Friday, July 3, 2015



                                                     ஹெல்மெட்காரி:

     ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, எந்த தொலைக்காட்சி எடுத்தாலும் விவாத நிகழ்ச்சியில் 4 பேர் சேர்ந்து கொண்டு, என்னவோ தலைக்கவசத்தை அவர்கள்தான் கண்டு பிடித்ததைப்போல் பேசிக் கொண்டு இருந்தார்கள். தலைக்கவசம் அணிந்தால் எல்லா நோயும் தீர்ந்துவிடும் என்று கூறாததுதான் மிச்சம்.

                        



ரயில் நிலைய பார்க்கிங்கில் வண்டியை விடும் பொழுது நான் எப்பொழுதும் தலைக்கவசம் எடுத்து செல்வது இல்லை. வண்டி காணாமல் போனாலே, கண்டு கொள்ளாத அவர்களிடம் தலைக்கவசம் காணாமல் போய்விட்டது என்று கூறினால், சாருக்கு ஒரு வடை பார்சல் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள். அதனால் நான் ரயில் நிலையம் செல்லும்போது எப்பொழுதும் தலைக்கவசம் அணிவது இல்லை. 

ஜூன் 27 அன்று வேளச்சேரி ரயில் நிலையம் சென்றுவிட்டு தலைக்கவசம் அணியாமல் வீட்டிற்க்கு வந்து கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு போக்குவரத்து போலீசார் என்னை தடுத்து நிறுத்தி தலைக்கவசம் எங்கே? என்று கேட்டார். நான் ஜூலை 1-இல் இருந்து தானே கட்டாயம் அணிய வேண்டும் என்று கேட்டேன். 1988-இல் இருந்தே சட்டம் இருப்பதாகவும், ஜூலை 1-இல் இருந்து தலைக்கவசம் இல்லையென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார். 

அடப்பாவிங்களா! 1988-இல் இருந்து அமலில் இருக்கும் ஒரு சட்டத்தை ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என்று அரசிற்கு கண்டனம் தெரிவிக்காமல், பொதுமக்களின் ஆவணம் பிடிங்கப்படும் என்பது எந்த விதத்தில் நியாயம் என்று நினைத்துக் கொண்டேன். வர வர நீதிமன்றங்களும், தீர்ப்புகளும் பல விசித்திரங்களையும், ஆச்சிரியங்களையும் கொண்டவைகளாக இருக்கின்றன.
சார்! இனிமே கண்டிப்பா போட்டுட்டு வரேன் சார்! என்று கேட்டுப் பார்த்தேன். படிச்ச நீங்களே போடலனா? எப்படி சார் என்று கேட்டார். எதை வைத்து நான் படித்தவன் என்று முடிவு செய்தார் என்று தெரியவில்லை. வழக்கமாக எல்லா போலீசாரும் முடிக்கும் வசனத்தில் முடித்தார். இங்க பைன் கட்டுறிங்களா? இல்லை கோர்ட்ல போய் கட்டுறிங்களா? என்றார். நான் இங்கயே கட்டுகிறேன் என்று நூறு ருபாய் அழுதுவிட்டு வந்தேன்.

வடிவேலு படத்தில் வருவது போல போலீஸ் பயிற்சியில் லஞ்சம் வாங்க பயிற்சி கொடுப்பார்களோ? என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால் ஒரு முறை நாங்கள் குறும்பட ஷூட்டிங்கில் ஈடுப்பட்டு இருந்தபோது அங்கு வந்த போலீசார், இங்கு கேமரா வைத்து படம் எடுக்கக்கூடாது என்று கூறினார்கள். இந்த ஏரியாவில் மத்திய அரசு அலுவலகம் இருப்பதால், இங்கு எடுக்கப்படும் புகைப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவரவாதிகளிடம் பகிரும் அபாயம் இருப்பதாக கூறினார்கள். எவ்வளவு சார் வேண்டும் என்று கேட்டேன். 500 ருபாய் கொடுங்க! ஒரு 2 மணி மேரம் எடுத்துட்டு போங்க என்றார்கள். ஒரு 500 ரூபாய்க்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி வரைக்கும் சென்று வந்த அந்த போலீசாரை பார்க்கும்போது கண்டிப்பாக இதற்கு பயிற்சி இருக்கும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஜூலை 1 வந்தது. பின்னாடி அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கூறி இருந்ததால் என் மனைவிக்கும் ஒன்று வாங்கினேன்.அன்று காலை WHATSAPP – இல் வந்த மெசேஜ் ஒன்று என்னை சிந்திக்க வைத்தது. ஆவணங்கள் பறிமுதல் செய்வதற்கு பதில் 1000 ருபாய் அபாரதம் வாங்கி, அதற்கு ஒரு தலைக்கவசம் கொடுத்து அனுப்பலாம். இப்படி செய்தால், ஒரு வருடத்தில் அனைவரும் தலைக்கவசம் அணிவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. நீதியரசர்களை விட சிறப்பாக யோசிக்கும் பலபேர் இந்தியாவில் இருப்பதை நினைத்து பெருமிதப்பட்டேன்.

என் மனைவியும் நானும் தலைக்கவசத்துடன் பைக்கில் வெளியில் சென்றோம். என் மனைவி எவ்வளவோ பிடிவாதம் பிடித்தாள். பைக் ஒட்டி செல்லும் பெண்ணே, தமிழ்நாட்டுல தலைக்கவசம் போட மாட்டாங்க. நீங்க என்ன போட சொல்றிங்களே? என்று கேட்டாள். அவள் கேட்ட கேள்வி நியாயம்தான். க்ளோவ்ஸ், துப்பட்டா எல்லாம் போட்டு உடலில் தூசு படாமல் வண்டி ஓட்டும் பல பெண்கள் தலைக்கவசம் மட்டும் அணிவது இல்லை. இருந்தாலும் இந்தியாவை நான்தான் காப்பாத்தனும் என்று நினைத்து என் மனைவியைத் தலைக்கவசம் வற்புறித்தி அணிய சொன்னேன்.

ரோட்டில் பைக்கில் செல்லும்போது, எல்லாரும் என்னை பார்க்குறாங்க! என்றாள். சென்னையில் ஆயாவக் கூட பார்ப்பாங்க. அந்த அளவுக்கு காஞ்சி போய் இருக்காங்க என்றேன்.  ஒரு மாதிரி பார்க்குறாங்க! என்றாள். அவள் சொன்னது உண்மைதான். அவள் ஏதோ ஒரே பெரிய குற்றத்தை செய்து விட்டது போல பல பேருடைய பார்வை இருந்தது.

சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். என் பக்கத்தில் தலைக்கவசம் இல்லாமல் பைக்கில் வந்த ஒருவர், என்னை பார்த்து உங்கள மாதிரி ஆளுங்கனால தான் இந்தியா கெட்டு போகுது என்று கூறி விட்டு, சிக்னலில் நிக்காமல் ஒரு சந்துக்குள் பூந்து விட்டார். என் மனைவி சிரித்தாள். சென்னையில் இரண்டு நாள் வண்டி ஓட்டினாலே, எந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் நிற்பார்கள் என்பது நன்றாக தெரியும். மெட்ரோ ரயில் மேம்பாலத்தின் நிழலிலும், மேம்பால நிழலிலும் தான் பெரும்பாலும் நிற்பார்கள். அதனால் வெயில் அடிக்கும் நிழல் இல்லாத சாலைகளில் சென்றால், பெரும்பாலும் போலீசார் பிடிக்க மாட்டார்கள். 

வீட்டிற்க்கு வந்தேன். வெளியில் வழக்கமாக பூ விற்று கொண்டு இருக்கும் ஒரு அம்மா, என் மனைவியிடம், கொண்டைகாரம்மா இப்போதான் உங்கள தேடிட்டு வந்துட்டு போனாங்க! என்று கூறினாள்.

என் மனைவி என்னிடம், ஏங்க! அந்த பூக்காரம்மா, எப்போ பார்த்தாலும் கொண்டை வைக்குறதுனால பக்கத்து வீட்டு அம்மாவை, கொண்டைகாரம்மானு சொல்றாங்க! நானும் உங்க கூட ஹெல்மெட் போட்டுட்டு வந்தா ஹெல்மெட்காரின்னு சொன்னாலும் சொல்லுவாங்க என்றாள்.

எனக்கும் அந்த விபரீதம் புரிந்தது. இனிமேல் நீ தலைக்கவசம் அணிய வேண்டாம் என்று கூறினேன். ஊரே அவுத்து போட்டுட்டு ஓடும்போது, நாம மட்டும் ஏன் கோட்டு போட்டுட்டு ஓடனும்? முதல்ல பைக் ஓட்டுறவன் எல்லாம் தலைக்கவசம் போடட்டடும். அதுக்கப்பறமா பின்னாடி உட்காருபவன் போடறத பத்தி யோசிக்கலாம்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...