Saturday, March 7, 2015

இந்தியாவில் மகளிர் தினம்பெண்களை தெய்வமாக வழிபட்ட நாடு, பெண்களின் பெயரை ஆறுகளுக்கு சூட்டி மகிழ்ந்த நாடு, பெண்களை தாயாக மதிக்கும் நாடு என்று எல்லா புகழ்களையும் உடைய இன்றைய இந்தியாவின் நிலைமை என்ன? பெண்களை சக மனிதர்களாக மதிக்கிறோமா? இந்தியாவில் பெண்களுக்கு எதிரி யார்? பாரதி கண்ட புதுமை பெண்ணின் கனவு நனவாக இந்தியாவில் என்ன செய்ய வேண்டும். பின்வரும் கட்டுரையில் காண்போம்.

                    


1)      அரசியல்வியாதிகள் – ஒரு பக்கம் 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூவும் ஒரு கட்சி. இன்னொரு பக்கம் அது வேண்டாம் என்று கூவும் இன்னொரு கட்சி. முதலில் இதற்கு ஒரு சட்டம் அவசியமா? உங்கள் கட்சிக்கு பெண்கள் மீது அக்கறை இருந்தால் 100 சதவீத இடத்தையும் பெண்களுக்கே கொடுங்கள். ஏன் இந்த வெளி வேஷம்? இதற்கு எல்லாம் மேலாக பெண்கள் அனைவரும் நான்கு குழந்தைகள் கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும் என்று கூறும் நிலையில் தான் இன்றைய ஆளும் கட்சியின் எம்.பி க்கள் உள்ளனர். இவ்வளவு ஏன்? பெண்கள் ஆட்சி செய்யும் நம் மாநிலத்தில் கூட பத்து சதவீத எம்.எல்.ஏக்கள் கூட பெண்கள் இல்லை. இதே நிலைமை தான் இந்தியா முழுவதும். இவர்கள் திருந்த வாய்ப்பு என்பது தற்போது மிக குறைவு. ஆதலால் நாடாளமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் பாதி என்பது எல்லாம் வெறும் பகல் கனவாக போகவே வாய்ப்பு உள்ளது.

2)      கலாச்சாரம் – கமல்ஹாசன் கூறுவது போல நம் கலாச்சாரம் என்பது 50 வருடங்களுக்கு ஒரு முறை மாறக்கூடியது. 50 வருடங்களுக்கு முன்பு பெண்கள் ஜாக்கெட் அணியாமல் நம் கிராமங்களில் சுற்றி திரிந்தனர். தற்பொழுது அது சாத்தியமா? நம் பிள்ளைகளை நம் கலாச்சாரத்தில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி வளர்த்ததன் விளைவு தான் டெல்லி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட குற்றவாளியின் பேட்டி.அவனை பொறுத்த வரைக்கும் ஒன்பது மணிக்கு மேல் வெளியே சுற்றும் அனைத்து பெண்களும் தவறானவர்கள்தான். மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்வதே கலாச்சாரம் என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் போதிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, பழைய புராணங்களைப் பாடிக் கொண்டு இருப்பது, கலாச்சாரம் என்ற பெயரில் பெண் அடிமைக்கு வித்திடும்.

3)      திரைப்படம் – ­பெண்களை வெறும் சதை பிண்டங்களாக காட்டும் வேலையை மட்டும் தான் பெரும்பாலும் செய்து வருகின்றன திரைப்படங்கள். பெண்களுக்கு அவர்கள் வைத்த பெயர் ஏராளம். பிகர், ஐட்டம் உள்ளிட்டவை சில. கல்லூரி என்றால் அது பெண்களை கிண்டல் செய்யும் இடம் என்று அனைவருக்கும் போதிப்பவை. திரைப்படத்தை வெறும் படமாக பாருங்கள் என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் ஒரு நடிகர், நடிகைகளுக்கு நாம் கொடுக்கும் சமூக அந்தஸ்து என்பது இந்த உலகத்தில் எந்த பகுதியிலும் கிடைக்காதது.  அப்படி சமூக அந்தஸ்து எதிர் பார்க்கும் அவர்கள், கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் படம் எடுக்க வேண்டும்.

4)      ஆண்கள் – சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் நேரடி கொடுமைகளுக்கு காரணம் ஆண்கள் தான். பெண்களை குடித்துவிட்டு அடிப்பது, வீட்டு வேலைக்காரி போன்று நடத்துவது போன்றவை சர்வ சாதரணமாக நடப்பவை. அதற்கு இயற்கையாக இறைவன் ஆண்களுக்கு கொடுத்த சில சவுகரியங்களும், பெண்களுக்கு கொடுத்த சில அசவுரியங்களும் முக்கியமான காரணம். இதனை நாம் சரி செய்ய வேண்டும் என்றால், நான் முன்பே கூறியது போல கலாச்சாரம் என்னும் மாயையை போக்க வேண்டும். அதற்கு நம் அடுத்த தலைமுறையை கலாச்சாரம் என்னும் மாயையில் விழாமல், மனிதாபிமானம் என்னும் பாதையில் நடக்க நாம் தான் வழிகாட்ட வேண்டும்.

5)      பெண்கள் – ஆச்சிரியப்பட வேண்டாம். பெண்களின் பிரச்சினைகளுக்கு பெண்களும் முக்கிய காரணம் தான். நகர் புறத்தில் செயல்படும் மாதர் அமைப்புகள் வெறும் வெத்து விளம்பரத்திற்காக செயல் படுகின்றன.  டெல்லியில் நிருபமா கற்பழித்து கொலை செய்யப்பட்ட அந்த நாளில், திருவண்ணாமலையில் ஒரு கிராமத்தில் ஒரு பெண் கற்பழித்து கொலை செய்யப்படுகிறாள். ஆனால் அதனை பற்றி பேச அந்த மகளிர் அமைப்புகள் தயாராக இல்லை. அவர்கள் மூக்கு நுழைக்கும் விஷயத்தில் ஒன்று பணம் விளையாடும் அல்லது விளம்பரம் இருக்கும்.  ஏன் நகரத்தில் முக நூலில் புழங்கும் பெண்கள் கூட அதனை சட்டை செய்வது கிடையாது. இதற்கு எல்லாம் மேலாக அழகாக இருக்கும் பெண்கள் சற்று சுமாராக இருக்கும் பெண்களுடன் புகைப்படம் எடுத்து பகிர்வதையே கேவலமாக கருதுகிறார்கள். இதனால் சற்று சுமாராக இருக்கும் பெண்கள் தன்னம்பிக்கையை இழந்து, கொடியவர்களின் வலைகளில் விழுகிறார்கள். இந்த சூழ்நிலை மாற வேண்டும். பெண்களுக்கு எங்கு தவறு நடந்தாலும் மாதர் சங்கங்கள் மற்றும் நகரத்தில் உள்ள பெண்கள் போராட வேண்டும். அதுதான் இந்தியாவில் பெண்களின் எழுச்சிக்காக நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.

இல்லையென்றால் “ பெண்கள் நாட்டின் கண்கள்” என்பது வெறும் ஏட்டளவில் தான் இருக்கும்.


Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...