Tuesday, October 24, 2017

கடன் பட்டார் நெஞ்சம் போல்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - கம்பர், கம்பராமாயணத்தில் எழுதி இருப்பது. நெஞ்சம் கலங்குவதை விவரிக்க எத்தனையோ உவமைகள் இருக்கும் போது கம்பர் அன்று பயன்படுத்தியது கடன் பட்டவரின் நெஞ்சம் தான். ராமர் வாழ்ந்ததாக கூறப்படும் அந்த காலத்திலேயே அந்த நிலைமை என்றால், தற்போது நிலைமை எப்படி என்பதற்கு நேற்று திருநெல்வேலியில் எரிந்த அந்த நான்கு ஜீவன்களே சாட்சி. ஏன் ? உயிரோடு இருக்கும் நானே கூட ஒரு சாட்சி தான்.


                                             


டெங்கு கொசுக்களின் கூடாரமாக உபயோகிக்கப்படாத கிணறு இருப்பது போல, கந்து வட்டி காரர்களின் மொத்த கூடாரமாக இருப்பது தென்னக ரயில்வே. இதனை ரயில்வேயில் பணிபுரியும் அனைவரும் ஒத்துக் கொள்வர். அந்த ரத்தம் குடிக்கும் கொசுக்களிடம், ரயில்வேயில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய கால் ஊனமுற்ற என் தந்தை சிக்கிக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் சம்பள நாளை எதிர்பார்த்து காத்து இருக்கும் குழந்தைகள் மத்தியில், சம்பள நாள் வரக்கூடாது என்று நானும், எனது இரண்டு அண்ணன்களும் கடவுளை வேண்டி கொள்வோம். வாங்கிய, அனைத்து சம்பளத்தையும் வட்டிக்காரர்கள் எடுத்து கொள்வது அல்லாமல், வீட்டிற்கு வெளியே அவர்கள் வந்து சத்தம் இடும் பொழுது, சிறு குழந்தைகள் ஆன எங்கள் நெஞ்சு வெடிப்பது போல இருக்கும். உனது வீட்டு பெண்மணிகளை வைத்து நீ தொழில் செய்து வட்டி கட்ட வேண்டி தானே என்று கூறும் நபரின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு, அவனை ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கும் எங்களது அப்போதைய நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கனவில் மட்டும் அவன் தலையை தினமும் வெட்டுவதை போல நினைத்துக் கொண்டு உருங்குவேன்.

இது மட்டுமா?? 10 மீட்டர் கூட நடக்க முடியாத என் ஊனமுற்ற அப்பாவின் மிதிவண்டியை பிடிங்கி கொண்டார்கள். அவரிடம் பேருந்தில் செல்வதற்கோ, பஸ்சில் செல்வதற்க்கோ அப்பொழுது காசு இல்லை. ஐந்து கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு தவழ்ந்து வந்தார்.1996 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண காத்து இருக்கும் போது, எங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு பெரிய பொருளான கருப்பு/வெள்ளை சிறிய தொலைக்காட்சிப் பெட்டியை கடன் காரர்கள் தூக்கிக் கொண்டு பொய் விட்டார்கள். சச்சினின் ஆட்டத்தை காணக் காத்து இருந்த, நான்காவது படித்துக் கொண்டு இருந்த என் மனம் எப்படி துன்பப்பட்டு இருக்கும் என்பதை விவரிக்க இயலாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எங்கள் வீட்டிற்கு வட்டியைக் கேட்டு மிரட்ட வந்தவர்கள் கூட்டத்தில் என்னுடன் படிக்கும் ஒரு நண்பனும் இருந்தான்.

இதை எல்லாம் மீறி நாங்கள் உயிர் வாழ யார் காரணம்? எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்த எங்கள் அம்மா தான். கடன் காரங்க இப்படி பேசுறாங்களே?? நாம செத்து போய்டலாமா?? என்று நாங்கள் கேட்டால், அவர்கள் முன்னாடி தான் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார் அம்மா. எந்த நிலையிலும் எங்கள் படிப்பு கெடாமல் பார்த்துக் கொண்டார். எந்த அரசியல்வாதி அல்லது சினிமா நடிகரின் விலாசம் கிடைத்தாலும் , அவர்கள் மூலமாவது ஏதாவது ஒரு உதவி கிடைக்குமா? என்று தன்னுடைய மழலை கை எழுத்தில் கடிதம் எழுதுவார். ( இது வரை கலைஞரிடம் இருந்து மட்டும் சிறு உதவி வந்ததாக ஞாபகம்). யாராவது குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் இருப்பார்களா ? என்று தேடி பார்த்து, அவர்களிடம் கடன் வாங்கி கந்து வட்டிக்காரர்களின் கடனை அடைப்பார். கடன் தொல்லை தாங்காமல் தூக்கு மாட்டிய என் தந்தையை காப்பாற்றி, அவருக்கு வாழ்வதற்கான அவசியத்தை கூறினார். இப்படி எங்களுக்கு தைரியம் ஊட்டி வளர்த்ததால், நாங்கள் படித்து வேலைக்கு சென்று, அனைத்து கடனையும், வட்டியோடு அடைத்தோம்.

எங்களுக்கு கந்து வட்டி கொடுத்தவர்கள் , இன்றும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெண்களை வைத்து தொழில் செய் என்று கூறிய அந்த நபர் , இன்று என் அம்மாவை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைக்கிறார். என் தந்தையிடம் மிதிவண்டியை பிடுங்கிய அந்த நபர், என் தந்தை காரில் சென்று வருவதை பார்க்க முடியாமல் திரும்பி கொள்கிறார். எனது அன்னை மற்றும் அன்று இல்லை என்றால், நாங்களும் என்றோ தீக்கு இரையாகி இருப்போம். ஆனால், அன்று புகைப்படம் எடுக்காமல், எங்களைக் காப்பாற்ற சிலபேர் இருந்து இருக்கலாம்.

இவற்றை எல்லாம் கூறி, நெல்லையில் தற்கொலை செய்து கொண்டவர்கள், செய்தது மிக பெரிய தவறு என்று நான் கூறவில்லை. அவர்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருந்தது என்று நமக்கு தெரியாது. ஆனால் குழந்தைகளைக் கொளுத்துவது என்பது மிக கொடூர செயல். இது தான் கடன் தொல்லையால் சாகின்ற முதல் குடும்பம் கிடையாது. சென்ற மாதம் கூட ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து இறந்து போனார்கள். நெல்லையில் இவர்கள் சாக தேர்ந்து எடுத்த முறைதான் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. நேற்றில் இருந்து நான் பார்க்கும் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் டிஜிட்டல் இந்தியா மற்றும் மோடியை வசைப்பாடி தான் எழுதப்படுகிறதே தவிர, வேற எதற்கும் பயன்படவில்லை.

இந்த பதிவின் மூலமாக நான் கேட்டு கொள்வது என்னவென்றால், வழக்கம் போல நாம் எதற்கு எடுத்தாலும், இந்த கையாலாகாத தமிழக அரசை நம்பிக் கொண்டு இல்லாமல், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல பேர் ,வட்டிக்கு விடும் தொழிலை செய்கிறார்கள். அவர்களிடம் குறைத்த வட்டிக்கு பணம் தர வலியுறுத்துவோம். மற்றும் கடன் கொடுப்பவரின் சூழ்நிலை அறிந்து பணத்தை வசூலிக்க வேண்டுவோம். இவர்கள் யார் மற்றவர்களை திட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு? யாரவது பணம் திருப்பி கொடுக்கவில்லை என்றால், சட்டத்தின் மூலமாக அணுக சொல்வோம். பிரதம மந்திரியின் முத்திரா லோன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அது ஒரு மிகவும் அருமையான திட்டம். குறைந்த வட்டி மற்றும் குறைந்த ஆவணங்களை வைத்து ஏழைகளுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. அந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை என்னுடைய அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...