Saturday, January 20, 2018

ரஜினியும், பெரியார் கொள்கைகளும் !!!

நான் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு ஆதரவாக வெளியிடும் பதிவுகளால், நான் பெரியாரின் மீது வைத்துள்ள மதிப்பையும், நான் பெரியாருக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகளையும், என் குறும்படங்களில் சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் பெரியார் பற்றி காட்சிகள் வைத்ததையும் பல நண்பர்கள் மறந்து விட்டார்கள். ரஜினி ஏதோ பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர் என்பதை போல பரப்புகின்றனர்.அவர்களின் விமர்சனத்திற்கான பதில்தான் இது!!!

 
இன்று சென்னையில் நடைப்பெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். எந்த வருடம் ஆனாலும் பெரியாரின் புத்தகம் வாங்காமல் நான் திரும்பியது இல்லை. இந்த வருடம் நான் வாங்கியப் புத்தகம் " பெரியார் இன்றும் என்றும்". பல நாட்களாக வாங்க நினைத்திருந்தேன். இன்று விலை சற்று குறைவாக இருந்ததால் வாங்கினேன். நான் பெரியாரின் புத்தகங்களை படிக்கும் விதமே தனி. ஏனென்றால் என்னிடம் உள்ள பெரியார் புத்தகங்கள் எல்லாம் ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. கட்டுரை வடிவிலானவை. தினமும் காலையில் எதாவது ஒரு பெரியார் புத்தகத்தை எடுப்பேன். ஏதாவது ஒரு பக்கத்தை திறப்பேன். அந்த ஒரு கட்டுரையை மட்டும் படித்து முடிப்பேன். அவர் எழுதி இருப்பது தற்போது நடைமுறைக்கு சாத்தியமானதா?? என்று பார்ப்பேன். சாத்தியமானதாக இருந்தால் அதனை மனதில் ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் அதனை மறந்து விடுவேன்.
ஏனென்றால் "யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும்,உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே" என்று பெரியாரே பேசி இருக்கிறார். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் எடுத்தக் கொண்ட உண்மையான கொள்கைக்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார் மட்டும்தான்.

ரஜினி பெரியார் கூறிய ஒரு சிலக் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறார்.அதற்காக அவர் பெரியாரை வெறுத்து ஒதுக்குபவர் அல்ல. பெரியார் கூறிய அனைத்துக் கருத்துகளையும் மறுப்பவரும் அல்ல. ரஜினிக்கு எது சரி என்று படுகிறதோ, அதனை நேர்மையாக செய்கிறார். இதனை பெரியார் பட விழாவில், ரஜினி மிக அழகாக சொன்னார். " பெரியார் படைத்தது ஒரு விருந்து, அதில் நமக்கு எது பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், ரஜினி கைப்பட எழுதிய கடிதத்தை பெரியார் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்த அனுமதித் தந்தார். பெரியார் மீதான ரஜினியின் மரியாதைக்கு சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு தான்.

ஆனந்த விகடன்’ வார ஏட்டில்" திரைப்பட இயக்குனர் வேலு. பிரபாகரன் 2006-இல் அளித்த பேட்டி!!!

நிஜமாகவே ரஜினி எங்கே வருவார், எப்போ வருவார்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார். தரணும்னு நினைக்கிறதைக் கண்டிப்பா தருவார். அவரை இப்போதான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நம்ம ஊர்ல நல்லவங்களை எப்பவும் லேட்டாத்தானே புரிஞ்சுக்க முடியுது...!”
பெரியாரின் உயிர்நாடியான கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே வைத்து ‘காதல் அரங்கம்’ என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதில் நான் பெரியார் வேடத்திலேயே வந்து அவர் கருத்துக்களைப் பேசுகிறேன்.
ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவ்வளவு பொருளாதாரப் பிரச்சினைகள்! எவ்வளவோ பேரிடம் உதவி கேட்டேன். கதையைக் கேட்டு நெகிழ்ந்தவர்கள், பணம் என்றதும் விலகி ஓடிவிட்டார்கள். இந்த நெருக்கடியான சமயத்தில் தான் ரஜினியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மனுஷனை எவ்வளவோ எதிர்த்துப் பேசியிருக்கிறேன். அறிக்கைப் போர் நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறேன்.

ஆனால், அதையெல்லாம் மறந்து, என்னைப் பார்த்த கணத்திலேயே, ‘உங்க படம் என்னாச்சு வேலு?’ என்று உண்மையான கலைஞனின் அக்கறையோடு கேட்டார். அத்தனை பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தேன். என் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தவர், ‘சொல்லுங்க வேலு... நான் என்ன பண்ணணும்?’னு கேட்டார். ‘நீங்க லேபுக்கு போன் பண்ணி, படம் ரிலீசானதும் வேலு பிரபாகரன் பணத்தைச் சரியா கொடுத்திடுவார்’னு ஒரு உறுதிமொழி மட்டும் கொடுங்க, போதும்’ என்றேன். ‘அதெல்லாம் எதுக்கு? எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க, நான் தர்றேன். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். எவ்ளோ பெரிய மனுஷன். அவரைப் பத்தின படம், ஜனங்க பார்வைக்கு வந்தே ஆகணும்’ என்றார். நான் தொகையைச் சொன்னதும், அங்கேயே, அப்போதே அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவினார் ரஜினி.

ஆடிப் போய் விட்டேன். வள்ளலாரின் சமாதிக்குப் போனபோது, தனி மனிதனுக்குச் செய்யும் மரியாதையாக எண்ணி, மறுக்காமல் நெற்றியில் விபூதி பூசிப் போன பெரியாரின் கடல் போன்ற குணத்தை ரஜினியிடம் அன்று நான் பார்த்தேன்.

மனசுவிட்டுச் சொல்கிறேன்... பெரியாரின் பேரையே நித்தமும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களிடம் என் சினிமா கனவுக்காக மூன்று லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினேன். என் வீட்டின் பேரில்தான் அதை வாங்கினேன். அதற்குக் கட்டிய வட்டியிலேயே வீடு மூழ்கிப் போனது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது அந்த அமைப்பு. முழு ஆன்மிகவாதியான ரஜினியோ பகுத்தறிவைப் பரப்பும் எனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மிகப் பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்.

‘கடவுளை மற... மனிதனை நினை’ என்றார் பெரியார். ரஜினி, என்னைப் போன்ற மனிதனை நினைத்திருக்கிறார். ஆன்மிகவாதி என்று மட்டுமே பார்க்கப்படுகிற அந்த நல்ல மனிதருடைய இன்னொரு அற்புதமான முகத்தை தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் இப்போது உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன்!” என்கிறார் வேலு பிரபாகரன் நெகிழ்ச்சி கொப்பளிக்கும் குரலில்! என்று பேட்டியை முடித்தார்.
இப்பொழுது புரிகிறதா?? யார் உண்மையான பெரியாரின் தொண்டன் என்று?? பெரியார்!! பெரியார்!! தமிழ் தான் என் உயிர்' மூச்சு என்று கூவி கொள்ளும் ஆயிரம் புரட்சி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், ஆனால் பெரியாருக்காக தன் சொந்த பணத்தைக் கொடுத்து உதவியது நீங்கள் எல்லாம் கன்னடன் என்று கூறும் ரஜினிகாந்த் அவர்கள் தான்!!!

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...