Tuesday, October 24, 2017

கடன் பட்டார் நெஞ்சம் போல்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் - கம்பர், கம்பராமாயணத்தில் எழுதி இருப்பது. நெஞ்சம் கலங்குவதை விவரிக்க எத்தனையோ உவமைகள் இருக்கும் போது கம்பர் அன்று பயன்படுத்தியது கடன் பட்டவரின் நெஞ்சம் தான். ராமர் வாழ்ந்ததாக கூறப்படும் அந்த காலத்திலேயே அந்த நிலைமை என்றால், தற்போது நிலைமை எப்படி என்பதற்கு நேற்று திருநெல்வேலியில் எரிந்த அந்த நான்கு ஜீவன்களே சாட்சி. ஏன் ? உயிரோடு இருக்கும் நானே கூட ஒரு சாட்சி தான்.


                                             


டெங்கு கொசுக்களின் கூடாரமாக உபயோகிக்கப்படாத கிணறு இருப்பது போல, கந்து வட்டி காரர்களின் மொத்த கூடாரமாக இருப்பது தென்னக ரயில்வே. இதனை ரயில்வேயில் பணிபுரியும் அனைவரும் ஒத்துக் கொள்வர். அந்த ரத்தம் குடிக்கும் கொசுக்களிடம், ரயில்வேயில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய கால் ஊனமுற்ற என் தந்தை சிக்கிக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் சம்பள நாளை எதிர்பார்த்து காத்து இருக்கும் குழந்தைகள் மத்தியில், சம்பள நாள் வரக்கூடாது என்று நானும், எனது இரண்டு அண்ணன்களும் கடவுளை வேண்டி கொள்வோம். வாங்கிய, அனைத்து சம்பளத்தையும் வட்டிக்காரர்கள் எடுத்து கொள்வது அல்லாமல், வீட்டிற்கு வெளியே அவர்கள் வந்து சத்தம் இடும் பொழுது, சிறு குழந்தைகள் ஆன எங்கள் நெஞ்சு வெடிப்பது போல இருக்கும். உனது வீட்டு பெண்மணிகளை வைத்து நீ தொழில் செய்து வட்டி கட்ட வேண்டி தானே என்று கூறும் நபரின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு, அவனை ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கும் எங்களது அப்போதைய நிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கனவில் மட்டும் அவன் தலையை தினமும் வெட்டுவதை போல நினைத்துக் கொண்டு உருங்குவேன்.

இது மட்டுமா?? 10 மீட்டர் கூட நடக்க முடியாத என் ஊனமுற்ற அப்பாவின் மிதிவண்டியை பிடிங்கி கொண்டார்கள். அவரிடம் பேருந்தில் செல்வதற்கோ, பஸ்சில் செல்வதற்க்கோ அப்பொழுது காசு இல்லை. ஐந்து கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு தவழ்ந்து வந்தார்.1996 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண காத்து இருக்கும் போது, எங்கள் வீட்டில் இருந்த ஒரே ஒரு பெரிய பொருளான கருப்பு/வெள்ளை சிறிய தொலைக்காட்சிப் பெட்டியை கடன் காரர்கள் தூக்கிக் கொண்டு பொய் விட்டார்கள். சச்சினின் ஆட்டத்தை காணக் காத்து இருந்த, நான்காவது படித்துக் கொண்டு இருந்த என் மனம் எப்படி துன்பப்பட்டு இருக்கும் என்பதை விவரிக்க இயலாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எங்கள் வீட்டிற்கு வட்டியைக் கேட்டு மிரட்ட வந்தவர்கள் கூட்டத்தில் என்னுடன் படிக்கும் ஒரு நண்பனும் இருந்தான்.

இதை எல்லாம் மீறி நாங்கள் உயிர் வாழ யார் காரணம்? எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்த எங்கள் அம்மா தான். கடன் காரங்க இப்படி பேசுறாங்களே?? நாம செத்து போய்டலாமா?? என்று நாங்கள் கேட்டால், அவர்கள் முன்னாடி தான் நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று கூறுவார் அம்மா. எந்த நிலையிலும் எங்கள் படிப்பு கெடாமல் பார்த்துக் கொண்டார். எந்த அரசியல்வாதி அல்லது சினிமா நடிகரின் விலாசம் கிடைத்தாலும் , அவர்கள் மூலமாவது ஏதாவது ஒரு உதவி கிடைக்குமா? என்று தன்னுடைய மழலை கை எழுத்தில் கடிதம் எழுதுவார். ( இது வரை கலைஞரிடம் இருந்து மட்டும் சிறு உதவி வந்ததாக ஞாபகம்). யாராவது குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் இருப்பார்களா ? என்று தேடி பார்த்து, அவர்களிடம் கடன் வாங்கி கந்து வட்டிக்காரர்களின் கடனை அடைப்பார். கடன் தொல்லை தாங்காமல் தூக்கு மாட்டிய என் தந்தையை காப்பாற்றி, அவருக்கு வாழ்வதற்கான அவசியத்தை கூறினார். இப்படி எங்களுக்கு தைரியம் ஊட்டி வளர்த்ததால், நாங்கள் படித்து வேலைக்கு சென்று, அனைத்து கடனையும், வட்டியோடு அடைத்தோம்.

எங்களுக்கு கந்து வட்டி கொடுத்தவர்கள் , இன்றும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பெண்களை வைத்து தொழில் செய் என்று கூறிய அந்த நபர் , இன்று என் அம்மாவை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைக்கிறார். என் தந்தையிடம் மிதிவண்டியை பிடுங்கிய அந்த நபர், என் தந்தை காரில் சென்று வருவதை பார்க்க முடியாமல் திரும்பி கொள்கிறார். எனது அன்னை மற்றும் அன்று இல்லை என்றால், நாங்களும் என்றோ தீக்கு இரையாகி இருப்போம். ஆனால், அன்று புகைப்படம் எடுக்காமல், எங்களைக் காப்பாற்ற சிலபேர் இருந்து இருக்கலாம்.

இவற்றை எல்லாம் கூறி, நெல்லையில் தற்கொலை செய்து கொண்டவர்கள், செய்தது மிக பெரிய தவறு என்று நான் கூறவில்லை. அவர்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருந்தது என்று நமக்கு தெரியாது. ஆனால் குழந்தைகளைக் கொளுத்துவது என்பது மிக கொடூர செயல். இது தான் கடன் தொல்லையால் சாகின்ற முதல் குடும்பம் கிடையாது. சென்ற மாதம் கூட ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் விஷம் குடித்து இறந்து போனார்கள். நெல்லையில் இவர்கள் சாக தேர்ந்து எடுத்த முறைதான் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. நேற்றில் இருந்து நான் பார்க்கும் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் டிஜிட்டல் இந்தியா மற்றும் மோடியை வசைப்பாடி தான் எழுதப்படுகிறதே தவிர, வேற எதற்கும் பயன்படவில்லை.

இந்த பதிவின் மூலமாக நான் கேட்டு கொள்வது என்னவென்றால், வழக்கம் போல நாம் எதற்கு எடுத்தாலும், இந்த கையாலாகாத தமிழக அரசை நம்பிக் கொண்டு இல்லாமல், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல பேர் ,வட்டிக்கு விடும் தொழிலை செய்கிறார்கள். அவர்களிடம் குறைத்த வட்டிக்கு பணம் தர வலியுறுத்துவோம். மற்றும் கடன் கொடுப்பவரின் சூழ்நிலை அறிந்து பணத்தை வசூலிக்க வேண்டுவோம். இவர்கள் யார் மற்றவர்களை திட்டுவதற்கு அல்லது அடிப்பதற்கு? யாரவது பணம் திருப்பி கொடுக்கவில்லை என்றால், சட்டத்தின் மூலமாக அணுக சொல்வோம். பிரதம மந்திரியின் முத்திரா லோன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அது ஒரு மிகவும் அருமையான திட்டம். குறைந்த வட்டி மற்றும் குறைந்த ஆவணங்களை வைத்து ஏழைகளுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. அந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை என்னுடைய அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

இப்படிக்கு,
அ .அருள்செல்வன்.

Saturday, September 2, 2017

நீட் - நம் தலையெழுத்து

DISCRIMINATION - நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்துவிட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்த வார்த்தை இதுதான். இந்தியா முழுவதும் அனைவருக்கும் பொதுவான கல்வி கொடுக்காமல் இருப்பது DISCRIMINATION இல்லையாம். ஆனால் பொதுவான நுழைவு தேர்வு நடத்தாமல் இருப்பது DISCRIMINATION ஆகுமாம். தற்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பைப் பார்த்தால், அவர்கள் அனைவருக்கும் ஒரு சட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்தினால், ஒருவர் கூட தேர மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்தியா முழுவதும் குறைந்தபட்சம் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களாவது பொதுவான பாடத் திட்டத்தின் கீழ் மாற்றாமல், பொது நுழைவுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் மிக பெரிய துரோகம். நீதிமன்றமே இதுபோல் செயல்படும் பொழுது மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நாம் சமத்துவதை எதிர்பார்ப்பது நம்மை சவ குழியில் தள்ளும் என்பதற்கு நம் தங்கை அனிதாவின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு.

                                       


அனிதா மருத்துவர் ஆகாமல் போனதில் வேண்டும் என்றால் மத்திய,மாநில அரசின் பங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் அவர் மரணித்ததற்கு அதிகமான காரணம் ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தான். அது ஏன் என்பதை சற்று விரிவாக காண்போம். இது இந்த வருடம் நீட் எழுத நினைக்கும் ஏழை மாணவர்களுக்கும் கண்டிப்பாக உதவும்.அதிகார வர்க்கத்தினர் எதனை கொண்டு அழுத்த நினைக்கிறார்களோ , அதனைக் கொண்டே அவர்களை ஜெயிப்போம். ஏனென்றால், இனிமேல் நீட் என்பது நம் தலையெழுத்து!!!. அதற்காக நாம் மருத்துவர் ஆகாமலோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ எல்லாம் இருக்க முடியாது !!! எதிரியை தலை குனிய வைப்பது வெற்றி மட்டுமே!! நம் சரிவு அல்ல !!

1) நீட் தேர்வில் இருக்கும் மிக முக்கியமான சாராம்சம் இது தான். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. 50% எடுத்து இருந்தாலே போதும். தாழ்த்தப்பட்ட மாணவர் என்றால் 40% எடுத்து இருந்தாலே போதும். மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஏழை மாணவர்கள், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் சராசரியாக கவனம் செலுத்திவிட்டு, மற்ற நேரங்களில் நீட் தேர்விற்கு படிக்கலாம். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால், வேறு பட்டப்படிப்பில் சேர முடியாதோ என்ற ஐயம் வேண்டாம்!!! கண்டிப்பாக நாம் மருத்துவராக முடியுமா என்பது அந்த மாணவரின் மனதிற்கு நன்றாக தெரியும். நாம் சிறு வயதில் யார் நம் நண்பர்களில் மருத்துவராவார்கள் என்று நினைத்தோமோ!! அவர்களில் 80% பேர் மருத்துவராக இருப்பார்கள்!!! ஆதலால் மருத்துவர் ஆவது பன்னிரெண்டாம் வகுப்பில் நிர்ணயிக்கப்படுவதல்ல!!! பன்னிரெண்டாம் வகுப்பில் நிகழ்த்தப் படுவது!! அவ்வளவு தான். அதேபோல், வீட்டில் இருந்து படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்க முடியுமா?? பணம் உள்ளவர்கள் கோச்சிங் சென்டரில் படிப்பார்களே என்று நினைத்தீர்களே ஆனால், அனைத்து பணக்காரர்களும் இந்நேரம் நீட் தேர்வில் வெற்றி பெற்று இருப்பார்கள். நான் ஏற்கனேவே சொன்னது போல, மருத்துவர் ஆவது திடீர் என்று வரும் திறமை அல்ல. அது சிறு வயதில் இருந்து நாம் வளர்த்து வந்த திறமையின் தொகுப்பு. அதுவும் நம் தமிழ்நாட்டு ஏழைப்புறத் திறமை உள்ள மாணவர்கள் இதனை மனதில் கொண்டு அடுத்த வருடத்திற்கு படித்தார்கள் என்றால், 50% இடங்களை நம் மாணவர்களே பிடித்து விடலாம். நம் தமிழ்நாட்டு மாணவர்கள் திறமை பற்றி இந்த உலகம் அறிந்தது தான். மற்ற மாநிலத்து மாணவன் சாட்டிலைட் டிவியில் படம் பார்த்துக் கொண்டு இருந்த போது, நம் மாணவன் இஸ்ரோ ராக்கெட்டில் சாட்டிலைட் செய்து அனுப்பினான்.

2) இன்னொரு முக்கியமான விதி, மூன்று முறை நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். சென்ற வருடம் குழப்பத்தினால் இந்த தேர்விற்கு படிக்காமல் விட்ட ஏழை மாணவர்கள், அடுத்த வருடம் அல்லது அதற்கு அடுத்த வருடம் இந்த தேர்விற்கு முயற்சிக்கலாம். நீங்கள் பகுதி நேரம் வேலை செய்து கொண்டு கூட, அந்த பணத்தில் கோச்சிங் சென்டரில் சேர்ந்து கூட படித்து பயன் பெறலாம். உங்களுடைய கனவு இன்னும் முடிந்து விடவில்லை. கண்டிப்பாக மூன்று தருணத்தில் ஒன்றில் நம் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
3) 25 வயது வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டவர் என்றால் 30 வயது வரை கூட நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆதலால் ஏற்கனேவே சமூக சூழலால் வேலைக்கு சென்ற மாணவர்கள், பணம் இல்லாததால் கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்கள் என்று அனைவரும் பயின்று அடுத்த வருடம் தேர்வை எழுதலாம். நம் தமிழ் மாணவர்கள் வெறி கொண்டு படித்தால், நாட்டில் பாதி மருத்துவர்கள் நாமாக மாற வாய்ப்பு உள்ளது. பிறகு உச்சநீதிமன்றம் நீட் தேர்வை DISCRIMINATION என்று கூறினாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

இதனை எல்லாம் அனிதாவிடம் சொல்லி அவரை ஊக்கப்படுத்தாமல், அவரின் மருத்துவர் கனவு பொய்த்துவிட்டது என்று நிமிடத்திற்கு ஒரு முறை செய்திகளில் போட்டு , அந்த மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவரின் உயிரை ஊடகங்கள் மற்றும் எதிர் கட்சிகள் அநியாயமாக பறித்து விட்டார்கள்!!! அவர் மருத்துவர் ஆவதற்கு இன்னும் சந்தர்ப்பம் இருக்கும் பொழுது அவரின் கனவு பொய்த்து விட்டது என்ற புளுகு மூட்டையை TRP பசிக்காக அவிழ்த்து விட்டார்கள்.

இன்று ஊடகங்கள் நடத்தும் பல முதலாளிகள் , தாங்களே மருத்துவ கல்லூரி வைத்து நடுத்துகிறார்கள். அதில் இவருக்கு ஒரு மேனேஜ்மென்ட் சீட் அளிக்க முடியாதா? அல்லது அடுத்த வருடம் தேர்வு எழுத உதவி இருக்க முடியாதா?
இவர்கள் நினைத்தது இன்று நடந்து விட்டது. ஆளும் கட்சிகள் ஏழைகளை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கின்றன. எதிர் கட்சிகள் ஏழைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றன. ஊடகங்கள் ஏழைகள் சாவை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன.

இனியும் தாமதம் செய்யாமல் இந்த வருடம் CUTOFF-190 க்கு மேல் இருந்தும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பொய்யான செய்தியைக் கூறாமல், தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி (?), அந்த மாணவர்கள் அடுத்த வருடம் தேர்வு எழுதுவதற்கு வசதி செய்து தர வேண்டும். இல்லையேல் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அவர்களை ஊக்கப் படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

Monday, August 7, 2017

பிக் பாஸ் - ஒரு புரிதல்


எங்கள் நிறுவனத்தில் மேலாளர்களுக்கான ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. இருபது மேலாளர்கள் கலந்து கொண்டோம். அப்பொழுது பயிற்சி தர வந்த ஒரு பயிற்சியாளர் , அனைவர் கைகளிலும் ஒரு பலூன் , ஒரு ஊசியைக் கொடுத்தார். நான் ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் வருவேன். அப்பொழுது யார் கையில் பலூன் உடையாமல் இருக்கிறதோ அவர்தான் வெற்றி பெற்றவர் என்று கூறினார். அவர் சென்ற மறு நொடி , அனைவரும் மற்றவர்கள் கைகளில் உள்ள பலூனை உடைக்க ஆரம்பித்தோம். 30 வினாடிகளில் அனைவரது பலூனும் உடைந்து விட்டது. 
 
 
                                                    
 
 ஐந்து நிமிடம் கழித்து வந்த பயிற்சியாளர் , இந்த போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை. ஆனால் அனைவரும் வெற்றி பெற்று இருக்கலாம் என்று கூறினார். நான் யாருடைய பலூனையும் உடைக்க சொல்லவில்லை. யாருடையது உடையாமல் இருக்கிறதோ அவரே வெற்றி பெற்றவர் என்று கூறினேன். 20 வெற்றியாளர்கள் இருக்க வேண்டிய இந்த இடத்தில உங்கள் பொறாமை மற்றும் அவசர புத்தியால் ஒரு வெற்றியாளர் கூட இல்லை என்று கூறினார். மேலும் அவர், கம்பெனியும் அது போல தான். நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் தான், கம்பெனியும் வெற்றி பெரும், நீங்களும் வெற்றி பெறுவீர்கள் என்று மிக பெரிய தத்துவத்தை பலூனை வைத்து சொல்லி விட்டு சென்று விட்டார்.

அதே போல், பிக் பாஸ் என்பது ஒரு குடும்பம். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு ஜெயிக்க நினைத்தால், ஒருவரும் வெற்றி பெற முடியாது. நன்றாக யோசித்துப் பார்த்தால்,இந்த நிகழ்ச்சியில் கடுமையான விதிமுறை இல்லை. திறமையைக் கொண்டு ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை. செய்ய வேண்டியது எல்லாம், மனித நேயத்தையும் , அன்பையும் மற்ற அனைவர் இடத்திலும் காட்ட வேண்டும். அனைவரும் அவ்வாறு இருந்தால் , எல்லாரும் வெற்றி பெற ஒரு மிக பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அனைவரும் பொறாமை மற்றும் பொய்யால் வெற்றி பெற எண்ணி தோற்றுப் போகிறார்கள்.

பி.கு: இது பிக் பாஸ் நிகழ்ச்சியை உண்மை என்று எண்ணி எழுதப்பட்ட பதிவு. இது நம் குடும்பத்திற்கும் பொருந்தும். குடும்பத்தில் உள்ள எவரையும் போட்டியாளராக எண்ணுவது சரிவையே தரும்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!

எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் வயதான கணவன், மனைவி வசித்து வந்தனர். இந்தியாவில் உள்ள உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள் வெளிநாடுகளில் தான் வாழ வேண்டும் என்ற சாபத்தில் விழுந்து, தனிமை என்னும் சிறையில் அகப்பட்டு உள்ள பாவப்பட்ட மனிதர்கள். வள்ளுவர் தற்போது இருந்து இருந்தால், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி, கடைசி காலத்தில் வெளிநாடு செல்லாமல் இருப்பது என்று எழுதி இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

                                                 

நான் இங்கு குடி வந்து இரண்டு வருடங்களில், அவர்கள் எந்த உதவி கேட்டாலும் செய்து கொடுப்பேன். ஏனோ அவர்களைப் பார்க்கையில் தனிமை சிறையில் உள்ள நிரபராதிகள் போன்று எனக்கு தோன்றும். அவர்களது மகனும், மகளும் வெளிநாடுகளில் இருந்து எந்த பொருள் அனுப்பினாலும் அதனை எப்படி பயன் படுத்துவது என்று என்னிடம் தான் கொடுத்து தெரிந்து கொள்வார்கள். ஒரு முறை அவரது மகன் IPAD அனுப்பிய பொழுது, அதனை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் ஐடி துறையில் வேலை செய்வதால் என்னிடம் IPAD இருக்கும் என்று நினைத்து விட்டாரா? என்று தெரியவில்லை. என்னிடம் தற்போது வரை இருப்பது ஒரு ஓட்டை மொபைல் என்று அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும், நான் நண்பர்களிடம் கற்று உணர்ந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். இப்படியே சென்று கொண்டு இருக்கும் பொழுது, அவர்கள் என்னுடைய ஜாதி என்ன வென்று பேச்சு வாக்கில் கேட்டார்கள். நானும் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு, அந்த பெரியவர் படுக்க படுக்கையாகி விட்டார். அவருடைய மலம் அல்ல ஒரு வேலைக்காரியை வைத்து இருந்தனர். அந்த வேலைக்காரியும், அந்த வீட்டு பெண்மணியிடம் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். நான் அந்த பெண்மணியிடம் சென்று, ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டேன்? அதற்கு அவர், ஆமாம் மலம் அல்ல ஒரு வேலைக்காரி வேண்டும். ஆனால் SC/ST யாக இல்லாமல் பாருங்கள் என்று கூறினார்.
எனக்கு தூக்கி வாரி போட்டது. ஒரு காலத்தில் மலம் அள்ளுபவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி அவர்களை நோகடித்தனர். தற்போது அதுக்கும் அவர்கள் தேவை இல்லை என்று இவர் கூறியது அவர் மேல் இருந்த மரியாதையை ஒரு நொடியில் சிதைத்தது. ஒரு வேலை என்னுடைய ஜாதி அவர்கள் விரும்பும் பட்டியலில் இல்லாமல் இருந்து இருந்தால் என்னிடம் பேசி இருப்பாரா என்று கூட தெரியவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு அந்த பெரியவர் இறந்து விட்டார். அவர்கள் எதிர் பார்த்த மாதிரி வேலையாள் வந்தார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். ஜாதிகள் இல்லையடி பாப்பா!! என்று பாரதியார் கூறியது பாப்பாக்களுக்கு மட்டும் அல்ல. மனிதர்கள் அனைவருக்கும் தான்.

பி.கு.
1) அவர்கள் இருவரும் என்ன ஜாதி? என்று எனக்கு தெரியாது. நான் முன்பே கூறியது போல, பிள்ளைகள் இருந்தும் இல்லாமல் கஷ்டப்படும் பெற்றோர்கள் இனத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும்.
2) அவரது இறுதி சடங்கிற்கு வெளிநாட்டில் இருக்கும் அவர் மகள் வரவில்லை.

Sunday, April 23, 2017

புரட்சி தமிழர்களுக்காக

என்னதான்டா உங்களுக்கு பிரச்சனை? தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா பிரச்சைனையும் தீர ரஜினி தமிழ்நாட்டை விட்டு போய்ட்டா போதுமா? நீங்க எல்லாம் சேர்ந்து புரட்சி செஞ்சு கிழிச்சிடுவீங்களா?
 
                                               

2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து(??) வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். ஒருவரை மேடையில் வைத்து கொண்டு அவமானப்படுத்துவது அல்லவா தமிழர் பண்பாடு. அதனைத்தான் பாதுகாத்தார் சத்யராஜ். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பார்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.

இதனை எதிர்த்து குசேலன் பட வெளியீட்டின் போது பிரச்சனை செய்த கன்னட அமைப்பினரிடம், தன் குருநாதர் பாலச்சந்தர் தயாரிப்பில் வெளியாகும் இந்த படம் தோல்வி அடையக்கூடாது என்று வருத்தம் தெரிவித்தார். அதுவும் எப்படி? " எனக்கு மேடை அனுபவம் இல்லாதால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று.

சிவாஜி படத்தை சன் தொலைக்காட்சிற்கு தரவில்லை என்கின்ற கோபத்தில் இருந்த அவர்கள், சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒருமுறையும் ரஜினி மன்னிப்பு கேட்டார் என்று கூறி தலைப்பு செய்தியை ஒளிப்பரப்பி, ரஜினிக்கு எதிரான போராட்டங்களை முன்னிலைப் படுத்தினர். ரஜினி வருத்தம் தான் தெரிவித்தேன் என்று கூறினாலும், இரண்டும் ஒன்று தான் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள் இப்பொழுது சத்யராஜ் வருத்தம் தான் தெரிவித்தார் என்று கூறும் புரட்சிவாதிகள். அப்பொழுது சத்யராஜ், "தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். காரணம் , அவர் பிற மொழி படங்களில் நடிக்க மாட்டாராம். ஆனால் பிற மொழி நடிகைகளை மட்டும் படத்தில் கொஞ்சுவார். மன்னிப்பு கேட்குறவன் பெரிய மனுஷன் என்று தற்போது சத்யராஜுக்கு வக்காலத்து வாங்கும் ரஜினியின் நண்பர்(?) கமல், அப்பொழுது கொட்டாவி கூட விடவில்லை. அப்பொழுது நடிகர் சங்க தலைவராக இருந்த வருமான வரி புகழ் சரத்குமார் , நடிகர் சங்கத்துக்கும் அந்த பிரச்சனைக்கும் தொடர்பு இல்லாதது போல் இருந்தார்.

ஒரு தமிழனாக இருந்து கர்நாடாகாவிற்கு எதிராக குரல் கொடுப்பதை விட, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஒருவர் குரல் கொடுப்பது எவ்வளவு பெரிய விஷயம்? அதனை நாம் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருக்கலாம் அல்லவா?

அது சரி, எந்த மேடையானாலும், ரஜினியை உச்சி குளிரும்படி புகழ்ந்து பேசிய சத்யராஜ் . திடீரென்று அவருக்கு எதிராக பேச காரணம் என்ன? சிவாஜி படத்தில் வில்லனாக சத்யராஜை நடிக்க கூப்பிட்டாராம் ரஜினி. ஹீரோவாக நடிக்கும் என்னை எப்படி வில்லனாக நடிக்க கூப்பிடலாம் என்று கோபித்து கொண்டாராம் சத்யராஜ். தற்போது அவர் படங்களில் எப்படிப்பட்ட ஊறுகாய் ரோலில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

சரி சத்யராஜ் அப்படி பேசியதை பற்றி ரஜினியின் நிலைப்பாடு என்ன? இதுவரை ஒரு இடத்தில கூட சத்யராஜை ரஜினி விமர்சித்தது கிடையாது. தன்னுடைய ரசிகர் மன்ற சந்திப்பின் போது , ரசிகர் ஒருவர் இந்த கேள்வியைக் கேட்டார். " என்ன தலைவா? கர்நாடகாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டீங்க? அதற்கு தலைவர் சொன்ன பதில் " என்ன பன்றது? உங்களுக்கே தெரியும். மேடைல எல்லாரும் எப்படி பேசுனாங்க அப்படினு, நானும் மனுஷன் தானே ? அதான் கோவம் வந்து சில தகாத வார்த்தைகளை பேசிட்டேன். நான் அப்படி பேசி இருக்க கூடாது". இது தான் ரஜினியின் மனசு.

இந்த பிரச்னை முடிந்த சில நாட்களில் , திமுக அரசின் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது. அதில் சத்யராஜ் கலந்து கொள்ளவில்லை. சில நாட்கள் கழித்து, சத்யராஜிடம் நிருபர்கள் பேட்டி எடுக்கிறார்கள். நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கேட்கிறார்கள் . அதற்கு சத்யராஜ் , எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார். அடுத்த வாரம் நடைபெறும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதில் நான் கலந்து கொள்வேன். அதில் கலந்து கொள்ளாதவன் தமிழனே அல்ல, என்று கூறுகிறார். அதவாது இவர் கலந்துகொள்ளவில்லை என்றால் ஆயிரம் காரணம் இருக்கும். மற்றவர்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் தமிழனே இல்லையாம். அந்த உண்ணாவிரத கூட்டத்தில் ரஜினி பேசிய உணர்ச்சிமிகு உரை நாடு அறிந்தது.

எப்படி பஸ் கண்டக்டரால் கடின உழைப்பால் சூப்பர் ஸ்டாராக உயர முடிந்தது ? நிறத்தை வைத்து முடிவு செய்யும் சமூகத்தில் , கருப்பான ஒருவரால் எப்படி எல்லாரையும் வசீகரிக்க முடிந்தது? இதனை தான் இளைஞர்கள் ரஜினியிடம் கேட்டு முன்னேற வேண்டும். இதை விட்டுவிட்டு காவேரில தண்ணி வரல!!! பாத்ரூம்ல தண்ணி வரல !!!! என்று அரசியல்வாதியிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரிடம் கேட்பது முட்டாள்தனத்தின் உச்சம். அதுவும் தமிழன் என்று கூறிக்கொண்டு இவர்கள் இதுபோன்று பேசுவது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானமே அன்று பெருமை அல்ல. உங்களுக்கு எல்லாம் நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்று தான். ரஜினி இந்த உலகத்திற்கு, தமிழகத்தின் அடையாளமாக மாறி 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதனை எத்தனை புரட்சி தமிழன் வந்தாலும் அழிக்க முடியாது!!!!

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...