Thursday, January 25, 2018

நாம் தமிழர் - யார் தமிழர்??

பொங்கல் தினத்தன்று நான், என் மனைவி, எனது ஆறு மாத குழந்தையுடன் சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டு இருந்தேன். பூந்தமல்லி அருகே செல்லும்போது எங்கள் முன்னாள் ஒரு வெள்ளை நிற MARUTI SWIFT சென்று கொண்டு இருந்தது. அதன் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து "நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்" என்ற வாசகம் எழுதி இருந்தது. நான் என் மனைவியிடம், " இந்த மாதிரி தமிழன் என்று தன்னை விளம்பரப்படுத்துறவன் எல்லாம் மக்களை ஏமாத்துறவான தான் இருப்பான். இல்ல!! தமிழன் அப்படினு சொல்லி மக்கள் கிட்ட பணம் புடுங்குறவனா தான் இருப்பான். இவர்களால் தமிழிற்கு ஒரு பிரயோஜனம் கிடையாது. தமிழுக்காக உழைப்பவன், எந்த பிரதிபலனும் பாராமல், தன்னை விளம்பரப்படுத்தாமல், வேலை செய்வான்" என்று கூறினேன். அதற்கு என் மனைவி, " உங்களுக்கு வேற வேலையில்லை. சும்மா போங்க !!! என்று கூறிவிட்டாள் . அதற்கு மேல் அதனைப் பற்றி பேசவில்லை.பூந்தமல்லியை தாண்டி திருமழிசை திரும்புவதற்காக என்னுடைய வண்டியை வலது பக்கமாக நிறுத்தி சிக்னலுக்காக காத்து இருந்தேன். அப்பொழுது எங்கள் காரின் பின்னால் வந்து ஒரு கார் வேகமாக மோதியது. என் மனைவியும், குழந்தையும் நிலை தடுமாறி காரின் DASHBOARD வரை சென்று வந்தனர். நான் காரை நிறுத்திவிட்டு , பின்னால் யார் என்று பார்க்கலாம் என்று இறங்கினேன். அப்பொழுது, எங்கள் முன்னாள் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்ற அதே வெள்ளை நிற MARUTI SWIFT கார் தான், இப்பொழுது எங்களைப் பின்னால் இடித்து இருப்பது தெரிய வந்தது. அந்த காரில் இருந்தவன், உடனடியாக REVERSE எடுத்து, இடது புறம் திரும்பி, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக அங்கு இருந்து சென்று விட்டான். ஒரு மன்னிப்பு இல்லை. குழந்தை இருக்கும் காரில் யாருக்காக அடிப்பட்டு விட்டதா?? என்று கேட்கவில்லை. அவசரத்தில் காரின் நம்பரை பார்க்க மறந்து விட்டேன். அந்த கார் தூரத்தில்செல்லும் பொழுது என்னுடைய கண்ணில் தெரிந்தது ஒன்றே ஒன்றே தான்.அந்த காரின் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து "நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்" என்று இருந்த அந்த வாசகம் தான். இனிமேல் நீங்கள் இந்த அடையாளங்களைக் கொண்ட ஒரு காரை காண நேர்ந்தால், மனிதன் என்ற போர்வையில் ஒரு மிருகம் வண்டியில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்த்து விட்டு, வண்டியில் ஏறி அமர்ந்தேன். காரில் சிறிது நேரத்திற்கு பயங்கர அமைதி நிலவியது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் மனைவி," நீங்க சொன்னது சரிதாங்க, திருட்டு பசங்களா இருக்காங்க" என்று கூறினார்.

இதேபோல், தமிழ்நாட்டில் யார் உண்மையான தமிழன் , யார் விளம்பரம் பார்க்காமல் உழைக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் பணம் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் இன உணர்வைத் தூண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது என் மனைவிக்கு புரிந்த மாதிரி மக்களுக்கும் வெகு விரைவில் புரியும்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

Saturday, January 20, 2018

ரஜினியின் அரசியல் தலைவர் யார்?

நாத்திகவாதியான கமல்ஹாசன் அவர்கள் நிறைந்த அமாவாசையான நேற்று கட்சியைப் பற்றி அறிக்கை வெளியிட்டார் என்று என் நண்பர்களிடம் கூறினேன். அதற்கு நிறைய கமல் ரசிகர்கள் அவருடைய அரசியல் குருவான எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சியைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று என்னிடம் கூறினார்கள். சரி, ரஜினியின் அரசியல் குரு யார்??ரஜினியின் பில்லா படம் ரிலீஸ் ஆன சமயத்தில், எம்,ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்தி சில போஸ்டர்கள் சென்னை முழுவதும் தயாரிப்பு நிறுவனத்தால் ஒட்டப்பட்டன. அதனைப் பார்த்து கோபம் அடைந்த ரஜினி, என் படத்துக்கு என்னை பார்த்து யார் வராங்களோ வரட்டும். மத்தவங்க படத்தை போட்டு தயவு செஞ்சு, இந்த மாதிரி விளம்பரம் போடாதீங்க !! அப்படி என்று தெரிவித்தார். இதுநாள் வரை ரஜினி அவர்கள் தன்னுடைய படங்களில், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால், தற்போது உச்சியில் இருக்கும் சில நடிகர்கள், தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ரஜினியின் ரசிகனாகக் காட்டி கொண்டு, படங்களில் ரஜினியின் போஸ்டர் மற்றும் ரஜினி பட காட்சிகளைப் பயன்படுத்தினார்கள். தற்போது, அவர்கள் ரஜினியை விட பெரிய நடிகராகி விட்டதாக நினைத்துக் கொண்டு, தங்களின் படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகனாகக் காட்டிக் கொண்டு, அவருடைய படத்தின் காட்சிகளை பயன் படுத்துகிறார்கள். உண்மையில், அவர்கள் ரஜினி பட வசூலின் 25% தொகையைக் கூட தொடவில்லை என்பது தான் உண்மை.

அதேப் போல, தான் அரசியலுக்கு வருவதைப் பற்றி அறிவிக்கும்போதும், அவர் யாரையும் தன்னுடைய அரசியல் தலைவனாகக் குறிப்பிடவில்லை. எந்த தலைவர் பெயரைக் கூறி விளம்பரம் தேடவில்லை. அவராக, என்னுடையது ஆன்மிக அரசியல் என்று அறிவித்தார். இனிமேலும் எந்த தலைவர் பெயரையும் நிச்சயமாக சொல்லி ஓட்டுக் கேட்கமாட்டார். அவரை நம்பி யார் ஒட்டுப் போடுகிறார்களோ, அதுபோதும் என்று கூறி விடுவார். அதுதான் ரஜினி. அதுதான் ரஜினியின் குணம். தன் சொந்த காலிலேயே நிற்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் தான் ரஜினி.
ரஜினியின் அரசியல் தலைவர் என்றுமே ரஜினிதான்.

ஆனால் மற்றவர்கள், எம்,ஜி,ஆர், பெரியார்,அண்ணா, பிரபாகரன் இவர்களைப் பயன்படுத்தி மக்களிடம் ஓட்டுக் கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்குனு ஒரு பெயர் சம்பாதிச்சுக்குங்க!! மத்தவங்க உழைப்பை சுரண்டாதீங்க!!!!

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் !!!

ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் !!! அவர் இன்னும் கொஞ்சம் நாள் தான் இருப்பார் !!! இளைஞர்கள் தான் நாட்டை ஆளனும்.
இது போன்ற ஓலங்கள் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நாளில் இருந்து சில பேரிடம் வந்து கொண்டு இருக்கறது. அவர்களுக்கான பதில் தான் இது .

1977 ஆம் ஆண்டு நாட்டில் அவரச நிலை பிரகடனப் படுத்த போது, மிகுந்த வலிமை மிக்க இந்திரா காந்திய எதிர்த்து இந்தியாவே வியக்கும் வண்ணம் போராட்டம் நடத்தியது மூன்று இளைஞர்கள். பீகாரில் இருந்து ஒரு இளைஞன் , உத்தரப்பிரதேஷில் இருந்து ஒரு இளைஞன், மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு இளைஞன். அந்தந்த மாநில மக்கள் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். நமக்கு சேவை செய்ய தேவ தூதுவன் வந்து விட்டான் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் பெயரை சொன்னால் தற்போது அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசாமிகள் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். பீகாரில் இருந்து வந்த இளைஞன் பெயர் லாலு பிரசாத் யாதவ், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் முலாயங் சிங்க் யாதவ் , மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் சீதாராம் யெச்சூரி. என்ன ஒரு நிமிஷம் தலை சுத்திடிச்சா?

இளைஞர்கள் கையில் நிர்வாகத்தை கொடுத்தால் இப்படி தான் நடக்கும். அவர்களும் மனிதர்கள் தான் என்பதால் பணம், புகழ் வந்தவுடன், தான் மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்துவிட்டு வயதை அனுபவிக்க நினைப்பார்கள். அரசியலை பொறுத்தவரை இளைஞர்கள் செயல்படுகின்ற விதத்தில் இருக்க வேண்டுமே தவிர, முடிவு எடுக்கின்ற ம இருக்க கூடாது. அதனால்தான் உலகம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது என்பது கிடையாது.

ரஜினி அவர்கள் பணம், புகழ் அனைத்தையும் பார்த்து விட்டார்.ஏன் ? ஒரு முறை மரணத்தைக் கூட அருகில் சென்று பார்த்து விட்டார். ஆதலால், நிச்சயமாக மக்களுக்கு சேவை செய்கின்ற நல்ல தலைவராக அவர் இருப்பார். ஒரு முறை மரணத்தில் இருந்து மீண்டு வந்தவன் , தவறு செய்ய வேண்டும் என்று நினைப்பானா?

               


அவர் இந்த வயதில் செயல்படுவாரா என்று , ரஜினியை விட வயதில் மூத்த தலைவரை செயல்தலைவராகக் கொண்ட கட்சிக்காரர்கள் கேட்கிறார்கள். அவர் நிட்சயமாக புதிய உத்வேக த்துடன் பழைய ரஜினியாக செயல்படுவார் என்பது கடந்த சில நாட்களாக கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக அவருக்கு கீழே நன்றாக செயல்பட கூடிய காவலர்களை வைத்துக்கொள்வார்.

இதற்கு ஒரு படி மேலாக , அவர் சீக்கிரம் இறந்து விடுவார் என்று சில பேர் பேசுவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். மரணம் என்பது நிலையானது அல்ல, யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ரஜினியின் வயதில், நீங்கள் எல்லாம் கை , கால் நன்றாக இருந்து நடந்தாலே அது பெரிய விஷயம் தான். ரஜினிக்கு ஒரு வயசு ஏறிச்சினா , உங்களுக்கும் ஒரு வயசு ஏறதான் போகுது. நீங்களும் வயசானவனா ஆகத்தான் போறீங்க. உங்க எல்லார்க்கும் ரஜினியோட வயசுல உங்க வீட்ல ஒரு அம்மாவோ, ஒரு அப்பாவோ இருக்காங்க !! அத நினைச்சு பேசுங்க !!! இல்லை, அவங்களும் சீக்கிரமா சாகனும்னு நீங்க விரும்புறீங்களா?

தமிழன்!!! தமிழன் என்று கூறிக்கொண்டு கடவுள் நமக்கு கொடுத்துள்ள இந்த அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம். ரஜினிக்கு ஆட்சி நடத்த தெரியுமோ !!!! இல்லையோ !!! ஆனா நிச்சயம் மக்களோட வயித்துல அடிக்க மாட்டார்.
இப்படிக்கு,
அ .அருள்செல்வன்

ரஜினியும், பெரியார் கொள்கைகளும் !!!

நான் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு ஆதரவாக வெளியிடும் பதிவுகளால், நான் பெரியாரின் மீது வைத்துள்ள மதிப்பையும், நான் பெரியாருக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகளையும், என் குறும்படங்களில் சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் பெரியார் பற்றி காட்சிகள் வைத்ததையும் பல நண்பர்கள் மறந்து விட்டார்கள். ரஜினி ஏதோ பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர் என்பதை போல பரப்புகின்றனர்.அவர்களின் விமர்சனத்திற்கான பதில்தான் இது!!!

 
இன்று சென்னையில் நடைப்பெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். எந்த வருடம் ஆனாலும் பெரியாரின் புத்தகம் வாங்காமல் நான் திரும்பியது இல்லை. இந்த வருடம் நான் வாங்கியப் புத்தகம் " பெரியார் இன்றும் என்றும்". பல நாட்களாக வாங்க நினைத்திருந்தேன். இன்று விலை சற்று குறைவாக இருந்ததால் வாங்கினேன். நான் பெரியாரின் புத்தகங்களை படிக்கும் விதமே தனி. ஏனென்றால் என்னிடம் உள்ள பெரியார் புத்தகங்கள் எல்லாம் ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. கட்டுரை வடிவிலானவை. தினமும் காலையில் எதாவது ஒரு பெரியார் புத்தகத்தை எடுப்பேன். ஏதாவது ஒரு பக்கத்தை திறப்பேன். அந்த ஒரு கட்டுரையை மட்டும் படித்து முடிப்பேன். அவர் எழுதி இருப்பது தற்போது நடைமுறைக்கு சாத்தியமானதா?? என்று பார்ப்பேன். சாத்தியமானதாக இருந்தால் அதனை மனதில் ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் அதனை மறந்து விடுவேன்.
ஏனென்றால் "யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும்,உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே" என்று பெரியாரே பேசி இருக்கிறார். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் எடுத்தக் கொண்ட உண்மையான கொள்கைக்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார் மட்டும்தான்.

ரஜினி பெரியார் கூறிய ஒரு சிலக் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறார்.அதற்காக அவர் பெரியாரை வெறுத்து ஒதுக்குபவர் அல்ல. பெரியார் கூறிய அனைத்துக் கருத்துகளையும் மறுப்பவரும் அல்ல. ரஜினிக்கு எது சரி என்று படுகிறதோ, அதனை நேர்மையாக செய்கிறார். இதனை பெரியார் பட விழாவில், ரஜினி மிக அழகாக சொன்னார். " பெரியார் படைத்தது ஒரு விருந்து, அதில் நமக்கு எது பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், ரஜினி கைப்பட எழுதிய கடிதத்தை பெரியார் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்த அனுமதித் தந்தார். பெரியார் மீதான ரஜினியின் மரியாதைக்கு சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு தான்.

ஆனந்த விகடன்’ வார ஏட்டில்" திரைப்பட இயக்குனர் வேலு. பிரபாகரன் 2006-இல் அளித்த பேட்டி!!!

நிஜமாகவே ரஜினி எங்கே வருவார், எப்போ வருவார்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார். தரணும்னு நினைக்கிறதைக் கண்டிப்பா தருவார். அவரை இப்போதான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நம்ம ஊர்ல நல்லவங்களை எப்பவும் லேட்டாத்தானே புரிஞ்சுக்க முடியுது...!”
பெரியாரின் உயிர்நாடியான கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே வைத்து ‘காதல் அரங்கம்’ என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதில் நான் பெரியார் வேடத்திலேயே வந்து அவர் கருத்துக்களைப் பேசுகிறேன்.
ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவ்வளவு பொருளாதாரப் பிரச்சினைகள்! எவ்வளவோ பேரிடம் உதவி கேட்டேன். கதையைக் கேட்டு நெகிழ்ந்தவர்கள், பணம் என்றதும் விலகி ஓடிவிட்டார்கள். இந்த நெருக்கடியான சமயத்தில் தான் ரஜினியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மனுஷனை எவ்வளவோ எதிர்த்துப் பேசியிருக்கிறேன். அறிக்கைப் போர் நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறேன்.

ஆனால், அதையெல்லாம் மறந்து, என்னைப் பார்த்த கணத்திலேயே, ‘உங்க படம் என்னாச்சு வேலு?’ என்று உண்மையான கலைஞனின் அக்கறையோடு கேட்டார். அத்தனை பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தேன். என் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தவர், ‘சொல்லுங்க வேலு... நான் என்ன பண்ணணும்?’னு கேட்டார். ‘நீங்க லேபுக்கு போன் பண்ணி, படம் ரிலீசானதும் வேலு பிரபாகரன் பணத்தைச் சரியா கொடுத்திடுவார்’னு ஒரு உறுதிமொழி மட்டும் கொடுங்க, போதும்’ என்றேன். ‘அதெல்லாம் எதுக்கு? எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க, நான் தர்றேன். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். எவ்ளோ பெரிய மனுஷன். அவரைப் பத்தின படம், ஜனங்க பார்வைக்கு வந்தே ஆகணும்’ என்றார். நான் தொகையைச் சொன்னதும், அங்கேயே, அப்போதே அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவினார் ரஜினி.

ஆடிப் போய் விட்டேன். வள்ளலாரின் சமாதிக்குப் போனபோது, தனி மனிதனுக்குச் செய்யும் மரியாதையாக எண்ணி, மறுக்காமல் நெற்றியில் விபூதி பூசிப் போன பெரியாரின் கடல் போன்ற குணத்தை ரஜினியிடம் அன்று நான் பார்த்தேன்.

மனசுவிட்டுச் சொல்கிறேன்... பெரியாரின் பேரையே நித்தமும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களிடம் என் சினிமா கனவுக்காக மூன்று லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினேன். என் வீட்டின் பேரில்தான் அதை வாங்கினேன். அதற்குக் கட்டிய வட்டியிலேயே வீடு மூழ்கிப் போனது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது அந்த அமைப்பு. முழு ஆன்மிகவாதியான ரஜினியோ பகுத்தறிவைப் பரப்பும் எனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மிகப் பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்.

‘கடவுளை மற... மனிதனை நினை’ என்றார் பெரியார். ரஜினி, என்னைப் போன்ற மனிதனை நினைத்திருக்கிறார். ஆன்மிகவாதி என்று மட்டுமே பார்க்கப்படுகிற அந்த நல்ல மனிதருடைய இன்னொரு அற்புதமான முகத்தை தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் இப்போது உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன்!” என்கிறார் வேலு பிரபாகரன் நெகிழ்ச்சி கொப்பளிக்கும் குரலில்! என்று பேட்டியை முடித்தார்.
இப்பொழுது புரிகிறதா?? யார் உண்மையான பெரியாரின் தொண்டன் என்று?? பெரியார்!! பெரியார்!! தமிழ் தான் என் உயிர்' மூச்சு என்று கூவி கொள்ளும் ஆயிரம் புரட்சி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், ஆனால் பெரியாருக்காக தன் சொந்த பணத்தைக் கொடுத்து உதவியது நீங்கள் எல்லாம் கன்னடன் என்று கூறும் ரஜினிகாந்த் அவர்கள் தான்!!!

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...