Saturday, September 2, 2017

நீட் - நம் தலையெழுத்து

DISCRIMINATION - நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்துவிட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்த வார்த்தை இதுதான். இந்தியா முழுவதும் அனைவருக்கும் பொதுவான கல்வி கொடுக்காமல் இருப்பது DISCRIMINATION இல்லையாம். ஆனால் பொதுவான நுழைவு தேர்வு நடத்தாமல் இருப்பது DISCRIMINATION ஆகுமாம். தற்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பைப் பார்த்தால், அவர்கள் அனைவருக்கும் ஒரு சட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தினால், ஒருவர் கூட தேர மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களாவது பொதுவான பாடத் திட்டத்தின் கீழ் மாற்றாமல், பொது நுழைவுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிக பெரிய துரோகம். நீதிமன்றமே இதுபோல் செயல்படும் பொழுது மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நாம் சமத்துவதை எதிர்பார்ப்பது நம்மை சவ குழியில் தள்ளும் என்பதற்கு நம் தங்கை அனிதாவின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு.

                                       


அனிதா மருத்துவர் ஆகாமல் போனதில் வேண்டும் என்றால் மத்திய,மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர் மரணித்ததற்கு அதிகமான காரணம் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தான். அது ஏன் என்பதை சற்று விரிவாக காண்போம். இது இந்த வருடம் நீட் எழுத நினைக்கும் ஏழை மாணவர்களுக்கும் கண்டிப்பாக உதவும்.அதிகார வர்க்கத்தினர் எதனை கொண்டு அழுத்த நினைக்கிறார்களோ , அதனைக் கொண்டே அவர்களை ஜெயிப்போம். ஏனென்றால், இனிமேல் நீட் என்பது நம் தலையெழுத்து!!!. அதற்காக நாம் மருத்துவர் ஆகாமலோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ எல்லாம் இருக்க முடியாது !!! எதிரியை தலை குனிய வைப்பது வெற்றி மட்டுமே!! நம் சரிவு அல்ல !!

1) நீட் தேர்வில் இருக்கும் மிக முக்கியமான சாராம்சம் இது தான். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 50% எடுத்து இருந்தாலே போதும். தாழ்த்தப்பட்ட மாணவர் என்றால் 40% எடுத்து இருந்தாலே போதும். மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஏழை மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் சராசரியாக கவனம் செலுத்திவிட்டு, மற்ற நேரங்களில் நீட் தேர்விற்கு படிக்கலாம். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால், வேறு பட்டப்படிப்பில் சேர முடியாதோ என்ற ஐயம் வேண்டாம்!!! கண்டிப்பாக நாம் மருத்துவராக முடியுமா என்பது அந்த மாணவரின் மனதிற்கு நன்றாக தெரியும். நாம் சிறு வயதில் யார் நம் நண்பர்களில் மருத்துவராவார்கள் என்று நினைத்தோமோ!! அவர்களில் 80% பேர் மருத்துவராக இருப்பார்கள்!!! ஆதலால் மருத்துவர் ஆவது பன்னிரெண்டாம் வகுப்பில் நிர்ணயிக்கப்படுவதல்ல!!! பன்னிரெண்டாம் வகுப்பில் நிகழ்த்தப் படுவது!! அவ்வளவு தான். அதேபோல், வீட்டில் இருந்து படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா?? பணம் உள்ளவர்கள் கோச்சிங் சென்டரில் படிப்பார்களே என்று நினைத்தீர்களே ஆனால், அனைத்து பணக்காரர்களும் இந்நேரம் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருப்பார்கள். நான் ஏற்கனேவே சொன்னது போல, மருத்துவர் ஆவது திடீர் என்று வரும் திறமை அல்ல. அது சிறு வயதில் இருந்து நாம் வளர்த்து வந்த திறமையின் தொகுப்பு. அதுவும் நம் தமிழ்நாட்டு ஏழைப்புறத் திறமை உள்ள மாணவர்கள் இதனை மனதில் கொண்டு அடுத்த வருடத்திற்கு படித்தார்கள் என்றால், 50% இடங்களை நம் மாணவர்களே பிடித்து விடலாம். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறமை பற்றி இந்த உலகம் அறிந்தது தான். மற்ற மாநிலத்து மாணவன் சாட்டிலைட் டிவியில் படம் பார்த்துக் கொண்டு இருந்த போது, நம் மாணவன் இஸ்ரோ ராக்கெட்டில் சாட்டிலைட் செய்து அனுப்பினான்.

2) இன்னொரு முக்கியமான விதி, மூன்று முறை நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். சென்ற வருடம் குழப்பத்தினால் இந்த தேர்விற்கு படிக்காமல் விட்ட ஏழை மாணவர்கள், அடுத்த வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் இந்த தேர்விற்கு முயற்சிக்கலாம். நீங்கள் பகுதி நேரம் வேலை செய்து கொண்டு கூட, அந்த பணத்தில் கோச்சிங் சென்டரில் சேர்ந்து கூட படித்து பயன் பெறலாம். உங்களுடைய கனவு இன்னும் முடிந்து விடவில்லை. கண்டிப்பாக மூன்று தருணத்தில் ஒன்றில் நம் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
3) 25 வயது வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டவர் என்றால் 30 வயது வரை கூட நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆதலால் ஏற்கனேவே சமூக சூழலால் வேலைக்கு சென்ற மாணவர்கள், பணம் இல்லாததால் கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்கள் என்று அனைவரும் பயின்று அடுத்த வருடம் தேர்வை எழுதலாம். நம் தமிழ் மாணவர்கள் வெறி கொண்டு படித்தால், நாட்டில் பாதி மருத்துவர்கள் நாமாக மாற வாய்ப்பு உள்ளது. பிறகு உச்சநீதிமன்றம் நீட் தேர்வை DISCRIMINATION என்று கூறினாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

இதனை எல்லாம் அனிதாவிடம் சொல்லி அவரை ஊக்கப்படுத்தாமல், அவரின் மருத்துவர் கனவு பொய்த்துவிட்டது என்று நிமிடத்திற்கு ஒரு முறை செய்திகளில் போட்டு , அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவரின் உயிரை ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சிகள் அநியாயமாக பறித்து விட்டார்கள்!!! அவர் மருத்துவர் ஆவதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கும் பொழுது அவரின் கனவு பொய்த்து விட்டது என்ற புளுகு மூட்டையை TRP பசிக்காக அவிழ்த்து விட்டார்கள்.

இன்று ஊடகங்கள் நடத்தும் பல முதலாளிகள் , தாங்களே மருத்துவ கல்லூரி வைத்து நடுத்துகிறார்கள். அதில் இவருக்கு ஒரு மேனேஜ்மென்ட் சீட் அளிக்க முடியாதா? அல்லது அடுத்த வருடம் தேர்வு எழுத உதவி இருக்க முடியாதா?
இவர்கள் நினைத்தது இன்று நடந்து விட்டது. ஆளும் கட்சிகள் ஏழைகளை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றன. எதிர் கட்சிகள் ஏழைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றன. ஊடகங்கள் ஏழைகள் சாவை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன.

இனியும் தாமதம் செய்யாமல் இந்த வருடம் CUTOFF-190 க்கு மேல் இருந்தும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பொய்யான செய்தியைக் கூறாமல், தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி (?), அந்த மாணவர்கள் அடுத்த வருடம் தேர்வு எழுதுவதற்கு வசதி செய்து தர வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...