Wednesday, February 21, 2018

லதா ரஜினிகாந்த் மீது 8.5 கோடி கடன் பாக்கி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே ? இது பற்றி ரசிகனாக உங்கள் கருத்து என்ன?

2002 ஆம் ஆண்டு பாபா படம் தோல்வி அடைந்த பொழுது, விநியோகஸ்தர்கள் தன்னால் பாதிக்கப்பட கூடாது என்று 20 கோடி ருபாய் அளவிற்கு அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கினார். ( அதாவது 15 வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட இருபது கோடி). அப்பொழுது அவருக்கு பிற தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தால், வியாபாரம் செய்ய முடியாது. வியாபாரத்தில் லாபம், நஷ்டம் என்பது இயல்புதான் என்று கருத்து தெரிவித்தனர். கமல் ஒரு படி மேலேபோய், ரஜினி செய்தது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதனால், படம் தோல்வி அடைந்தால், நாம் வாழ முடியாது என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் ரஜினி, என்னால் சினிமாவில் வாழ்ந்தவர்கள்தான் இருக்க வேண்டுமே தவிர, நஷ்டம் அடைந்தவர்கள் இருக்க கூடாது என்று அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுத்தார். ஆகா! இவர்தான் மகான் என்று அனைத்து விநியோகிஸ்தர்களும் பணத்தை வாங்கி கொண்டு சென்றனர். இதற்கு முன்பு, வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த வரலாறு இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது உண்டா?? அப்பேற்பட்ட, மனசிற்கு சொந்தகாரர் தான் ரஜினி. ரஜினி தான் பாபா படத்திற்கு தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.

2008 ஆம் ஆண்டு, ரஜினியின் குருவான பாலச்சந்தர் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் குசேலன். இந்த படமும் தோல்வி அடைந்தது. உடனே விநியோகிஸ்தர்கள் ரஜினி நஷ்டஈடு தரவேண்டும் என்று கிளம்பி விட்டனர். பாபா படத்தில் ரஜினி தயாரிப்பாளர். அவர் அதற்கு மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு கொடுத்தார். இதில் ரஜினி ஒரு நடிகர் மட்டுமே. அதுவும் பசுபதி தான் இந்த படத்தின் முக்கிய கதாநாயகன். அப்படி இருக்கையில், நீங்கள் அதிக பணம் கொடுத்து வாங்கிவிட்டு, ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது, எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஆனால் ரஜினி மாமனிதர். மீண்டும் தனது கொடை பண்பை நிரூபித்தார். குசேலன் படத்தின் தமிழ் பதிப்பிற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. அதேபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை நஷ்டஈடாக கொடுத்து உதவினார்.




2014 ஆம் ஆண்டு, லிங்கா படம் தோல்வியுற்ற பொழுது, (பல விநியோகிஸ்தர்கள் உண்மையான வசூலை மறைத்தனர்). விநியோகிஸ்தர் சிங்கார வேலன் என்பவர் ரஜினி படத்திற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறினார். பாபா ரஜினியின் தயாரிப்பு, குசேலன் ரஜினியின் குருவான பாலச்சந்தர் தயாரிப்பு. அதற்கு ரஜினி நஷ்ட நீடு கொடுத்ததில் ஒரு நியாயம் இருக்கிறது. இந்த படத்திற்கு ராக்லைன் வெங்கடேஷ் என்பவர் தான் தயாரிப்பாளர். இந்த படத்திற்கு ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?? ரஜினி அமைதி காத்ததால், ரஜினியின் வீடு முற்றுகை மற்றும் உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தினார். அந்த உண்ணாவிரதத்திற்கு வந்து இருந்த சிறப்பு விருந்தினர் பெயரைக் கூறினாலே உங்களுக்கு அதன் உண்மைத்தன்மை தெரிந்துவிடும். அந்த நபர், வேறு யாரும் இல்லை. நமது அண்ணன் சீமான் தான். லிங்கா படத்திற்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ?? பொறுத்து பார்த்த ரஜினி, சிங்கார வேலன் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கீழ்த்தரமாக சென்றதால், அவரை அழைத்து நஷ்டஈடு கொடுத்தார். வெளியே வந்த சிங்கார வேலன், ரஜினியை புகழ்ந்து விட்டு சென்றார். ஒரு வாரம் சென்று இருக்கும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, நஷ்டஈடு பத்தவில்லை. இன்னும் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் மத்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு நஷ்டஈடு கொடுக்காமல், சிங்காரவேலனே மொத்தத்தையும் எடுத்து கொண்டதாக புகார் கூறுகின்றனர். இதற்கு மேல், ரஜினி இவர்களுக்கு ஒரு பதில் கூட கூறவில்லை. அமைதி காத்தார்.

இப்படி தான் நடித்த படங்களுக்கும், தான் தயாரித்த படங்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்த இவர், (உலகத்தில் யாருமே செய்யாத செயல் இது!! திரைத்துறையில் யாராவது ஒருவர் நஷ்டத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம் ?) கோச்சடையான் பட விவகாரத்ததிலா ஏமாற்றி விடுவார்?? அதுவும் 15 ஆண்டுக்களுக்கு முன்பே பாபாவின் நஷ்டத்திற்காக 20 கோடி ருபாய் அளவிற்கு கொடுத்தவர், இந்த 8.5 கோடியை ஏமாற்றி விடுவாரா? கண்டிப்பாக ஏதோ சட்ட சிக்கல் இருக்கிறது. அதற்காக தான் வழக்கு நீதிமன்றம் சென்று இருக்கிறது. இல்லையென்றால், இதனை எப்பொழுதோ தீர்த்து வைத்து இருப்பார். கண்டிப்பாக, சட்டத்தின் படி இந்த பிரச்சனையை எதிர் கொள்வார்.

நம் மக்களுக்கு மறதி ஒரு தேசிய வியாதி என்பதால், அவர்களுக்கு அடிக்கடி ரஜினி செய்த நல்லவற்றை நினைவு படுத்த வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

(பி.கு ) நான் ரஜினி அவர்களைப் பற்றி பல பதிவுகளை எழுதி வருகிறேன். இது பதவியை எதிர்பார்த்தோ அல்லது வேறு எதற்காகவும் அல்ல. ரஜினிக்காக உயிரை கொடுக்க கூடிய தொண்டர்கள் அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நான் என்னுடைய பதிவின் இறுதியில் என் பெயரை குறிப்பிடுவேன். நண்பர்கள் இந்த பதிவை ஷேர் செய்யும்பொழுது,என் பெயருடன் சேர்த்து ஷேர் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம், இது யாருக்காது சென்று, அது ரஜினி அவர்களுக்கு சென்று, அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டிய என் நீண்டநாள் விருப்பம் நிறைவேறாத என்ற பேராசைதான்.(நான் இதுவரை ரஜினியை தூரத்தில் நின்று கூட பார்த்தது கிடையாது). ஆனால் பல நண்பர்கள் என் பெயரை நீக்கிவிட்டு, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் எழுதியது போல் ஷேர் செய்கிறார்கள். எனக்கு அதனால் வருத்தம் இல்லை. அவர்களும் ரஜினியனைப் பற்றிய நல்கருத்துகளை பரப்ப வேண்டும் என்கின்ற ஆவலில் தான் செய்கிறார்கள். இருந்தாலும் என்னுடைய வேண்டுகோளாக இதனை வைக்கிறேன். நன்றி !!

Tuesday, February 20, 2018

வீரத்தில் மன்னன் நீ - ரஜினி

ரஜினி அரசியல்வாதிகளை எதிர்த்து, ஜெயலலிதா மரணத்திற்கு முன்பு பேசியது கிடையாது, அவர் ஒரு கோழை என்று சில தற்குறிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. இது எனக்கு தெரிந்த வரை மட்டுமே !! நான் எதையாவது பதிவு செய்யாமல் விட்டு இருந்தால் நண்பர்கள் கமண்ட் செய்யலாம்.



1) இதற்குமேல் கர்நாடாகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டால், என்னுடைய ரசிகர்களை அங்கு கூட்டி வந்து போராட்டம் செய்வேன் - 1992 காவிரி பிரச்சனையின் போது

2) தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது ( செல்வி.ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, அதிமுக அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு - 1995 மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வெடித்தபோது )

3) திரைப்பட நகருக்கு உங்களுடைய பெயர் வைத்தது மிக பெரிய தவறு. எம்.ஜி.ஆர் பெயரை வைத்து இருக்க வேண்டும்( 1995 ஆம் ஆண்டு , சிவாஜி கணேசனின் பாராட்டு விழாவில், செல்வி.ஜெயலலிதாவை மேடையில் இருக்கும் பொழுது கூறியது. அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் அது எம்.ஜி.ஆர் திரைப்பட நகர் என்று மாற்றப்பட்டது.

4) மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது - 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது

5) டாக்டர்.ராமதாஸ் வன்முறைகளின் ராஜாவாக திகழ்கிறார் - 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது.

6) "விஜயகாந்த் கலக்கி இருக்கீங்க . நல்ல ஓட்டு வாங்கி இருக்கீங்க . உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" ( 2006 - சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், அப்போதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு மேடையில் கூறியது. பல நடிகர்கள் விஜயகாந்தை போய் பார்த்து வாழ்த்து தெரிவித்தது, அவர் 2011 இல் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்புதான் என்பது குறிப்பிடத்தக்கது)

7) கலைஞருக்கு இரண்டு மிகப்பெரிய சொத்து. ஒன்று திமுக என்ற சொத்து. இன்னொன்று அழகிரி, ஸ்டாலின். இந்த சொத்து அந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். அந்த சொத்து இந்த சொத்தை காப்பாற்ற வேண்டும். (அழகிரி, ஸ்டாலின் இடையே நடக்கும் பனிப்போரை, அவர்கள் ஒத்துமொத்த குடும்பத்தையும் வைத்துக்கொண்டு 2010 ஆம் ஆண்டு அழகிரி அவர்கள் மகன் திருமணத்தின்போது கூறியது)

8) 2010 ஆம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில், அஜித் குமார் பேசிய சில தைரியமான கருத்துகளுக்கு தலைவர் அவர்கள் முதல்வர் அருகிலேயே எழுந்து கை தட்டினார் . அது மட்டும் இல்லாமல் அஜித்தின் பேச்சிற்கு ஆதரவு கூறினார். அதே நிகழ்ச்சியில் அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு எதிராக பேசினார். அதுமட்டுமல்லாமல், "அரசு ஒதுக்கிய இந்த நிலம் ஏழை தொழிலளர்களுக்கு போய் சேர வேண்டும் . இதை யாரும் ஏமாற்ற கூடாது. “உண்மையை பேசுறதுல, சத்தியம் பேசுறதுல நான் யாருக்கும் எவனுக்கும் பயப்படமாட்டேன். என் மனசுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்". என்று அரசாங்கத்தில் நடக்கும் ஊழலை முதல்வர் கலைஞரை வைத்துக் கொண்டு தைரியமாக பேசினார். ஆனால் கலைஞர் தொலைக்காட்சியோ அஜித் பேசியதை மட்டும் இல்லாமல் , ரஜினி மேற்கொண்டு கூறிய வார்த்தைகளையும் எடிட் செய்து ஒளிபரப்பியது .

9) 30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...? ( 2009 - ஆம் ஆண்டு இலங்கை அரசை கண்டித்து பேசியது. இதற்கு முன்பு சத்தியமாக எந்த ஒருவரும் இப்படி ஒரு நாட்டைப் பார்த்து ஆம்பளைங்களா நீங்க...?’ என்று கேள்வி கேட்டதாக தெரிய வில்லை )

10) வெளிய மக்கள் மழை வெள்ளத்தினால் அவஸ்தை படுறாங்க !!! இந்த நிகழ்ச்சியை சீக்கிரமா முடிச்சிங்கனா, முதல்வர் அதை போய் கவனிப்பாங்க !!! ( 2010 ஆம் ஆண்டு இளைஞன் இசை வெளியீட்டு விழாவில் அப்பொழுதைய முதல்வர் கலைஞரை வைத்துக்கொண்டு )

11) பொன்னர் ஷங்கர் இசைவெளியீட்டு விழாவில் முதல் நாள் கலைஞருடன் கலந்து கொண்டு விட்டு, மறுநாள் 2011 ஆம் ஆண்டு பொது தேர்தலில், அதிமுகவிற்கு ஓட்டு போட்டார் ரஜினி . ( அவர் யாரிடம் வேண்டுமானால் நெருக்கமாக இருப்பார். ஆனால் அதற்காக அவர்களுக்குதான் அவர் ஆதரவு தருவார் என்று நீங்கள் நினைப்பதில் அர்த்தமில்லை).

12) 2013 ஆம் ஆண்டு, தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில், ஜெயலலிதா அவர்களை வைத்துக்கொண்டு கலைஞரை புகழ்ந்தார். அவர் பேசியது , " இந்த நேரத்துல நலிந்த கலைஞர்களுக்கு இடஒதுக்கீடு செய்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13) 2008 ஆம் ஆண்டு ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆதரித்து பேசும் பொழுது, கர்நாடாகாவில் பிரச்னையில் ஈடுபடுவோரை உதைக்க வேண்டும் என்று கூறினார்( பிறகு இதற்கு வருத்தம் தெரிவித்தார்). கர்நாடகாவில் இருந்து மும்பை சென்ற ஒருவர், அநாகரிகமாக பேசுவதாக கண்டித்தார். ( அப்பொழுது மும்பையின் கவர்னராக இருந்த S.M. கிருஷ்ணாவை குறிப்பிடுகிறார்)

இதற்கு முன்பு இந்திய அளவில், சினிமா துறையில் உள்ள ஒருவர், இப்படி முதலமைச்சர்களுக்கு எதிராகவும், அரசியல் வாதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் என்று உங்களால் கூற முடியுமா?? அதுதான் ரஜினி. ஆதலால், அவர் இதற்கு முன்பு யாரையும் எதிர்த்து பேசியது இல்லை என்று கூறுவதை விட்டுவிட்டு, உங்களது பொழைப்பை பார்த்தால் நன்றாக இருக்கும்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

பச்சைத் தமிழனைக் கண்டு பிடிப்பது எப்படி - செய்முறை

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் கறுப்பர் மற்றும் வெள்ளையர் இடையே பல ஆண்டுகளாக பிரிவினை இருந்து வருகிறது. அங்கே, கறுப்பர் மற்றும் வெள்ளையர் ஆகியோரை கண்டுபிடிப்பது மிக சுலபம். பார்த்தவுடன் சொல்லி விடலாம். ஆனால் ஒருவன் உண்மையான தமிழனா?? என்று பார்த்தவுடன் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், வடகிழக்கு மாநிலம் தவிர, அனைத்து இந்திய மாநில மக்களும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். அதனால் ஒருவரை பார்த்தவுடன் தமிழன் என்று கண்டு பிடிக்க முடியாது.



ஒருவர் பிறந்த ஊரை வைத்து அவர் தமிழரா?? என்று பார்த்தோமே ஆனால், பிரபாகரன் அவர்களையே தமிழராக கருத முடியாது!! அதுவும் இல்லாமல் தமிழ்நாடு என்பது உதயமானதே அறுபது ஆண்டுகள் முன்பு தான். அப்பொழுது 60 வருடங்கள் முன்பு பிறந்தவர்கள் யாரும் தமிழர்கள் இல்லையா?
ஒருவர் பேசுவதை வைத்து அவர் தமிழர் என்று முடிவு செய்து விடலாமா? அது எப்படி?? வியாபாரம் செய்ய உதவும் மொழியை யார் வேண்டுமாலும் கற்றுக் கொள்ளலாம். அதனால் ஒருவர் தமிழே பேசினாலும், நீங்கள் தமிழர் என்று கூற முடியாது.

நேரில் பார்த்தும் கண்டு பிடிக்க முடியாது!! பிறந்த இடத்தை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது!! பேசும் தமிழை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது!!
அப்பொழுது பிரிவினை பேசும் அரசியல்வாதிகள், ஒருவன் தமிழன் என்று எதனை வைத்துக் கண்டு பிடிக்கிறார்கள். வேறு எதை வைத்து ஜாதியை வைத்துதான்!! அதனை வைத்துதான் அவன் தமிழன் என்று கண்டுபிடிக்கும் வேலையை தும்பிகள் செய்து வருகிறார்கள்.

ஒருவன் ஒரு மதத்தை விரும்பி ஏற்று கொண்டால், அவனது மதத்தை மாற்றி விடுவீர்கள்!!! ஆனால் ஒரு மனிதன் தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் ஏற்றுக் கொண்டு, நான் பச்சை தமிழன் என்று கூறினால் அவரை தமிழராக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்?? என்னங்க சார் உங்க சட்டம்??

தமிழ் போராளீஸ் !!

ஒவ்வொரு முறை காவிரி நீர் தொடர்பாக தீர்ப்பு வரும்பொழுதும், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கும். ஆனால் கர்நாடகாவில் பயங்கரமான வன்முறை வெடிக்கும். தமிழர்கள் தாக்கப்படுவார்கள். தமிழக பேருந்துகள் கொளுத்தப்படும். இதற்கு யார் காரணம் ?? கன்னட மக்களா?? கன்னடத்தில் உள்ள பிரதான கட்சிகளா ( பிஜேபி மற்றும் காங்கிரஸ் ) ??. இவர்கள் இருவருமே கிடையாது. அங்கு கன்னட மொழியை வைத்து பிரிவினையைத் தூண்டும் வாட்டாள் நாகராஜ் போன்ற ஆட்களும், அவர்கள் நடத்தும் கட்சிகளும்தான். இவர்களுக்கு உண்மையில் பார்த்தால், அவர்கள் தாய் மொழி மீது எல்லாம் அக்கறை கிடையாது. மொழியின் காரணமாக மக்களை பதற்றத்தில் வைத்து, பணம்,புகழ் சம்பாதிப்பது மட்டும்தான்.



இதே கதைதான் மராட்டியத்தில், ராஜ் தாக்ரே கட்சிக்கும். மொழி வெறி என்பது, மதம் மற்றும் ஜாதி வெறியை விட கொடியது. உலகத்தில் மிக பெரிய இன அழிப்பு(genocide) அத்தனையும் மொழியை மையப்படுத்தி நடந்தது தான். மொழிப்பற்று இருக்கலாம், ஆனால் மொழிவெறி மற்றும் அதன் மூலமாக பரவும் இனவெறி அறவே கூடாது.

தற்பொழுது தமிழ்நாட்டில் வாட்டாள் நாகராஜ் போன்று மொழியைக் கொண்டு பிரிவினையைத் தூண்டி பலன் தேடும் முயற்சியில் சீமான், திருமுருகன் காந்தி மற்றும் வேல் முருகன் போன்றோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பின்னால் இளைஞர்கள் சென்றால், தமிழ்நாட்டின் ஆணிவேரான அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட அனைத்தும் சுக்கு நூறாக உடைந்தது போகும்.

தமிழர்கள் கன்னட பேருந்துகளைக் கொளுத்தினர். தமிழர்கள் கன்னடர்களைத் தாக்கினர். கேட்பதற்கு எவ்வளவு கேவலமாக உள்ளது?? இதனை செய்யத்தான் நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் இனவெறியைத் தூண்டிக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் பின்னாலா, நீங்கள் செல்லப் போகிறீர்கள் ??
மொழிவெறியை வைத்து அரசியல் செய்யும் ஆட்களை மக்கள் அடையாளம் கண்டு,அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விடும்!!

இப்படிக்கு,
அ.அருள் செல்வன்.

ரஜினி கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டாரா??

நான் எந்த ஒரு பதிவு போட்டாலும் , சில தற்குறிகள் கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டவர் தானே இந்த ரஜினி என்று கமெண்ட் செய்கிறார்கள். அந்த அறிவாளிகளுக்கான பதில்தான் இது !!!

ரஜினி வருத்தம் தான் தெரிவித்தார், மன்னிப்பு கேட்கவில்லை என்று மற்ற புரட்சித் தமிழர்கள் போல் நான் சப்பைக்கட்டு கட்ட விரும்பவில்லை. ரஜினி மன்னிப்புதான் தெரிவித்தார். ஆனால் எதற்காக?? காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதாலா? ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல் படுத்த தன்னுடைய ஆதரவைத் தெரிவித்ததாலா?? இல்லவே இல்லை.





2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து(??) வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். ஒருவரை மேடையில் வைத்து கொண்டு அவமானப்படுத்துவது அல்லவா தமிழர் பண்பாடு(???) அதனைத்தான் பாதுகாத்தார் சத்யராஜ். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.

இதனை எதிர்த்து குசேலன் பட வெளியீட்டின் போது பிரச்சனை செய்த கன்னட அமைப்பினரிடம், எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.

தன்னுடைய ரசிகர் மன்ற சந்திப்பின் போது , ரசிகர் ஒருவர் இந்த கேள்வியைக் கேட்டார். " என்ன தலைவா? கர்நாடகாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டீங்க? அதற்கு தலைவர் சொன்ன பதில் " என்ன பன்றது? உங்களுக்கே தெரியும். மேடைல எல்லாரும் எப்படி பேசுனாங்க அப்படினு, நானும் மனுஷன் தானே ? அதான் கோபம் வந்து சில தகாத வார்த்தைகளை பேசிட்டேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது". இது தான் ரஜினியின் மனசு.

சிவாஜி படத்தை சன் தொலைக்காட்சிற்கு தரவில்லை என்கின்ற கோபத்தில் இருந்த அவர்கள், சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும் ரஜினி மன்னிப்பு கேட்டார் என்று கூறி தலைப்பு செய்தியை ஒளிப்பரப்பி, ரஜினிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலைப் படுத்தினர். அப்பொழுது சத்யராஜ், "தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். காரணம் , அவர் பிற மொழி படங்களில் நடிக்க மாட்டாராம். ஆனால் பிற மொழி நடிகைகளை மட்டும் படத்தில் கொஞ்சுவார். அந்த தன்மான தமிழன் பாகுபலி படத்தின் போது கர்நாடகாவின் காலில் விழுந்தது நாம் அறிந்ததே !!!

ஒரு தமிழனாக இருந்து கர்நாடாகாவிற்கு எதிராக குரல் கொடுப்பதை விட, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் குரல் கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம்? அதனை நாம் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருக்கலாம் அல்லவா?

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி - ! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

காலா திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகக் காட்சி !!! ஒரு ரசிகனின் கற்பனையில் !!!

மும்பையின் தாராவி கழகு பார்வையில் காட்டப்படுகிறது !!! MADRAS திரைப்படம் போல பா.ரஞ்சித்தின் குரலோடு படம் தொடங்குகிறது.
இதுதான் தாராவி !!! மும்பைல 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வசிக்கிற இடம். இங்க சுதந்தரம் வாங்குனதுல இருந்து, இந்த குடிசை பகுதிலதான் வாழ்ந்துட்டு வராங்க!!! இவங்க வாழ்க்கைத்தரத்தை உயர்த்துறேன்னு ஓட்டு வாங்கி ஜெயிச்ச ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி, இலவசத்தை மட்டும் கொடுத்து மக்களை ஏமாத்துறாங்க !!! இவங்க முன்னேற கூடாதுங்கிறதுல ரொம்ப தெளிவா இருக்காங்க.



இப்போ ஆளுங்கட்சியா இருக்கிற கட்சியோட தலைவர் ஒரு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க !!! இப்போ ஆட்சி அதிகாரம் அவங்க பசங்க ரெண்டு பேரு கைலதான் இருக்கு !!! இவங்க ரெண்டு பேரு செய்கின்ற கோமாளித்தனத்தை பார்த்து மக்கள் கொதிச்சுப்போய் இருக்காங்க !!!
எதிர்க்கட்சி தலைவருக்கு ரொம்ப வயசு ஆகி போய்டுச்சு !!! எப்படியாவது தான் இறக்குறதுக்குள்ள தன்னுடைய மகனை பதவிக்கு வர வைக்கணும்னு பார்க்குறாரு !!!ஆனா அவர் அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டார்னு மக்கள் நினைக்குறாங்க !!! அதுமட்டும் இல்லாம அவங்க ஆளுங்கட்சியா இருக்கும்போது செய்த ஊழல்களை மக்கள் மறக்கல !!!

இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லாம ஜாதிய வெச்சு அரசியல் செய்யுற ஒரு கட்சியோட மகன் !!! தமிழ் தலைவர் கூட தான் இருக்குற மாதிரி போட்டோஷாப் செய்து அதை வைத்து பொழப்பு நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு அரசியல்வியாதி உள்ளிட்ட பல பேர் இந்த மக்களை சுரண்டக் காத்துகிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட இருந்து காப்பாத்த யாராவது அரசியலுக்கு வர மாட்டாங்களா அப்படினு மக்கள் நினைச்சிட்டு இருக்கும்போது தான் கரிகாலன் என்கிற காலா, இந்த வருட தேர்தலில் நான் நிக்குறேன் அப்படினு அறிவித்து இருக்கிறார். ( அப்பொழுது ரஜினியின் முதுகுபுறம் மக்கள் வெள்ளத்தில் காட்டப்படுகிறது)1980 களில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு பஞ்சம் பொழைக்கவந்த குடும்பம்தான் காலாவோட குடும்பம். இங்க வந்து தன்னோடு உழைப்பால முன்னேறி மக்களுக்கு பல நல்லது செஞ்சுட்டு வராரு. இவர் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் இவர் கூட நண்பனா இருந்த பல அரசியல்வாதிகள், இப்போ விரோதியா மாறிட்டாங்க.

ஏன் !! காலாவின் நண்பனாக இருந்த உலகநாதன் கூட, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டக் கதையாக தானும் ஒரு கட்சி ஆரம்பிக்க போவதாக கூறிக் கொண்டு அலைகிறார். ஆனால் மக்கள் அவரை சீண்டக்கூடவில்லை. இவர் எதிர்கட்சியோட ஆளா இருப்பாரோன்னு சந்தேக படுறாங்க !!!
இதுநாள் வரைக்கும் மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேராத இந்த அரசியல்கட்சிகள், இவரை எதிர்க்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க. இவங்க கிட்ட இருந்து அந்த மக்களை எப்படி காப்பாத்துறார்னு பார்ப்போம்.

முதல் காட்சி:

அரசியல்வியாதி ( குடிசை மக்களைப் பார்த்து) - இங்க பாரு!! எங்க இருந்தோ வந்த வந்தேறிய நீங்க எல்லாம் ஆதரிச்சீங்க!! உங்க எல்லாரையும் கொளுத்திடுவேன். எங்களை தவிர இங்க ஒரு நாய் உள்ள வர முடியாது.

அப்பொழுது காலாவின் நாய் (பயங்கர பின்னணி இசையுடன் வருகிறது). அதனை பார்த்த அரசியல்வியாதி, இது என்னடா நாய் வந்து இருக்கு !!

குடிசை மக்களில் ஒருவன் - இது உனக்கு ஒரு வார்னிங் !!! நாய் வரும்போதே நீ இந்த இடத்தை விட்டு போய்டு !!! ஏன்னா !! அடுத்து வர போறது ஒரு சிங்கம் !!! அதுகிட்ட நீ சிக்குன்ன சின்னாபின்னமா ஆயுடுவ !!!

அரசியல்வியாதி: வரட்டும்!! என்ன ஆகுதுன்னு பாப்போம் !!!

மக்கள் - (மனதிற்குள்) இவன் இவங்க ஆத்தா,அப்பத்தாகிட்ட போறது நிச்சயம்
(யமஹா RX 100 பைக் வேகமாக வருகிறது. தலைவரை பின்னால் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் வேகமாக ஒட்டி வருகிறான். தலைவரின் முகம் தவிர கால், கை என்று அனைத்தும் காட்டப்படுகிறது. வண்டி அரசியல்வியாதி இருக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறது. தலைவரின் நாய் ரஜினியின் காலைப் போய் கொஞ்சுகிறது. ரஜினி நாயைத் தூக்கி ஒரு முத்தம் இடுகிறார்).

ரஜினி - உனக்கு இருக்கிற நன்றி, இங்க மனுஷனுக்கு இல்லாம போச்சே !!!
ரஜினி அரசியல்வியாதியிடம் ஸ்டைலாக நடந்து வருகிறார்.
அரசியல்வியாதி - நீ எதுக்குடா இந்த மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரணும்னு நினைக்கிற?? அதுக்கு நாங்க இருக்கிறோம் !! நாங்க பார்த்துக்குறோம் !!! நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தோம், உன்ன இல்லாம பண்ணிடுவோம் !!
ரஜினி - என்னை எதிர்க்க ஒன்னு சேர்ந்த நீங்க, மக்களுக்கு நல்லது செய்ய ஒன்னு சேர்ந்து இருந்தீங்கனா, நான் ஏன்டா அரசியலுக்கு வர போறேன்
அரசியல்வியாதி - அவங்களுக்கு நல்லது செய்ய நீ யாருடா!!
ரஜினி - உலகத்துக்கு ஒரு பிரச்சன்னைனா நான் மனுஷன் !!!
இந்தியாவுக்கு ஒரு பிரச்சனைனா நான் இந்தியன் !!!
தமிழனுக்கு ஒரு பிரச்சனைனா நான் தமிழன் !!!
அரசியல்வியாதி - டேய்!! இந்த வந்தேறிய அடிச்சு போடுங்கடா !!
ரஜினி - நான் வந்தேறி இல்லடா !! ஊழல் செய்யுற உங்கள மாதிரி ஆளுங்கள அடிக்க வந்து இருக்கிற காட்டேரி !!!
ரஜினி அனைவரையும் அடிச்சு துவம்சம் செய்கிறார். படத்தின் முதல் பாடலில் தியேட்டர் ரணகளம் ஆகிறது
இப்படிக்கு ,
அ.அருள்செல்வன்

Wednesday, February 7, 2018

ரஜினியை ஏன் ஆதரிக்கிறோம் ??

நான் ரஜினியைத் தொடர்ந்து ஆதரித்து எழுதி வருவதைப் பார்த்த சில பேர், இவன் ஒரு படித்த முட்டாள், நடிகர்கள் பின்னால் செல்பவன் என்று தொடர்ந்து நாகரிகம் இல்லாமல் கூறி வருகிறார்கள்.. இவர்களுக்கான பதிவு தான் இது.



நான் ஒரு படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள். என்னவோ ரஜினிக்கு எதிராக களத்தில் காமராஜரும், அண்ணாதுரையும் இருப்பதை போலவும், நான் அவர்களை விட்டு விட்டு ரஜினியை ஆதரிப்பது போலவும் கூறி வருகிறார்கள். களத்தில் ரஜினியோடு நிற்கும் ஒரே ஒரே தலைவராவது, உழைத்து சம்பாதித்து கட்சி நடத்துபவராக இருக்கிறாரா?(நடிகர்களைத் தவிர). நல்லகண்ணு அய்யா இருக்கிறாரே?? என்று கூறுவார்கள். கடைசியாக அவருடைய இடதுசாரி இயக்கம், தேர்தலில் நிற்க அவருக்கு சீட்டு கொடுத்தது எப்பொழுது என்று உங்களுக்கு தெரியுமா? இடதுசாரி இயக்கம் முதலில் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கத் தயாரா? ஏண்டா? தேர்தலியே நிற்காத ஒருவரை எப்படி ஆதரிக்க முடியும்?? ஏன் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு சீட்டு கொடுக்கவில்லை என்று இடதுசாரிகளை எதிர்த்து இந்த திடீர் தமிழர்கள் என்றாவது கேட்டு இருக்கிறார்களா?

நம் ஆதரவு ரஜினி என்னும் நடிகருக்கு மட்டும் அல்ல. 25 வயது வரை ஒரு பேருந்து நடத்துனராக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து விட்டு, மொழி தெரியாத மாநிலத்தில் தன்னுடைய கருமையான நிறத்துடன் வந்து, தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் அவரது தன்னம்பிக்கைக்கு தான் நம் ஆதரவு.
இந்தியாவில் மிகவும் பிரபலமானத்துறை எது?? ஏன் உலகத்திலேயே மிகவும் பிரபலமானத்துறை எது. கலைத்துறை தானே? 100 கோடி வைத்து இருந்தால், நீங்கள் ஒரு பெரிய கட்சியிடம் சீட்டு வாங்கி, அமைச்சர் ஆகி விடலாம். ஆனால் 1000 கோடி இருந்தாலும், சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வளம் வர முடியுமா? காசு, பணத்தால் நிலைக்க கூடிய பதவியா அது? கடின உழைப்பு மட்டும் இல்லையென்றால் சாத்தியப்பட கூடிய ஒன்றா அது?? அந்த கடின உழைப்பைதான் நாம் ஆதரிக்கிறோம்.
நீ சிறு வயதில் இருந்து அவரையே நேசித்து வருகிறாய், உனக்கு பக்குவம் இல்லையா?? என்று ஒரு நண்பன் கேட்கிறான். நான் ரஜினியுடன் சேர்ந்து ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு நடிகர்களையும் நேசித்து வந்து உள்ளேன் (கார்த்திக், பிரபு இன்னும் பலர்), ஆனால் ரஜினி ஒருவர் தான் இன்றுவரை தமிழ் சினிமாவில் ராஜாவாக உள்ளார். பின், அவரை எதற்காக நாம் வெறுக்க வேண்டும்??

எம்ஜியாருக்கு பிறகு அரசியலில் வந்து தோற்றுப் போன நடிகர்களும், ரஜினியும் ஒன்றா?? சிவாஜி, பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,விஜயகாந்த்(கமல் உட்பட) என்று அனைவரும் மார்க்கெட் போனவுடன் அரசியலுக்கு வந்தவர்கள் . ரஜினி மட்டும் தான் எம்ஜியாருக்கு பிறகு திரையுலகில் ராஜாவாக இருக்கும்போதே அரசியலுக்கு வருபவர். எனவே தயவு செய்து இனிமேல் அவர் ஒரு கூத்தாடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவர் இந்தியாவிலேயே பிரபலமான, வெற்றி பெறுவதற்கு கடினமான ஒரு துறையில், 40 வருடமாக சிங்கமாக இருக்கும் ஒருவர்.(வேறு யாரவது இந்தியாவில் 40 வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்களா??) எனவே அவரையும் மற்ற நடிகர்களையும் ஒப்பிடுவதே மிக பெரியத் தவறு.

வெளிநாடுகளில் எல்லாம் நடிகர்கள் அரசியலில் ஜெயிப்பது இல்லை என்று நண்பன் கூறினான். இவர்கள் எல்லாம் WHATSAPP கோஷ்டிகள். ஹாலிவுட் நடிகர் ரொனால்டுட் ரீகன் 8 வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார். ஏன்?? அர்னால்டு கூட, அமெரிக்காவில் கவர்னராக இருந்து இருக்கிறார். ஆதலால், சினிமாவில் ஜெயித்து, அரசியலுக்கு வருபவர்களை, நீங்கள் கேவலமாக பார்ப்பது ஆச்சிரியமாக உள்ளது.

இறுதியாக, நாங்கள் ஒன்றும் வேலைவெட்டி பார்க்காமல், படிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல், ரஜினியை ஆதரிக்கவில்லை. அனைத்தையும் செய்து கொண்டு, நேரம் கிடைக்கும் நேரத்தில் ரஜினியை ஆதரிக்கிறோம். உலகம் முழுக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காதா?? என்று பலர் ஏங்கி கிடைக்கும் ஒரு துறையில், 40 வருடமாக முன்னணியில் இருக்கும் ஒரு ராஜாவை ஆதரிக்கிறோம். 20 வருடமாக அவர் பற்றிய செய்திகள் முழுவதையும் படித்து, அவரைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு காவலன் என்ற முறையில் அவரை ஆதரிக்கிறோம்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Thursday, January 25, 2018

நாம் தமிழர் - யார் தமிழர்??

பொங்கல் தினத்தன்று நான், என் மனைவி, எனது ஆறு மாத குழந்தையுடன் சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டு இருந்தேன். பூந்தமல்லி அருகே செல்லும்போது எங்கள் முன்னாள் ஒரு வெள்ளை நிற MARUTI SWIFT சென்று கொண்டு இருந்தது. அதன் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து "நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்" என்ற வாசகம் எழுதி இருந்தது. நான் என் மனைவியிடம், " இந்த மாதிரி தமிழன் என்று தன்னை விளம்பரப்படுத்துறவன் எல்லாம் மக்களை ஏமாத்துறவான தான் இருப்பான். இல்ல!! தமிழன் அப்படினு சொல்லி மக்கள் கிட்ட பணம் புடுங்குறவனா தான் இருப்பான். இவர்களால் தமிழிற்கு ஒரு பிரயோஜனம் கிடையாது. தமிழுக்காக உழைப்பவன், எந்த பிரதிபலனும் பாராமல், தன்னை விளம்பரப்படுத்தாமல், வேலை செய்வான்" என்று கூறினேன். அதற்கு என் மனைவி, " உங்களுக்கு வேற வேலையில்லை. சும்மா போங்க !!! என்று கூறிவிட்டாள் . அதற்கு மேல் அதனைப் பற்றி பேசவில்லை.



பூந்தமல்லியை தாண்டி திருமழிசை திரும்புவதற்காக என்னுடைய வண்டியை வலது பக்கமாக நிறுத்தி சிக்னலுக்காக காத்து இருந்தேன். அப்பொழுது எங்கள் காரின் பின்னால் வந்து ஒரு கார் வேகமாக மோதியது. என் மனைவியும், குழந்தையும் நிலை தடுமாறி காரின் DASHBOARD வரை சென்று வந்தனர். நான் காரை நிறுத்திவிட்டு , பின்னால் யார் என்று பார்க்கலாம் என்று இறங்கினேன். அப்பொழுது, எங்கள் முன்னாள் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்ற அதே வெள்ளை நிற MARUTI SWIFT கார் தான், இப்பொழுது எங்களைப் பின்னால் இடித்து இருப்பது தெரிய வந்தது. அந்த காரில் இருந்தவன், உடனடியாக REVERSE எடுத்து, இடது புறம் திரும்பி, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக அங்கு இருந்து சென்று விட்டான். ஒரு மன்னிப்பு இல்லை. குழந்தை இருக்கும் காரில் யாருக்காக அடிப்பட்டு விட்டதா?? என்று கேட்கவில்லை. அவசரத்தில் காரின் நம்பரை பார்க்க மறந்து விட்டேன். அந்த கார் தூரத்தில்செல்லும் பொழுது என்னுடைய கண்ணில் தெரிந்தது ஒன்றே ஒன்றே தான்.அந்த காரின் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து "நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்" என்று இருந்த அந்த வாசகம் தான். இனிமேல் நீங்கள் இந்த அடையாளங்களைக் கொண்ட ஒரு காரை காண நேர்ந்தால், மனிதன் என்ற போர்வையில் ஒரு மிருகம் வண்டியில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்த்து விட்டு, வண்டியில் ஏறி அமர்ந்தேன். காரில் சிறிது நேரத்திற்கு பயங்கர அமைதி நிலவியது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் மனைவி," நீங்க சொன்னது சரிதாங்க, திருட்டு பசங்களா இருக்காங்க" என்று கூறினார்.

இதேபோல், தமிழ்நாட்டில் யார் உண்மையான தமிழன் , யார் விளம்பரம் பார்க்காமல் உழைக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் பணம் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் இன உணர்வைத் தூண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது என் மனைவிக்கு புரிந்த மாதிரி மக்களுக்கும் வெகு விரைவில் புரியும்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

Saturday, January 20, 2018

ரஜினியின் அரசியல் தலைவர் யார்?

நாத்திகவாதியான கமல்ஹாசன் அவர்கள் நிறைந்த அமாவாசையான நேற்று கட்சியைப் பற்றி அறிக்கை வெளியிட்டார் என்று என் நண்பர்களிடம் கூறினேன். அதற்கு நிறைய கமல் ரசிகர்கள் அவருடைய அரசியல் குருவான எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் கட்சியைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று என்னிடம் கூறினார்கள். சரி, ரஜினியின் அரசியல் குரு யார்??



ரஜினியின் பில்லா படம் ரிலீஸ் ஆன சமயத்தில், எம்,ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்தி சில போஸ்டர்கள் சென்னை முழுவதும் தயாரிப்பு நிறுவனத்தால் ஒட்டப்பட்டன. அதனைப் பார்த்து கோபம் அடைந்த ரஜினி, என் படத்துக்கு என்னை பார்த்து யார் வராங்களோ வரட்டும். மத்தவங்க படத்தை போட்டு தயவு செஞ்சு, இந்த மாதிரி விளம்பரம் போடாதீங்க !! அப்படி என்று தெரிவித்தார். இதுநாள் வரை ரஜினி அவர்கள் தன்னுடைய படங்களில், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியது கிடையாது.

ஆனால், தற்போது உச்சியில் இருக்கும் சில நடிகர்கள், தான் நடிக்க வந்த புதிதில் தன்னை ரஜினியின் ரசிகனாகக் காட்டி கொண்டு, படங்களில் ரஜினியின் போஸ்டர் மற்றும் ரஜினி பட காட்சிகளைப் பயன்படுத்தினார்கள். தற்போது, அவர்கள் ரஜினியை விட பெரிய நடிகராகி விட்டதாக நினைத்துக் கொண்டு, தங்களின் படங்களில் எம்.ஜி.ஆரின் ரசிகனாகக் காட்டிக் கொண்டு, அவருடைய படத்தின் காட்சிகளை பயன் படுத்துகிறார்கள். உண்மையில், அவர்கள் ரஜினி பட வசூலின் 25% தொகையைக் கூட தொடவில்லை என்பது தான் உண்மை.

அதேப் போல, தான் அரசியலுக்கு வருவதைப் பற்றி அறிவிக்கும்போதும், அவர் யாரையும் தன்னுடைய அரசியல் தலைவனாகக் குறிப்பிடவில்லை. எந்த தலைவர் பெயரைக் கூறி விளம்பரம் தேடவில்லை. அவராக, என்னுடையது ஆன்மிக அரசியல் என்று அறிவித்தார். இனிமேலும் எந்த தலைவர் பெயரையும் நிச்சயமாக சொல்லி ஓட்டுக் கேட்கமாட்டார். அவரை நம்பி யார் ஒட்டுப் போடுகிறார்களோ, அதுபோதும் என்று கூறி விடுவார். அதுதான் ரஜினி. அதுதான் ரஜினியின் குணம். தன் சொந்த காலிலேயே நிற்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர் தான் ரஜினி.
ரஜினியின் அரசியல் தலைவர் என்றுமே ரஜினிதான்.

ஆனால் மற்றவர்கள், எம்,ஜி,ஆர், பெரியார்,அண்ணா, பிரபாகரன் இவர்களைப் பயன்படுத்தி மக்களிடம் ஓட்டுக் கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் கூறி கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்குனு ஒரு பெயர் சம்பாதிச்சுக்குங்க!! மத்தவங்க உழைப்பை சுரண்டாதீங்க!!!!

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் !!!

ரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் !!! அவர் இன்னும் கொஞ்சம் நாள் தான் இருப்பார் !!! இளைஞர்கள் தான் நாட்டை ஆளனும்.
இது போன்ற ஓலங்கள் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த நாளில் இருந்து சில பேரிடம் வந்து கொண்டு இருக்கறது. அவர்களுக்கான பதில் தான் இது .

1977 ஆம் ஆண்டு நாட்டில் அவரச நிலை பிரகடனப் படுத்த போது, மிகுந்த வலிமை மிக்க இந்திரா காந்திய எதிர்த்து இந்தியாவே வியக்கும் வண்ணம் போராட்டம் நடத்தியது மூன்று இளைஞர்கள். பீகாரில் இருந்து ஒரு இளைஞன் , உத்தரப்பிரதேஷில் இருந்து ஒரு இளைஞன், மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு இளைஞன். அந்தந்த மாநில மக்கள் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். நமக்கு சேவை செய்ய தேவ தூதுவன் வந்து விட்டான் என்று எண்ணினார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் பெயரை சொன்னால் தற்போது அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசாமிகள் என்பது உங்களுக்கு புரிந்துவிடும். பீகாரில் இருந்து வந்த இளைஞன் பெயர் லாலு பிரசாத் யாதவ், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் முலாயங் சிங்க் யாதவ் , மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இளைஞன் பெயர் சீதாராம் யெச்சூரி. என்ன ஒரு நிமிஷம் தலை சுத்திடிச்சா?

இளைஞர்கள் கையில் நிர்வாகத்தை கொடுத்தால் இப்படி தான் நடக்கும். அவர்களும் மனிதர்கள் தான் என்பதால் பணம், புகழ் வந்தவுடன், தான் மக்களுக்கு சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்துவிட்டு வயதை அனுபவிக்க நினைப்பார்கள். அரசியலை பொறுத்தவரை இளைஞர்கள் செயல்படுகின்ற விதத்தில் இருக்க வேண்டுமே தவிர, முடிவு எடுக்கின்ற ம இருக்க கூடாது. அதனால்தான் உலகம் முழுவதும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வயது என்பது கிடையாது.

ரஜினி அவர்கள் பணம், புகழ் அனைத்தையும் பார்த்து விட்டார்.ஏன் ? ஒரு முறை மரணத்தைக் கூட அருகில் சென்று பார்த்து விட்டார். ஆதலால், நிச்சயமாக மக்களுக்கு சேவை செய்கின்ற நல்ல தலைவராக அவர் இருப்பார். ஒரு முறை மரணத்தில் இருந்து மீண்டு வந்தவன் , தவறு செய்ய வேண்டும் என்று நினைப்பானா?

               


அவர் இந்த வயதில் செயல்படுவாரா என்று , ரஜினியை விட வயதில் மூத்த தலைவரை செயல்தலைவராகக் கொண்ட கட்சிக்காரர்கள் கேட்கிறார்கள். அவர் நிட்சயமாக புதிய உத்வேக த்துடன் பழைய ரஜினியாக செயல்படுவார் என்பது கடந்த சில நாட்களாக கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக அவருக்கு கீழே நன்றாக செயல்பட கூடிய காவலர்களை வைத்துக்கொள்வார்.

இதற்கு ஒரு படி மேலாக , அவர் சீக்கிரம் இறந்து விடுவார் என்று சில பேர் பேசுவது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். மரணம் என்பது நிலையானது அல்ல, யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பது அவர்களுக்கு புரியவில்லை. ரஜினியின் வயதில், நீங்கள் எல்லாம் கை , கால் நன்றாக இருந்து நடந்தாலே அது பெரிய விஷயம் தான். ரஜினிக்கு ஒரு வயசு ஏறிச்சினா , உங்களுக்கும் ஒரு வயசு ஏறதான் போகுது. நீங்களும் வயசானவனா ஆகத்தான் போறீங்க. உங்க எல்லார்க்கும் ரஜினியோட வயசுல உங்க வீட்ல ஒரு அம்மாவோ, ஒரு அப்பாவோ இருக்காங்க !! அத நினைச்சு பேசுங்க !!! இல்லை, அவங்களும் சீக்கிரமா சாகனும்னு நீங்க விரும்புறீங்களா?

தமிழன்!!! தமிழன் என்று கூறிக்கொண்டு கடவுள் நமக்கு கொடுத்துள்ள இந்த அறிய வாய்ப்பை தவறவிட வேண்டாம். ரஜினிக்கு ஆட்சி நடத்த தெரியுமோ !!!! இல்லையோ !!! ஆனா நிச்சயம் மக்களோட வயித்துல அடிக்க மாட்டார்.
இப்படிக்கு,
அ .அருள்செல்வன்

ரஜினியும், பெரியார் கொள்கைகளும் !!!

நான் கடந்த சில நாட்களாக ரஜினிக்கு ஆதரவாக வெளியிடும் பதிவுகளால், நான் பெரியாரின் மீது வைத்துள்ள மதிப்பையும், நான் பெரியாருக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகளையும், என் குறும்படங்களில் சமயம் கிடைக்கும்பொழுது எல்லாம் பெரியார் பற்றி காட்சிகள் வைத்ததையும் பல நண்பர்கள் மறந்து விட்டார்கள். ரஜினி ஏதோ பெரியாரின் கொள்கைகளுக்கு எதிரானவர் என்பதை போல பரப்புகின்றனர்.அவர்களின் விமர்சனத்திற்கான பதில்தான் இது!!!

 
இன்று சென்னையில் நடைப்பெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். எந்த வருடம் ஆனாலும் பெரியாரின் புத்தகம் வாங்காமல் நான் திரும்பியது இல்லை. இந்த வருடம் நான் வாங்கியப் புத்தகம் " பெரியார் இன்றும் என்றும்". பல நாட்களாக வாங்க நினைத்திருந்தேன். இன்று விலை சற்று குறைவாக இருந்ததால் வாங்கினேன். நான் பெரியாரின் புத்தகங்களை படிக்கும் விதமே தனி. ஏனென்றால் என்னிடம் உள்ள பெரியார் புத்தகங்கள் எல்லாம் ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. கட்டுரை வடிவிலானவை. தினமும் காலையில் எதாவது ஒரு பெரியார் புத்தகத்தை எடுப்பேன். ஏதாவது ஒரு பக்கத்தை திறப்பேன். அந்த ஒரு கட்டுரையை மட்டும் படித்து முடிப்பேன். அவர் எழுதி இருப்பது தற்போது நடைமுறைக்கு சாத்தியமானதா?? என்று பார்ப்பேன். சாத்தியமானதாக இருந்தால் அதனை மனதில் ஏற்றுக் கொள்வேன். இல்லை என்றால் அதனை மறந்து விடுவேன்.
ஏனென்றால் "யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும்,உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே" என்று பெரியாரே பேசி இருக்கிறார். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தான் எடுத்தக் கொண்ட உண்மையான கொள்கைக்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார் மட்டும்தான்.

ரஜினி பெரியார் கூறிய ஒரு சிலக் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறார்.அதற்காக அவர் பெரியாரை வெறுத்து ஒதுக்குபவர் அல்ல. பெரியார் கூறிய அனைத்துக் கருத்துகளையும் மறுப்பவரும் அல்ல. ரஜினிக்கு எது சரி என்று படுகிறதோ, அதனை நேர்மையாக செய்கிறார். இதனை பெரியார் பட விழாவில், ரஜினி மிக அழகாக சொன்னார். " பெரியார் படைத்தது ஒரு விருந்து, அதில் நமக்கு எது பிடிக்கிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், ரஜினி கைப்பட எழுதிய கடிதத்தை பெரியார் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்த அனுமதித் தந்தார். பெரியார் மீதான ரஜினியின் மரியாதைக்கு சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு தான்.

ஆனந்த விகடன்’ வார ஏட்டில்" திரைப்பட இயக்குனர் வேலு. பிரபாகரன் 2006-இல் அளித்த பேட்டி!!!

நிஜமாகவே ரஜினி எங்கே வருவார், எப்போ வருவார்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவார். தரணும்னு நினைக்கிறதைக் கண்டிப்பா தருவார். அவரை இப்போதான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நம்ம ஊர்ல நல்லவங்களை எப்பவும் லேட்டாத்தானே புரிஞ்சுக்க முடியுது...!”
பெரியாரின் உயிர்நாடியான கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே வைத்து ‘காதல் அரங்கம்’ என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதில் நான் பெரியார் வேடத்திலேயே வந்து அவர் கருத்துக்களைப் பேசுகிறேன்.
ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவ்வளவு பொருளாதாரப் பிரச்சினைகள்! எவ்வளவோ பேரிடம் உதவி கேட்டேன். கதையைக் கேட்டு நெகிழ்ந்தவர்கள், பணம் என்றதும் விலகி ஓடிவிட்டார்கள். இந்த நெருக்கடியான சமயத்தில் தான் ரஜினியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மனுஷனை எவ்வளவோ எதிர்த்துப் பேசியிருக்கிறேன். அறிக்கைப் போர் நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறேன்.

ஆனால், அதையெல்லாம் மறந்து, என்னைப் பார்த்த கணத்திலேயே, ‘உங்க படம் என்னாச்சு வேலு?’ என்று உண்மையான கலைஞனின் அக்கறையோடு கேட்டார். அத்தனை பிரச்சினைகளையும் கொட்டித் தீர்த்தேன். என் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தவர், ‘சொல்லுங்க வேலு... நான் என்ன பண்ணணும்?’னு கேட்டார். ‘நீங்க லேபுக்கு போன் பண்ணி, படம் ரிலீசானதும் வேலு பிரபாகரன் பணத்தைச் சரியா கொடுத்திடுவார்’னு ஒரு உறுதிமொழி மட்டும் கொடுங்க, போதும்’ என்றேன். ‘அதெல்லாம் எதுக்கு? எவ்வளவு பணம் வேணும் சொல்லுங்க, நான் தர்றேன். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். எவ்ளோ பெரிய மனுஷன். அவரைப் பத்தின படம், ஜனங்க பார்வைக்கு வந்தே ஆகணும்’ என்றார். நான் தொகையைச் சொன்னதும், அங்கேயே, அப்போதே அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவினார் ரஜினி.

ஆடிப் போய் விட்டேன். வள்ளலாரின் சமாதிக்குப் போனபோது, தனி மனிதனுக்குச் செய்யும் மரியாதையாக எண்ணி, மறுக்காமல் நெற்றியில் விபூதி பூசிப் போன பெரியாரின் கடல் போன்ற குணத்தை ரஜினியிடம் அன்று நான் பார்த்தேன்.

மனசுவிட்டுச் சொல்கிறேன்... பெரியாரின் பேரையே நித்தமும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களிடம் என் சினிமா கனவுக்காக மூன்று லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினேன். என் வீட்டின் பேரில்தான் அதை வாங்கினேன். அதற்குக் கட்டிய வட்டியிலேயே வீடு மூழ்கிப் போனது. என் வீட்டை அபகரித்துக் கொண்டது அந்த அமைப்பு. முழு ஆன்மிகவாதியான ரஜினியோ பகுத்தறிவைப் பரப்பும் எனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மிகப் பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்.

‘கடவுளை மற... மனிதனை நினை’ என்றார் பெரியார். ரஜினி, என்னைப் போன்ற மனிதனை நினைத்திருக்கிறார். ஆன்மிகவாதி என்று மட்டுமே பார்க்கப்படுகிற அந்த நல்ல மனிதருடைய இன்னொரு அற்புதமான முகத்தை தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் இப்போது உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன்!” என்கிறார் வேலு பிரபாகரன் நெகிழ்ச்சி கொப்பளிக்கும் குரலில்! என்று பேட்டியை முடித்தார்.
இப்பொழுது புரிகிறதா?? யார் உண்மையான பெரியாரின் தொண்டன் என்று?? பெரியார்!! பெரியார்!! தமிழ் தான் என் உயிர்' மூச்சு என்று கூவி கொள்ளும் ஆயிரம் புரட்சி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கலாம், ஆனால் பெரியாருக்காக தன் சொந்த பணத்தைக் கொடுத்து உதவியது நீங்கள் எல்லாம் கன்னடன் என்று கூறும் ரஜினிகாந்த் அவர்கள் தான்!!!

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...