Thursday, February 5, 2015

என்னை அறிந்தால் – திரை விமர்சனம்

மங்காத்தாவிற்கு பிறகு அஜித்தின் சிறந்த படம் என்று கூறலாம்.ஆனால் கௌதம் மேனனுக்கு? விமர்சனத்தைப் பார்க்கலாம்.
                     


உடல் உறுப்புகளுக்காக மனிதர்களை கடத்தும் அருண் விஜய் மற்றும் அவர்களது கூட்டாளிகளை அஜித் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மைய கரு. ஆனால் இதனை சுற்றி பல கிளைக்கதைகள் உண்டு. அந்த கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் கௌதம் மேனனின் பழைய படங்கள், சத்திரியன், அஞ்சாதே உள்ளிட்ட ஒவ்வொரு படங்களில் இருந்தும் உருவப்பட்ட நல்ல நல்ல காட்சிகள். ஆனால் இவை எல்லாம் நாம் யோசிக்கும் முன்பே படம் முடிந்து விடுகிறது. அந்த வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றி பெரும் என்பதில் ஐயம் இல்லை.

அஜித் படம் நெடுக வருகிறார்.எந்த கெட் அப்பில் வந்தாலும் ஆண்களே பொறாமைப்படும் அளவிற்கு மிக அழகு. அலட்டாத நடிப்பு என்று கௌதம் மேனனின் பழைய திரைக்கதைக்கு புது பொலிவு தருகிறார். அனுஷ்கா, இவரைவிட தலைக்கு அழகான பெண் ஜோடியாக கிடைப்பாரா? என்று தெரியவில்லை. இந்த படத்தில் இணைந்ததே மிக தாமதம் என்று நான் கருதுகிறேன். இரண்டு பேரும் காட்சிகளில் தோன்றும் பொழுது கொள்ளை அழகு. மற்ற எதை பற்றியும் யோசிக்கத் தோன்றவில்லை. அருண் விஜய், அட்டகாசம். அவரது தலை முடியும், உடல் கட்டமைப்பும், நடிப்பும், அட்ராசக்க. இவர் இந்த படத்தில்தான் நன்றாக நடித்தார் என்று கூறினால் நமக்கு மனசாட்சியே இல்லை. இனிமேலாவது இவருக்கு நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்த படத்தில் இவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.

திரிஷா ஏன் இப்பொழுது கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார் என்பது அவரது முதிர்ச்சியை படத்தில் பார்க்கும் பொழுதே தெரிகிறது. சுமன் திரையில் தோன்றியதும் பக்கத்தில் அமர்ந்து இருந்த நபர் அலறி விட்டார். ஏகன் படம் ஞாபகத்திற்கு வந்து இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. நல்ல வேலையாக அவருக்கு ஒரு ஊறுகாய் பாத்திரம்தான்.

படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக நன்றாக இருந்தது. யார் இசை போட்டது என்று கூடிய விரைவில் நமது இளைஞர்கள் கண்டுபிடித்து கூறி விடுவார்கள்.


படத்தின் திரைக்கதை பழைய கதையாக இருந்தாலும், படத்தில் குழப்பங்கள் இருந்தாலும், லாஜிக் பள்ளத்தாக்கு இருந்தாலும், மூன்று மணி நேரம் நம்மை உட்கார வைத்ததில் கௌதம் மேனன் வெற்றி பெறுகிறார். அருண் விஜய்க்கு காசி தியேட்டரில் கிடைத்த அந்த வரவேற்ப்பும், அவரது ஆனந்த கண்ணீரும் போதும், இந்த படம் மாபெரும் வெற்றிபெறும் என்று கூறுவதற்கு.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...