேர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு நடிகர்களையும் நேசித்து வந்து உள்ளேன் (கார்த்திக், பிரபு இன்னும் பலர்), ஆனால் ரஜினி ஒருவர் தான் இன்றுவரை தமிழ் சினிமாவில் ராஜாவாக உள்ளார். பின், அவரை எதற்காக நாம் வெறுக்க வேண்டும்??

எம்ஜியாருக்கு பிறகு அரசியலில் வந்து தோற்றுப் போன நடிகர்களும், ரஜினியும் ஒன்றா?? சிவாஜி, பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,விஜயகாந்த்(கமல் உட்பட) என்று அனைவரும் மார்க்கெட் போனவுடன் அரசியலுக்கு வந்தவர்கள் . ரஜினி மட்டும் தான் எம்ஜியாருக்கு பிறகு திரையுலகில் ராஜாவாக இருக்கும்போதே அரசியலுக்கு வருபவர். எனவே தயவு செய்து இனிமேல் அவர் ஒரு கூத்தாடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவர் இந்தியாவிலேயே பிரபலமான, வெற்றி பெறுவதற்கு கடினமான ஒரு துறையில், 40 வருடமாக சிங்கமாக இருக்கும் ஒருவர்.(வேறு யாரவது இந்தியாவில் 40 வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்களா??) எனவே அவரையும் மற்ற நடிகர்களையும் ஒப்பிடுவதே மிக பெரியத் தவறு.

வெளிநாடுகளில் எல்லாம் நடிகர்கள் அரசியலில் ஜெயிப்பது இல்லை என்று நண்பன் கூறினான். இவர்கள் எல்லாம் WHATSAPP கோஷ்டிகள். ஹாலிவுட் நடிகர் ரொனால்டுட் ரீகன் 8 வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார். ஏன்?? அர்னால்டு கூட, அமெரிக்காவில் கவர்னராக இருந்து இருக்கிறார். ஆதலால், சினிமாவில் ஜெயித்து, அரசியலுக்கு வருபவர்களை, நீங்கள் கேவலமாக பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.

இறுதியாக, நாங்கள் ஒன்றும் வேலைவெட்டி பார்க்காமல், படிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல், ரஜினியை ஆதரிக்கவில்லை. அனைத்தையும் செய்து கொண்டு, நேரம் கிடைக்கும் நேரத்தில் ரஜினியை ஆதரிக்கிறோம். உலகம் முழுக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காதா?? என்று பலர் ஏங்கி கிடைக்கும் ஒரு துறையில், 40 வருடமாக முன்னணியில் இருக்கும் ஒரு ராஜாவை ஆதரிக்கிறோம். 20 வருடமாக அவர் பற்றிய செய்திகள் முழுவதையும் படித்து, அவரைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு காவலன் என்ற முறையில் அவரை ஆதரிக்கிறோம்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...