Sunday, December 11, 2016

நான் அறிந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா - ஜெயா அவர்களுக்கு என் சிறிய சமர்ப்பணம்


தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் யார்? செல்வி.ஜெ.ஜெயலலிதா. இந்த கேள்விக்கு ஒன்றாம் வகுப்பில் நான் பதில் அளித்தது, இன்றும் ஞாபகம் இருக்கிறது. நான் மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் என்பதுகளின் பிற்பகுதியில் பிறந்த அனைவரும் அறிந்த முதல், முதல்வர் செல்வி.ஜெயலலிதா தான். இப்படிதான் அந்த பெயரை என் வாழ்வில் நான் முதல் முறையாக தெரிந்து கொண்டேன்.


                             


ஆகையால், எங்களை பொறுத்தவரை அவர் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தார் என்கின்ற கேள்விக்கு எல்லாம் இடம் இல்லை. நாங்கள் பிறந்து, வளரும் போதே அவர் முதல் அமைச்சர் தான். மிகவும் சிறு வயது ஆதலால் அன்று அரசியல் ரீதியாக நடந்த விஷயங்கள் எதுவும் எனக்கு அவ்வளவு ஞாபகம் இல்லை. ஆனால் ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடந்ததாக கூறப்படும் பனிப்போர் பற்றி என் அண்ணன் அடிக்கடி கூறுவான்.

தமிழ்நாட்டில் ரஜினியின் பெயரைக் கேட்டால், தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையும் சொல்லும் காலக்கட்டம் அது. ஆதலால் அவர்கள் இருவருக்கும் சண்டை நடக்கிறது போல நானே பாவித்துக்கொண்டு, ரஜினி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்பொழுது நடந்ததாக கூறப்பட்ட ஒரு சம்பவம், இன்றும் என் நினைவலைகளில் இருக்கிறது. 1991-1996 ஆம் ஆண்டு வரை முதல்வர் வெளியில் சென்றால், போக்குவரத்தை நிறைய நேரம் நிறுத்தி வைக்கும் சடங்கு நடந்தது. செல்வி.ஜெயலலிதா வசித்த, அதே தெருவில் வசித்த ரஜினியின் கார், பலமுறை இதேபோல் நிறுத்தப்பட்டது. ஒரு முறை வெறுத்துப்போன ரஜினி, தன் ஓட்டுனரை அனுப்பி, படப்பிடிப்பிற்கு நேரம் ஆகி விட்டது நான் செல்லலாமா? என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டுவிட்டு வர சொன்னார். அந்த போலீஸ் அதிகாரி யாருக்கோ வயர்லெஸ்ஸில் கேட்டுவிட்டு, யாராக இருந்தாலும் முதல்வர் சென்ற பிறகுதான்.செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். உடனே, ரஜினி காரை விட்டு கீழே இறங்கி, அங்கே இருந்த பொட்டி கடையில் சிகரெட் வாங்கி பிடிக்க ஆரம்பித்து விட்டார். அவ்வளவுதான் , ராணி தேனீக்களை சூழ்ந்த தேனீக்கள் போல, மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து விட்டது. அன்றிலிருந்து ரஜினியின் கார் நிறுத்தப்படுவதில்லை.

உண்மையில் முதல் முறையாக பதவி ஏற்ற ஜெயலலிதா அவர்களின் ஆட்சி நல்லபடியாக இல்லை என்பதை அதிமுகவினர் கூட ஏற்றுக்கொள்வார்கள். அதன் வெளிப்பாடுதான் பர்கூரில் ஜெயலலிதா தோற்றது.

தோல்வி ஒரு மனிதனை சீர்ப்படுத்தும். அது தான் நடந்தது. 1996 ஆம் ஆண்டு, "அந்த அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று கூறிய ரஜினி , நீங்க ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டீர்கள் என்று 2011 ஆம் ஆண்டு கூறினார்.

எங்கள் குடும்பம் திமுகவின் அனுதாபி. அதில் இருந்து வந்த நான், 2011 ஆம் ஆண்டு போட்ட முதல் ஒட்டு , செல்வி.ஜெயலலிதா அவர்களுக்குத்தான்.
1991-96 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் , அவர் செய்த சாதனைகளில் மிக சிறந்தது என்றால், பாக்கெட் சாராயத்தை ஒழித்து, தாய்மார்கள் பாக்கெட் பால் வாங்க வழி செய்தார். சிசு கொலைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்த அவர், தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கினார். அதன் மூலம் பல குழந்தை சாவுகளைத் தடுத்தார்.

2001-இல் மீண்டும் வீர மங்கையாக பதவியேற்ற பின், பல குடும்ப வருமானத்தை கேள்விக்குறியாக்கிய லாட்டரி டிக்கெட் விற்பனையை ஒரே கையெழுத்தில் கிழுத்து எறிந்தார். தமிழ்நாட்டுக் காவல்துறைக்கு ஒரு பெரும் கரும்புள்ளியாக அமைந்த வீரப்பன் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார். வீரப்பனை பிடிக்க முடியாது என்று கேலி பேசிய அனைவரது முன்னாலும் வீரப்பனின் பினத்தை வீசினார். அயோத்தி குப்பம் வீரமணி மற்றும் அடைமொழியோடு சுற்றிக்கொண்டு இருந்த அனைத்து ரௌடிகளையும் அடையாளம் தெரியாமல் ஆக்கி, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தினார். ஜெயேந்திரரை இந்தியாவே வியக்கும்படி கைது செய்து, சட்டம் நம் அனைவரும் சமம் என்று ஞாபகப்படுத்தினார்.

சாராய வியாபாரத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30000 கோடி தமிழ்நாட்டு கஜானாவில் வருமானம் வர செய்தார். அதை ஏழை, எளிய மக்களின் நலத்திட்டங்கள் மற்றும் இலவசங்களுக்கு பயன்படுத்தினார்.

அவர் கொடுத்த இலவசங்களில் முக்கியமானது, பதினோராம் வகுப்பு படிக்கும் பெண்களுக்கு மிதிவண்டி. இந்தியா போன்று 80% பெண்களை அடிமைகளாய் பயன்படுத்தும் நாட்டில், அந்த மிதிவண்டியில் கிராமத்து பெண்கள் பட்டாம்பூச்சியை போல பறந்து வரும் அழகான காட்சி, உலக அழகிகளிடம் கூட காண முடியாதது.

2001-2006 ஆம் ஆண்டு வரை , பல நல்ல திட்டங்கள் செயல் படுத்தினாலும், 2006 இல் அவருக்கு கிடைத்தது தோல்விதான். ஆனால் இந்த முறை மிகவும் நாகரிகமான தோல்வி. அதற்கு காரணம் , ஒரே கை எழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய அந்த அசாத்திய துணிச்சல் தான். இதனால் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று தெரிந்தும் , வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து , ஒரு பெரும் கிலியை உண்டாக்கினார். ( இன்னொரு காரணம், இப்போது தான் எனக்கு புரிகிறது. அந்த கூட்டணியில் அப்பொழுது வைகோ இருந்தார்).

2011-2016 ஆம் ஆண்டு ஆட்சியில் , ஒரு முழு திராவிடத் தலைவராக செல்வி.ஜெ.ஜெயலலிதா உருவெடுத்தார். பிரபாகரன் ஒரு தீவிரவாதி . அவரை இந்தியா கொண்டு வந்து தூக்கில் இட வேண்டும் என்று முன்பு கூறிய அவர், ராஜிவ் கொலையில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, போலி தமிழன போராளிகள் அரசியலில் மண்ணை வாரி போட்டார். போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய ஜெயலலிதா, ஒரு சிங்களவர் கால் கூட பட விடாமல், தமிழ் மண்ணின் கண்ணியம் காத்தார். இலங்கை பங்கேற்கும் என்ற ஒரே காரணத்திற்க்காக தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்த முடியாது என்று மத்திய அரசிற்கு விளையாட்டுக் காட்டினார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முதல்வர்கள் ஆளும் மாநிலங்களே 69% இட ஒதுக்கீடை அமல் படுத்த தயங்கியபோது, தமிழ்நாட்டில் அந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று கூறி பெண் சிங்கமாய் சீறிப் பாய்ந்தார்.
உணவு தானிய கிடங்கில் வீணாக போகும் அரிசி முதலியவற்றை தடுத்து நிறுத்த , அகிலமே போற்றும் அம்மா உணவகம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். விலை தான் மலிவு, உணவு மலிவு அல்ல என்று தரத்தில் சிறந்த உணவுகளை வழங்கினார். இதன் மூலம், ஒரு வேலை மட்டுமே சாப்பிட்ட ஏழைகளை மூன்று வேலை, இல்லை இல்லை, பசி எடுக்கும்போது எல்லாம் சாப்பிட வைத்தார்.

காவிரி, முல்லை பெரியாறு ஆகிய விவகாரங்களில் தமிழகத்திற்கு வேண்டியது கருணை இல்லை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்று, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

பேனா வாங்கவே கஷ்டப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மடி கணினியை வழங்கி அழகு பார்த்தார். தன் பிள்ளைகள் கணினியை பயன் படுத்துவதை எண்ணி, ஏழை தாய்மாரை பூரிக்க வைத்தார்.

2016 இல் மழை, வெள்ளம் வந்த பொழுது அவர் மக்களை வந்து பார்க்க வில்லையே என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் இன்று தான் புரிகிறது , அவர் எந்த அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று.
2011-2016 முதல் செய்த நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு 2016 ஆம் பொது தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். நல்ல திட்டங்கள் தொடர்ந்து கொண்டு இருந்த நேரத்தில், இடியாய் இறங்கியது அந்த செய்தி. பூமியில் யாரும் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப்பாய்ந்த முதல்வர் அவர்களை, எமன் தன பாசக்கயிற்றில் விழ வைத்தான்.

அவர் மட்டும் நன்றாக இருந்து இருந்தால், அரைகுறையா அமல்படுத்தப்பட்ட 500,1000 ருபாய் தடையை எதிர்த்து அக்னி பிழம்பாய் பொங்கி இருப்பார்.
பொதுவாக மரணத்தில் இருந்து மீண்டு வருபவர்கள், பல நல்ல காரியங்களை செய்வார்கள். தற்பொழுது மட்டும் அவர் மீண்டு வந்து இருந்தால், பல நல்ல காரியங்கள் செய்து இருப்பார். ஏன் ? மணல், கனிம மணல், க்ரானைட் உள்ளிட்ட தொழில்களை அரசே நடுத்தும் என்று தடாலடியாக அறிவித்து இருந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. அவர் துணிச்சல் பற்றி நாம் அறிந்ததே.

இது வரை, நான் பேசும் போதும் சரி , எழுதும் போதும் சரி. மறைந்த முதல்வர் அவர்களை, ஜெயலலிதா என்று தான் அழைத்து இருக்கிறேன். முதல் முறை, அவரை அம்மா என்று அழைக்க விழைகிறேன்.

சென்று வாருங்கள் அம்மா !!!!! தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றும் உங்கள் கனவை நிறைவேற்றப் பாடுபடுவோம்.
இப்படிக்கு,
அ.அருள்செல்வன்

Friday, June 17, 2016

கடவுள் இருக்கான் குமாரு – REAL LIFE INCIDENT 2பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்து முடித்து விட்டு டிப்ளோமா படிப்பில் சேர்ந்து இருந்தேன். வருடா வருடம் சுதந்திர தின விழா அன்று அரக்கோணம் டவுன் ஹாலில் பள்ளி மாணவ-மாணவர்கள் பங்கேற்கும் வினாடி வினா நிகழ்ச்சி நடக்கும். எனது முந்தைய பள்ளி நண்பர்கள் பங்கேற்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்க சென்று இருந்தேன். அவர்கள் அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்ந்து இருந்தார்கள். எட்டு பள்ளிகள் கலந்து கொண்ட அந்த வினாடி வினா நிகழ்ச்சியில் ஒரு அரசு பள்ளி கூட இல்லை. இதனை நிகழ்ச்சி தொகுப்பாளர் மேடையில் வெட்கத்துடன் கூறி கொண்டு இருந்தார்.

                    


அப்பொழுது இரண்டு அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் என்னிடம் வந்து நீங்கள் எங்கள் பள்ளியா? என்று கேட்டார்கள். நான், எதற்கு கேட்கிறீர்கள்? என்று கேட்டேன். நாங்கள் இரண்டு பேர் இருக்கிறோம். இன்னும் ஒருவர், இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நானும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு “ஆமாம்” என்று கூறினேன். மேடையில் அரசு ஆண்கள் பள்ளி என்று மூவரும் பெயர் கொடுத்தோம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று வரை அடையாள அட்டை கிடையாது. அதனை அவர்களுக்கு கொடுப்பது வீண் செலவு என்று அரசு நினைக்கிறதா? அல்லது தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியை பிரித்து பார்க்கும் தந்திரமா தெரியவில்லை. அதனால், நாங்கள் அரசு ஆண்கள் பள்ளி என்று சொன்னதும், எந்த அடையாள அட்டையும் கேட்காமல் கலந்து கொள்ள அனுமதி செய்தார்கள்.
என் பழைய பள்ளி நண்பர்கள் நினைத்து இருந்தால், என்னைக் காட்டிக் கொடுத்து இருக்க முடியும். ஆனால் நான் அப்பொழுதே மிக சிறந்த நண்பர்களைப் பெற்று இருந்தேன் என்பது நான் பெற்ற வரம். போட்டி தொடங்கியது. கடுமையான போட்டி. என்னால் முடிந்த வரை அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்தேன். என்னுடன் இருந்த இரண்டு மாணவர்களுக்கும் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் இருந்ததே தவிர, போதிய பயிற்சி இல்லை. போட்டியின் முடிவில் தனி ஒருவனாக அரசு ஆண்கள் பள்ளியை மூன்றாவது இடத்துக்கு கொண்டு சென்றேன்.

பரிசு வழங்கி பாராட்டிய அரக்கோணம் நகர தலைவர், இத்தனை தனியார் பள்ளிகளுக்கு நடுவே, அரசு ஆண்கள் பள்ளி மூன்றாம் இடம் பெற்று இருப்பது மிக பெரிய செயல். மிகுந்த பாராட்டுகள் என்று கூறினார். நான் இது வரை பெற்ற மிக சிறந்து பாராட்டுகளில் அதுவும் ஒன்று.

பரிசு வாங்கி விட்டு மேடையை விட்டு இறங்கி வந்தவுடன், அந்த இரண்டு மாணவர்கள், நாம் பரிசை தலைமை ஆசிரியரிடம் பள்ளியில் கொடுத்து நாளை PRAYER-இல் பெற்று கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்பொழுது , நான் அவர்களிடம் நான் இந்த பள்ளியை சேர்ந்தவன் இல்லை என்றும், நீங்கள் கட்டாயமாக நல்ல பயிற்சி எடுத்து அடுத்த வருடம், நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினேன்.

அடுத்த வருடமும் நான் அங்கு சென்றேன். இந்த முறை பார்வையாளனாக. அந்த இரு மாணவர்களும் இந்த முறையும் கலந்து கொண்டார்கள். இந்த முறையும் மூன்றாவது பரிசு வாங்கினார்கள். என்னை ஞாபகம் வைத்து, என்னிடம் வந்து பேசிவிட்டு நன்றி கூறி சென்றாகள். 

அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டியது இலவசம் அல்ல. நல்ல ஊக்கம் மட்டுமே!


Thursday, June 16, 2016

செத்துடுங்கடா!!!!! REAL LIFE INCIDENT!!!!


ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்ட போது, எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பெண், அது எப்படிங்க காசு கொடுத்து படிக்குற பசங்களுக்கும், சும்மா படிக்குற பசங்களுக்கும் ஒரே படிப்பு! ஒரே அநியாயமா இருக்கு!! என்று கூறினார். கூறியதோடு மட்டும் நில்லாமல், அவர்களை தமிழக அரசு வஞ்சித்ததைப் போல், உடனடியாக CBSE பள்ளியில் அவரது பெண்ணை சேர்த்தார். பொது நுழைவுத் தேர்வுக்கு குரல் கொடுக்கும் பலர், ஏன் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் நடக்கவில்லை என்று கேட்கத் தயாராக இல்லாதது இந்தியாவின் சாபம்.


                                                  கடந்த இரண்டு வாரங்களாக, எனக்கு மாலை நேரத்தில் பணி. ஆதலால் நான் மாலை நான்கு மணிக்கு கிண்டி கத்திபாரா வழியாக பைக்கில் செல்வேன். அப்பொழுது அங்கு ஒரு அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வீடு செல்வதற்காக ரோட்டோரங்களில் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டு இருப்பார்கள். அப்பொழுது ஒரு மாணவன், எனக்கு முன்னால் சென்ற ஒரு பைக்கை நிறுத்தி, லிப்ட் கேட்டான். அவன் கால்களில் செருப்பு கூட இல்லை. பூமத்திய ரேகை பாயும் நம் நாட்டில் செருப்பு இலலாமல் நடப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அங்கு இருந்த பல மாணவர்கள் காலில் செருப்பு இல்லை. காந்தி இப்பொழுது தமிழகம் வந்து இருந்தால் செருப்பு அணிவதையும் விட்டு இருப்பார் என்றே தோன்றுகிறது.
லிப்ட் கேட்ட அந்த மாணவனுக்கு, எனக்கு முன்னால் சென்றவர் லிப்ட் தர மறுத்ததுடன், பொறிக்கி பசங்க! பஸ் பாஸ் தான் ப்ரீயா கொடுக்குறாங்க!! பஸ்ல போனா என்ன?? என்று கூறிவிட்டு சென்று விட்டார். அவர் மட்டும் அல்ல! தமிழ்நாட்டில் இருக்கும் பாதி பேருக்கு அரசு பள்ளி மாணவர்களைக் கண்டால் எகத்தாலம்!! நம்மில் எத்தனை பேர் அரசு பள்ளி மாணவர்களோடு, நமது பிள்ளைகளை பழக விடுகிறோம். அவன் கெட்ட பையன்! அவன் கூட சேராத! என்று கூறி தான் வளர்க்கிறோம். இது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடாய் முடியும் என்று வருங்காலத்தில் தான் தெரியும். இப்பொழுது குறிப்பட்ட சில பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மட்டும் வேலைக்கு எடுப்பது போல, வருங்காலத்தில் அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று சில நிறுவனங்கள் கூறினாலும் கூறலாம். இதனை தடுக்கும் மிக பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!!

அது மட்டும் அல்லாமல், தனியார் பள்ளி வாகனங்களில் இத்தனை மாணவர்கள் தான் செல்ல வேண்டும், வாகனங்கள் சரியாக இயங்க வேண்டும் என்று கூறும் அரசு அதிகாரிகள் கண்களுக்கு நம் நாட்டில் லட்ச கணக்கில் அரசு மாணவர்கள் தொங்கி கொண்டு செல்லும் அரசு பேருந்துகளும், அதன் நிலைமையும் கண்ணில் தெரியாமல் போனது வெட்கக்கேடு. நம் நாட்டில் சட்டம் உட்பட அனைத்தும் பணம் படித்தவர்களுக்குதான் என்பது மீண்டும் தெள்ளத்தெளிவு ஆகிறது!!

லிப்ட் கேட்ட அந்த மாணவனை, நான் வண்டியில் ஏற்றிக்கொண்டு போனதுடன், தினமும் அதே நேரத்தில் அந்த இடத்திற்கு சென்று லிப்ட் கேட்கும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்கிறேன். சமயங்களில் இரண்டு மாணவர்களைக் கூட ஏற்றிக்கொண்டு செல்கிறேன். இது ஆபத்து தான். ஆனால் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் ஆபத்தை விட இது மிக குறைவு.

                                          ஆபத்துக்கு பாவல் இல்லை சார்!!!

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...