Tuesday, May 5, 2015

உத்தம வில்லன் உருவான கதை – ஒரு கற்பனைஉத்தம வில்லன் படத்தை கமல் எப்படி உருவாக்கி இருப்பார் என்று ஒரு கற்பனை. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. அனைவரையும் சிரிக்க வைக்க முயற்சி செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டது.


                  கமலஹாசன், வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேரளாவில் தெய்யம் திருவிழாவில் எடுத்த புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது அங்கே ரமேஷ் அரவிந்த் வருகிறார்.

ரமேஷ் அரவிந்த்: என்ன கமல்ஜி என்ன பண்றிங்க?

கமல்: எவ்வளவோ புத்தகங்கள், இந்திய வரலாறு படித்த எனக்கு இந்த மாதிரி ஒரு ஆட்டம் இருப்பது தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இது நான் போடாத வேஷமாக இருக்கிறது. இதை உடனே விஸ்வரூபம் 2 படத்தில் பயன் படுத்த வேண்டும்.

ரமேஷ் அரவிந்த்: விஸ்வரூபம் 2 மொத்தமா வேற கதை ஆச்சே! அதுல எப்படி இந்த ஆட்டத்தை சேர்ப்பிங்க?

கமல்: ஏன்? விஸ்வரூபம் 1-ல கதக் ஆடல. அதை தமிழன் வாய பொளந்து பார்க்கல. அதுக்கும் படத்துக்கும் எதனா சம்பந்தம் இருக்கா? என் படத்துல கதை இருக்கோ இல்லையோ! வேஷம் கண்டிப்பா இருக்கணும்.

ரமேஷ்: அது சரி! விஸ்வரூபம் 2 படத்தை உண்மையிலே எடுத்துட்டு இருக்கீங்களா?

கமல்: (கோபமாக) என்னையா பேசுற? அந்த படத்த ஹாலிவூட்ல கூட வராத லேட்டஸ்ட் டெக்னாலஜி வெச்சு எடுக்க போறேன். அதுக்கு 200 கோடி செலவு ஆகும். அதுக்காக தான் வெயிட் பண்றேன். இதுவும் மருதநாயகம் மாதிரி ஒரு உலக படமா கண்டிப்பா வரும்.

ரமேஷ்: (மனதிற்குள், மருதநாயகம் மாதிரியா?) சரி ஜி! அது வரைக்கும் இந்த கெட் அப் யாரும் போட மாட்டங்கன்னு என்ன நிச்சயம்? ஒரு காலத்துல நீங்க மட்டும் தான் கெட் அப் மாத்துனிங்க! இப்போ பவர் ஸ்டார்ல இருந்து எல்லாரும் கெட் அப் மாத்துறாங்களே?

கமல்: அதுவும் சரி தான்! ஜட்டி மாத்துற மாதிரி அவன் அவன் கெட் அப் மாத்துறான். உடனடியா இந்த கெட் அப் போடணும்னா ஒரு புது படம் எடுத்து ஆகனும்.

ரமேஷ்: கெட் அப்க்கு ஒரு படமா?

கமல்: ஆமாம். இந்த கெட் அப்-யே படத்தோட first look-ஆ போடலாம்.

ரமேஷ்: அப்படி போட்டா copy அடிச்சுட்டோம்னு சொல்லுவாங்க ஜி

கமல்: சொல்லட்டும்! நம்ம எது பண்ணாலும் உலகதரம்னு நினைக்க ஒரு கூட்டம் இருக்கு. அவங்க பார்த்துப்பாங்க! அப்படி இல்லனா இந்திய வரலாறு தெரியாத முண்டங்கள்னு நானே ஒரு பேட்டி கொடுத்து ஆப் பண்ணிடுறேன்.

ரமேஷ்: இந்த படத்துல Heroine யார போடலாம்னு இருக்கீங்க?

கமல்: பூஜா குமார், ஆண்ட்ரியா தான். போன படத்துலையே அவங்கள நான் சரியா use பண்ணல!

ரமேஷ்: சார்!

கமல்: யோவ்! சரியான ரோல் கொடுக்கலன்னு சொன்னேன்யா! அதே மாதிரி இந்த படத்துல பாலச்சந்தர் சாருக்கு ஒரு ரோல் கொடுக்கலாம்னு இருக்கேன்! அவருக்கு குரு மரியாதை செய்யனும்.

ரமேஷ்: அதுக்கு இந்த படத்த அவரையே டைரக்ட் பண்ண வைக்கலாமேஜி

கமல்: இல்லை! ஒரு வேலை படம் நல்லா வந்துச்சுனா, பேரு எல்லாம் அவருக்கு போய்டும்.

ரமேஷ்: அப்போ! நீங்களே டைரக்ட் பண்ண போறிங்களா?

கமல்: சுயநலவாதி என்று ஊர் பேசும்.

ரமேஷ்: அப்போ! யார்தான் டைரக்ட் பண்ண போறா?

கமல்: டைரக்ட் பண்றவன் பேர பார்த்ததும், இவன் ஒரு வெத்து வேட்டு, இவன் கண்டிப்பா டைரக்ட் பண்ணி இருக்க மாட்டான். கமல் தான் பண்ணி இருப்பார்னு மக்கள் பேசணும்.அப்படி ஒரு ஆள்.

ரமேஷ்: அப்படி ஒரு கூமுட்டை இருக்கனா? யாருஜி அது.
கமல்: வேற யாரு நீதான்

ரமேஷ்: அதிர்ச்சி அடைகிறார் (மனதிற்குள், என்ன பலிகடா ஆக்க பார்க்குறியா? இந்த குப்ப படத்தை எவன் தயாரிக்கிரானு பார்க்கலாம்).
கமல்: என்ன மனசுக்குள்ள நினைக்குற? இந்த உலகத் திரைப்படத்தை தயாரிக்குற பாக்கியம் யாருக்கு இருக்குனுதான?

ரமேஷ்: ஆமாம்ஜி!

கமல்: போன வருஷத்துல மிக பெரிய உலகத் திரைப்படத்த கொடுத்தவர். தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் ஒரே படத்துல இறக்கினவர். நம்ம tuning லிங்குசாமி தான்.

ரமேஷ்: (அதிர்ச்சியாகி) சார் அவரா? அஞ்சான் படத்தையா உலகப்படம்னு சொல்றிங்க.

கமல்: ஆமாம்யா! எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு எல்லாம் அது உலகப்படம் தான். அந்த படம் இப்போ புரியாது! 10 – 15 வருஷம்கழிச்சுதான் புரியும்.

ரமேஷ்: (மனதிற்குள் – இப்படியே எத்தனை படத்துக்கு சொல்றது) சரி சார்! மியூசிக் ஏ.ஆர்.ரகுமான் இல்லை இளையராஜாவா போடலாமா?

கமல்: யோவ்! அவங்க எல்லாம் படத்துல நான் பாடுறதுக்கு ஒரு பாட்டுக்கு மேல தர மாட்டாங்கயா!

ரமேஷ்: சங்கர் மகாதேவனும் போன படத்துல பாதியிலே போய்ட்டார். அப்போ வழக்கம் போல தேவிஸ்ரீபிராசாத் போட்டுடலாமா?

கமல்: (பதற்றமாகி) அவர் மட்டும் வேணாம்பா! போன படத்துலையே காத செவிடாக்கிட்டான். வாயா வெச்சு இருக்கான். காட்டு கத்து கத்துரான்யா! சங்கீதமும் தெரிஞ்சவனா இருக்கணும். அதே நேரத்துல நம்ம சொல்றத செய்றவனாவும் இருக்குனும். வேணும்னா வைரமுத்துவவிட்டு ஜிப்ரான கேட்க சொல்லலாம்.

ரமேஷ்: சார் நீங்க ஒரு உத்தமன் பிளஸ் வில்லன் சார்.

கமல்: சூப்பர். அதுதான் படத்தோட பேர். உத்தம வில்லன்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...