Monday, May 18, 2015

புறம்போக்கு – திரை விமர்சனம்


முதல் பாதியில் இருக்கும் படத்துக்கு ஒட்டாத சில காட்சிகளையும், பாடல்களையும் தூக்கி இருந்தால் கண்டிப்பாக இந்த படத்தை தமிழில் ஒரு “SHASHANK REDEMPTION” என்று கூறலாம்.


                                               


சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஆர்யாவை மீட்க, அவரது இயக்கத்தினரும், தூக்கு போடும் தொழிலாளியான விஜய் சேதுபதியும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். அதை சிறையதிகாரியான ஷ்யாம் முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மையக் கரு.

ஆர்யா பார்ப்பதற்கு கம்யூனிஸ்ட் தலைவர் மாதிரி தோன்றினாலும், அவருடைய குரல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் படத்தில் பேசும் பல இடதுசாரி வசனங்கள் ஒப்புவிப்பதை போன்று உள்ளது. இருந்தாலும் அவரது உடல் மொழி அருமை. தன்னுடைய சாக்லேட் பாய் இமேஜில் இருந்து அவர் வெளி வர நினைத்து, கடைசியாக நடித்த மீகாமன் மற்றும் இந்த படத்தில் கதைத்தேர்வு மிக கச்சிதம்.

இயல்பான நடிப்பு, இயல்பான வசன உச்சரிப்பு – இது தானே விஜய் சேதுபதி? நாளைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் இவரது நடிப்பு, கல் நெஞ்சையும் கரைய வைக்கும். உங்களை ஏற்றிவிட ஒரு மீடியாவும் இல்லையே? என்ற கவலை வேண்டாம். இதே மாதிரி சிறந்த கதை மற்று சிறந்த நடிப்பை வெளிபடுத்துங்கள். மக்களே! உங்களுக்கு மகுடம் சூட்டுவார்கள்.

ஷ்யாம் – தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அவரது நடிப்பை அங்கீகரிக்க யாரும் தயாராகயில்லை. விருதுகள் கொடுப்பவர்கள் வெறும் பிரம்மாண்டத்தையும், லாபத்தையும் மட்டுமே நோக்கினர். இந்த படத்தில் சிறையதிகாரியாக மிகவும் கட்சிதமாக நடித்து இருக்கிறார். நிச்சியமாக மக்கள் மனதில் உங்களுக்கு விருது உண்டு ஷ்யாம். முயற்சிகள் மற்றும் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

கார்த்திகாவின் கதாப்பாத்திரம் மிகவும் செயற்கையாக உள்ளது. நிஜத்திற்கு மிக அருகில் நடக்கும் இது போன்ற திரைக்கதைக்கு இந்த கதாப்பாத்திரம் தேவை தானா? படத்திற்கு மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஏகாம்பரம். குறிப்பாக சிறைக் காட்சிகள் உலகத்தரம்.

படத்திற்கு பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவா. இவர் தன்னோட சொந்த பின்னணி இசையைதான் படத்திற்கு வழங்கினார் என்றால் தேவாவே வந்து அடிப்பார். அப்பட்டமான உறுவல், mission impossible போன்ற படங்களில் இருந்து.
இந்த மாதிரி திரைப்படங்களை உலக அளவில் எடுத்து செல்ல இசை மிகவும் முக்கியம். இந்த படத்திற்கு மட்டும் இசைஞானி இசை அமைத்து இருந்தால் இந்த படத்தின் தரம் இன்னும் ஒரு ஐம்பது சதவீதம் உயர்ந்து இருக்கும்.

இறுதியாக படத்தை இயக்கி தயாரித்து இருப்பவர் ஜனநாதன். முதல் பாதியில் திரைக்கதையில் தேவை இல்லாமல் பாலைவனம் மற்றும் பனி பிரதேசங்களை காட்டியதைத் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பிற்பாதியில் திரையரங்கையே தனது கட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒருவன் தூக்கில் தொங்குவது எவ்வளவு கடினமான செயல் என்பதை அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் பதிய வைத்துள்ளார். ஏழு தமிழர் விடுதலையை எதிர்நோக்கி உள்ள அல்லது எதிர்க்கின்ற அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...