Tuesday, May 26, 2015

சங்கி மங்கி - நகைச்சுவை குறும்படம்

BAD BOYZ குழுமத்தின் பத்தாவது குறும்பட படைப்பு. இந்த நகைச்சுவை குறும்படத்தினை பார்த்து உங்களது மேலான கருத்துகளைக் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

அ.அருள்செல்வன்.

Monday, May 18, 2015

புறம்போக்கு – திரை விமர்சனம்


முதல் பாதியில் இருக்கும் படத்துக்கு ஒட்டாத சில காட்சிகளையும், பாடல்களையும் தூக்கி இருந்தால் கண்டிப்பாக இந்த படத்தை தமிழில் ஒரு “SHASHANK REDEMPTION” என்று கூறலாம்.


                                               


சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் ஆர்யாவை மீட்க, அவரது இயக்கத்தினரும், தூக்கு போடும் தொழிலாளியான விஜய் சேதுபதியும் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். அதை சிறையதிகாரியான ஷ்யாம் முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மையக் கரு.

ஆர்யா பார்ப்பதற்கு கம்யூனிஸ்ட் தலைவர் மாதிரி தோன்றினாலும், அவருடைய குரல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் படத்தில் பேசும் பல இடதுசாரி வசனங்கள் ஒப்புவிப்பதை போன்று உள்ளது. இருந்தாலும் அவரது உடல் மொழி அருமை. தன்னுடைய சாக்லேட் பாய் இமேஜில் இருந்து அவர் வெளி வர நினைத்து, கடைசியாக நடித்த மீகாமன் மற்றும் இந்த படத்தில் கதைத்தேர்வு மிக கச்சிதம்.

இயல்பான நடிப்பு, இயல்பான வசன உச்சரிப்பு – இது தானே விஜய் சேதுபதி? நாளைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் இவரது நடிப்பு, கல் நெஞ்சையும் கரைய வைக்கும். உங்களை ஏற்றிவிட ஒரு மீடியாவும் இல்லையே? என்ற கவலை வேண்டாம். இதே மாதிரி சிறந்த கதை மற்று சிறந்த நடிப்பை வெளிபடுத்துங்கள். மக்களே! உங்களுக்கு மகுடம் சூட்டுவார்கள்.

ஷ்யாம் – தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து ஆறு மெழுகுவர்த்திகள் என்று ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அவரது நடிப்பை அங்கீகரிக்க யாரும் தயாராகயில்லை. விருதுகள் கொடுப்பவர்கள் வெறும் பிரம்மாண்டத்தையும், லாபத்தையும் மட்டுமே நோக்கினர். இந்த படத்தில் சிறையதிகாரியாக மிகவும் கட்சிதமாக நடித்து இருக்கிறார். நிச்சியமாக மக்கள் மனதில் உங்களுக்கு விருது உண்டு ஷ்யாம். முயற்சிகள் மற்றும் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

கார்த்திகாவின் கதாப்பாத்திரம் மிகவும் செயற்கையாக உள்ளது. நிஜத்திற்கு மிக அருகில் நடக்கும் இது போன்ற திரைக்கதைக்கு இந்த கதாப்பாத்திரம் தேவை தானா? படத்திற்கு மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஏகாம்பரம். குறிப்பாக சிறைக் காட்சிகள் உலகத்தரம்.

படத்திற்கு பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவா. இவர் தன்னோட சொந்த பின்னணி இசையைதான் படத்திற்கு வழங்கினார் என்றால் தேவாவே வந்து அடிப்பார். அப்பட்டமான உறுவல், mission impossible போன்ற படங்களில் இருந்து.
இந்த மாதிரி திரைப்படங்களை உலக அளவில் எடுத்து செல்ல இசை மிகவும் முக்கியம். இந்த படத்திற்கு மட்டும் இசைஞானி இசை அமைத்து இருந்தால் இந்த படத்தின் தரம் இன்னும் ஒரு ஐம்பது சதவீதம் உயர்ந்து இருக்கும்.

இறுதியாக படத்தை இயக்கி தயாரித்து இருப்பவர் ஜனநாதன். முதல் பாதியில் திரைக்கதையில் தேவை இல்லாமல் பாலைவனம் மற்றும் பனி பிரதேசங்களை காட்டியதைத் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பிற்பாதியில் திரையரங்கையே தனது கட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒருவன் தூக்கில் தொங்குவது எவ்வளவு கடினமான செயல் என்பதை அனைவர் மனதிலும் பசுமரத்தாணிபோல் பதிய வைத்துள்ளார். ஏழு தமிழர் விடுதலையை எதிர்நோக்கி உள்ள அல்லது எதிர்க்கின்ற அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Tuesday, May 5, 2015

உத்தம வில்லன் உருவான கதை – ஒரு கற்பனைஉத்தம வில்லன் படத்தை கமல் எப்படி உருவாக்கி இருப்பார் என்று ஒரு கற்பனை. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல. அனைவரையும் சிரிக்க வைக்க முயற்சி செய்வதற்காக மட்டுமே எழுதப்பட்டது.


                  கமலஹாசன், வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேரளாவில் தெய்யம் திருவிழாவில் எடுத்த புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது அங்கே ரமேஷ் அரவிந்த் வருகிறார்.

ரமேஷ் அரவிந்த்: என்ன கமல்ஜி என்ன பண்றிங்க?

கமல்: எவ்வளவோ புத்தகங்கள், இந்திய வரலாறு படித்த எனக்கு இந்த மாதிரி ஒரு ஆட்டம் இருப்பது தெரியாமல் போனது விந்தையாக இருக்கிறது. இது நான் போடாத வேஷமாக இருக்கிறது. இதை உடனே விஸ்வரூபம் 2 படத்தில் பயன் படுத்த வேண்டும்.

ரமேஷ் அரவிந்த்: விஸ்வரூபம் 2 மொத்தமா வேற கதை ஆச்சே! அதுல எப்படி இந்த ஆட்டத்தை சேர்ப்பிங்க?

கமல்: ஏன்? விஸ்வரூபம் 1-ல கதக் ஆடல. அதை தமிழன் வாய பொளந்து பார்க்கல. அதுக்கும் படத்துக்கும் எதனா சம்பந்தம் இருக்கா? என் படத்துல கதை இருக்கோ இல்லையோ! வேஷம் கண்டிப்பா இருக்கணும்.

ரமேஷ்: அது சரி! விஸ்வரூபம் 2 படத்தை உண்மையிலே எடுத்துட்டு இருக்கீங்களா?

கமல்: (கோபமாக) என்னையா பேசுற? அந்த படத்த ஹாலிவூட்ல கூட வராத லேட்டஸ்ட் டெக்னாலஜி வெச்சு எடுக்க போறேன். அதுக்கு 200 கோடி செலவு ஆகும். அதுக்காக தான் வெயிட் பண்றேன். இதுவும் மருதநாயகம் மாதிரி ஒரு உலக படமா கண்டிப்பா வரும்.

ரமேஷ்: (மனதிற்குள், மருதநாயகம் மாதிரியா?) சரி ஜி! அது வரைக்கும் இந்த கெட் அப் யாரும் போட மாட்டங்கன்னு என்ன நிச்சயம்? ஒரு காலத்துல நீங்க மட்டும் தான் கெட் அப் மாத்துனிங்க! இப்போ பவர் ஸ்டார்ல இருந்து எல்லாரும் கெட் அப் மாத்துறாங்களே?

கமல்: அதுவும் சரி தான்! ஜட்டி மாத்துற மாதிரி அவன் அவன் கெட் அப் மாத்துறான். உடனடியா இந்த கெட் அப் போடணும்னா ஒரு புது படம் எடுத்து ஆகனும்.

ரமேஷ்: கெட் அப்க்கு ஒரு படமா?

கமல்: ஆமாம். இந்த கெட் அப்-யே படத்தோட first look-ஆ போடலாம்.

ரமேஷ்: அப்படி போட்டா copy அடிச்சுட்டோம்னு சொல்லுவாங்க ஜி

கமல்: சொல்லட்டும்! நம்ம எது பண்ணாலும் உலகதரம்னு நினைக்க ஒரு கூட்டம் இருக்கு. அவங்க பார்த்துப்பாங்க! அப்படி இல்லனா இந்திய வரலாறு தெரியாத முண்டங்கள்னு நானே ஒரு பேட்டி கொடுத்து ஆப் பண்ணிடுறேன்.

ரமேஷ்: இந்த படத்துல Heroine யார போடலாம்னு இருக்கீங்க?

கமல்: பூஜா குமார், ஆண்ட்ரியா தான். போன படத்துலையே அவங்கள நான் சரியா use பண்ணல!

ரமேஷ்: சார்!

கமல்: யோவ்! சரியான ரோல் கொடுக்கலன்னு சொன்னேன்யா! அதே மாதிரி இந்த படத்துல பாலச்சந்தர் சாருக்கு ஒரு ரோல் கொடுக்கலாம்னு இருக்கேன்! அவருக்கு குரு மரியாதை செய்யனும்.

ரமேஷ்: அதுக்கு இந்த படத்த அவரையே டைரக்ட் பண்ண வைக்கலாமேஜி

கமல்: இல்லை! ஒரு வேலை படம் நல்லா வந்துச்சுனா, பேரு எல்லாம் அவருக்கு போய்டும்.

ரமேஷ்: அப்போ! நீங்களே டைரக்ட் பண்ண போறிங்களா?

கமல்: சுயநலவாதி என்று ஊர் பேசும்.

ரமேஷ்: அப்போ! யார்தான் டைரக்ட் பண்ண போறா?

கமல்: டைரக்ட் பண்றவன் பேர பார்த்ததும், இவன் ஒரு வெத்து வேட்டு, இவன் கண்டிப்பா டைரக்ட் பண்ணி இருக்க மாட்டான். கமல் தான் பண்ணி இருப்பார்னு மக்கள் பேசணும்.அப்படி ஒரு ஆள்.

ரமேஷ்: அப்படி ஒரு கூமுட்டை இருக்கனா? யாருஜி அது.
கமல்: வேற யாரு நீதான்

ரமேஷ்: அதிர்ச்சி அடைகிறார் (மனதிற்குள், என்ன பலிகடா ஆக்க பார்க்குறியா? இந்த குப்ப படத்தை எவன் தயாரிக்கிரானு பார்க்கலாம்).
கமல்: என்ன மனசுக்குள்ள நினைக்குற? இந்த உலகத் திரைப்படத்தை தயாரிக்குற பாக்கியம் யாருக்கு இருக்குனுதான?

ரமேஷ்: ஆமாம்ஜி!

கமல்: போன வருஷத்துல மிக பெரிய உலகத் திரைப்படத்த கொடுத்தவர். தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் ஒரே படத்துல இறக்கினவர். நம்ம tuning லிங்குசாமி தான்.

ரமேஷ்: (அதிர்ச்சியாகி) சார் அவரா? அஞ்சான் படத்தையா உலகப்படம்னு சொல்றிங்க.

கமல்: ஆமாம்யா! எவன் பொண்டாட்டி பத்தினியோ அவனுக்கு எல்லாம் அது உலகப்படம் தான். அந்த படம் இப்போ புரியாது! 10 – 15 வருஷம்கழிச்சுதான் புரியும்.

ரமேஷ்: (மனதிற்குள் – இப்படியே எத்தனை படத்துக்கு சொல்றது) சரி சார்! மியூசிக் ஏ.ஆர்.ரகுமான் இல்லை இளையராஜாவா போடலாமா?

கமல்: யோவ்! அவங்க எல்லாம் படத்துல நான் பாடுறதுக்கு ஒரு பாட்டுக்கு மேல தர மாட்டாங்கயா!

ரமேஷ்: சங்கர் மகாதேவனும் போன படத்துல பாதியிலே போய்ட்டார். அப்போ வழக்கம் போல தேவிஸ்ரீபிராசாத் போட்டுடலாமா?

கமல்: (பதற்றமாகி) அவர் மட்டும் வேணாம்பா! போன படத்துலையே காத செவிடாக்கிட்டான். வாயா வெச்சு இருக்கான். காட்டு கத்து கத்துரான்யா! சங்கீதமும் தெரிஞ்சவனா இருக்கணும். அதே நேரத்துல நம்ம சொல்றத செய்றவனாவும் இருக்குனும். வேணும்னா வைரமுத்துவவிட்டு ஜிப்ரான கேட்க சொல்லலாம்.

ரமேஷ்: சார் நீங்க ஒரு உத்தமன் பிளஸ் வில்லன் சார்.

கமல்: சூப்பர். அதுதான் படத்தோட பேர். உத்தம வில்லன்.

Sunday, May 3, 2015

உத்தம வில்லன் – திரை விமர்சனம்இப்படி ஒரு கதையை சரக்கு அடித்துவிட்டு உளறுபவன் கூட கூறி இருக்கமாட்டான். இப்படிப்பட்ட கதையை கமல் தயாரிப்பாளரிடம் கூறி, இவ்வளவு கோடிகள் செலவு செய்து எடுத்து இருக்கிறார் என்றால், அவரை சுற்றி இருக்கும் ஆட்கள் போடும் ஜால்ராக்கள் எளிதில் புரியும். அவர் எது சொன்னாலும் உலகத்தரம் என்றும், அவர் எது பேசினாலும் உலக விஷயம் என்றும், அவர் படம் புரியாவிட்டால் அவர்கள் முட்டாள் என்றும் கூறும் கும்பல் இருக்கும் வரை, இதுபோன்று அதிமேதாவிதனமான பல படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

                 பொதுவாக கமல் படங்கள் 15 வருடங்கள் கழித்து தான் மக்களிடம் போய் சேரும் என்ற ஒரு கட்டு கதை உண்டு. 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை மக்கள் மறந்தது தான் மிச்சம். தயவு செய்து கமல் மாதிரி ஒரு நல்ல நடிகரை நிகழ் உலகத்தில் படம் எடுக்க அனுமதியுங்கள். நாம் சாதரணமாக படம் எடுத்தால் எங்கே மக்கள் தன்னை மேதாவி என்று நினைக்க மாட்டார்களோ? என்று எண்ணி எடுத்தது போன்று உள்ளது இத்திரைப்படம்.

சனிக்கிழமை மாலை ஷோவிற்கு தான் நான் சென்றேன். ஆனால் அதுவே படத்தின் முதல் காட்சி ஆனது. இது ஒன்றும் ஆச்சிரியப்பட வேண்டிய விஷயம் அல்ல. பொதுவாக எல்லா கமல் படங்களிலும் இதுதான் நிகழ்கிறது அல்லது நிகழ்த்தப்படுகிறது. படம் தொடங்கும் முதல் காட்சியில் பாலச்சந்தர் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அதில் கூறப்படும் கவிதை எனக்கு சுத்தமாக புரியவில்லை. அதிலும் கமலுடைய தமிழ் ஆர்வத்தை அல்லது புலமையை காட்டி இருக்கத் தேவையில்லை. வெறும் புகைப்படம் மட்டும் காட்டி இருந்தாலே அந்த காட்சி இன்னும் உருக்கமாக இருந்து இருக்கும். அவர் கூறும் கவிதைக்கு என்ன அர்த்தம் என்று யோசிக்கையிலே அந்த புகைப்படம் மறைந்து அடுத்த காட்சிக்கு சென்று விடுகிறது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். தான் காதலித்த பெண்ணை நினைத்துக்கொண்டு, நிகழ் உலகத்தில் வேறொரு பெண்ணுடன் வாழுந்து கொண்டு, இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து இருக்கும் ஒரு உச்ச நடிகருக்கு கேன்சர் வருகிறது. தான் இறப்பதற்குள் ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்று எண்ணி, அந்த படத்தை எடுத்து முடிக்கிறார். அந்த படம் தான் உத்தம வில்லன். 

உத்தமனாக வரும் கமலின் நடிப்பு மிக செயற்கையாக உள்ளது. கொஞ்சம் கூட மனதில் ஒட்டாத காட்சி அமைப்பு. ஆனால் மனோவாக வரும் கமல், நான் தற்பொழுதும் இந்தியாவின் சிறந்த நடிகர் தான் என்பதை நிருபித்துவிட்டார். மிகவும் தத்ரூபமான நடிப்பு. மகனிடம் தனக்கு உள்ள கேன்சரை விவரிக்கும் காட்சி கிளாஸ்.

படத்தின் ஒளிப்பதிவு அருமை. இசை பின்னணியிலும் ஒட்டவில்லை. பாடல்களிலும் ஒட்டவில்லை. படம் ஆமை வேகமாக செல்கிறது. ஒரு வேலை நான் தமிழ்படம் மட்டும் பார்க்கும் சாதாரண ரசிகன் என்பதால் கூட இருக்கலாம். இந்த படத்தை என்னால் இயக்கி, நடிக்க முடியாது என்ற காரணத்தினால்தான் ரமேஷ் அரவிந்த் இயக்கினார் என்று கமல்ஹாசனே கூறிவிட்டதால், அவரைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

என்னதான் திரைப்படம் தத்ரூபமாக அமைய வேண்டும் என்றாலும் அதற்காக, விஸ்வநாத் அவர்களை கமலஹாசன் காலில் விழவைப்பதையும், கேன்சர் ஆபரேஷன் செய்யும்முன் OXYGEN MASK வழியாக தன்னுடைய கீப்பீற்கு முத்தம் கொடுப்பதையும் சகிக்க முடியவில்லை. இதற்கும் காரணம் கமலை முத்த நாயகன் என்று சொரிந்துவிடும் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள்தான். எல்லா விதமாகவும் முத்தம் கொடுத்து ஆயிற்று, இனி எப்படி முத்தம் கொடுப்பது என்று யோசித்ததன் விளைவு தான் அந்த OXYGEN MASK முத்த காட்சி. இன்றைய இளைஞர்கள் முன்பு போல் இல்லை. முத்தத்தையும் மீறி மொத்தத்தையும் செய்பவர்கள். ஆகவே இது போன்ற காட்சிகளை கமல்ஹாசன் கண்டிப்பாக நிறுத்திக்கொள்ளலாம்.

இறுதியாக கமல் என்னும் தமிழ் பட நாயகனை (உலக நாயகனை அல்ல) எதிர்பார்த்து பாபநாசம் படத்திற்காக காத்து இருக்கும் உண்மையான ரசிகர்களில் ஒருவன்.Friday, May 1, 2015

மோடியின் மே தின பரிசுசத்தமே இல்லாமல் ஒரு சட்டம் நிறைவேறி விட்டது. 15000 கீழ் BASIC உள்ள அனைவருக்கும் இந்த மாதத்தில் இருந்து GROSS SALARY யில் இருந்து 12% சதவீதம் PF பிடிக்கப்படும் என்பதுதான் அந்த சட்டம். இதனால் 15000 கீழ் BASIC உள்ள அனைவருக்கும், மாத சம்பளம் ஆயிரம் முதல் மூவாயிரம் வரை குறையும். 

                          


                        

மிக சுலபமாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாங்கிய மூன்று வருட சம்பள உயர்வு PF என்கின்ற பெயரில் இந்த மாதத்தில் இருந்து உறிஞ்சப்படுகிறது. நீங்கள் கேட்கலாம்? PF என்பது வைப்பு நிதி தானே? பிற்காலத்தில் உதவும் என்று. நிகழ்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கும் இவர்களுக்கு எதற்கு வைப்பு நிதி? தன் தேவைக்கு போகதானே சேமிப்பு எல்லாம்? வெளியூரில் இருந்து வந்து தங்கும் இளைஞர்கள் பலர் 2000 மற்றும் 3000 ரூபாய்க்கு வீடு வாடைக்கு எடுத்து தங்குகிறார்கள். இந்த மாதம் முதல் அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் பணம் வெகுவாக குறையும். இதன் மூலம் தன மகனின் வறுமானத்தை நம்பி இருக்கும் பல பெற்றோர்கள் பாதிக்கப்படுவார்கள்.

தொழிலாளியின் PF தொகை மட்டும் அல்லாமல், கம்பெனி செலுத்தும் PF தொகையும் GROSS SALARY யில் இருந்து 12% சதவீதம் பிடிக்கப்படும். பெரும்பாலான கம்பனிகளில் கம்பெனியின் PF-வும் தொழிலாளின் GROSS SALARY யில் இணைக்கப்படுவது நாம் அறிந்ததே! இதனால் மாத சம்பளம் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. நாட்டின் பணத் தேவையை பூர்த்தி செய்ய பல வழிகள் இருக்கும்போது, எதற்கு ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது என்று புரியவில்லை.

இதனைப் பற்றி நேற்று வரை பேசிய நம் இளைஞர்கள் இன்று உத்தம வில்லன் மற்றும் நடிகரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர்ககளை போற்றும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தனி மனித தேவை பூர்த்தியாகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற வறுமை நாட்டில் நடிகர்களை இன்றும் கொண்டாடும் நிலை தொடர்வது மிகுந்த வேதனைக்குரிய செய்தி. இன்று உத்தம வில்லன் படம் ரிலீசாக சிறிது தாமதம் ஆனதும், சாலை மறியலில் ஈடுப்பட்ட இளைஞர்கள், மேகதாது, சாலைப் பாதுகாப்பு புதிய சட்டம் போன்ற மக்களை பாதிக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு.

சரி! எனக்கு நேரம் ஆகிவிட்டது. உத்தம வில்லன் படத்திற்கு செல்ல வேண்டி உள்ளதால் இந்த கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...