Wednesday, February 18, 2015

அனேகன் – திரை விமர்சனம்



இயக்குனர் கே.வி.ஆனந்தை குட்டி ஷங்கர் என்று கூறலாம். அவர் இயக்கிய கனா கண்டேன் படத்தை தவிர அனைத்து படங்களிலும் அத்தனை பிரமாண்டம்.அவருடைய படங்கள் எல்லாம் ஒரு ஜனரஞ்சகமான திரில்லராக இருக்கும். இந்த படம் எந்த வகையை சேர்ந்தது பார்க்கலாம் வாருங்கள்.

                      

மூன்று ஜென்மத்தில் சேர முடியாத தனுஷ் மற்றும் அமிரா இந்த ஜென்மத்தில் சேர்ந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் மையக் கதை. அதனை தனக்கே உரிய பாணியில் ஒரு திரில்லர் படமாக எடுத்து கலக்கி இருக்கிறார் கே.வி.ஆனந்த். அவருக்கு உறுதுணையாக இருந்து ரவுண்டு கட்டி அடித்து இருக்கிறார் தனுஷ். அப்பா! இந்த வயதிலேயே இந்த நடிப்பு என்றால், பிற்காலத்தில் இந்திய திரையுலகை இவர் ஒரு கலக்கு கலக்குவார் என்பதில் சிறு ஐயம் கூட தேவையில்லை. 

கதாநாயகி அமிராவின் நடிப்பு அவர் முதல் படம் என்று யார் கூறினாலும் நம்ப முடியாத அளவிற்கு மிக அற்புதமாக இருந்தது. நண்டு ஜெகன் நம்மை ஒரு இடத்தில் கூட சிரிக்க வைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்து இருக்கிறார். ஆனால் தனுஷை பர்மாவில் காப்பாற்றும் அந்த ஒரு காட்சியில் நெகிழ வைக்கிறார்.கார்த்திக் சீக்கிரம் கட்சி அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு விட்டு இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து தன் பெயரை காப்பாற்றி கொள்ளலாம். ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து.

தேவாவைப்போல், ஹாரிஸ் ஜெயராஜும் கானா பாடல்களுக்கு மட்டும் சிறப்பாக இசை அமைக்கிறார். அவருடைய சமீபத்திய பாடல்களான டங்கா மாறி ஊதாரி, அதாரு அதாரு, ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே உள்ளிட்ட அனைத்து கானா படால்களும் அற்புதம். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம். மற்றபடி தமிழ் சினிமாவில் தவற விடக் கூடாத ஒரு திரைப்படம்.

Wednesday, February 11, 2015

BAD BOYZ – நிறுவனர் அருள்செல்வனின் பேட்டி





கேள்வி: உங்களுக்கு வெட்கமே இல்லையா? உங்கள நீங்களே பேட்டி எடுக்குறீங்க?

பதில்: இல்லை தான். ஒன்பது படம் எடுத்தாச்சு. பத்தாவது படமும் எடுத்து முடிச்சாச்சு. எவனாவது பேட்டி எடுப்பான்னு பார்க்குறேன். ஒருத்தனும் எடுக்கற மாதிரி தெரியல. அதான் கலைஞர் மாதிரி ஒரு கேள்வி பதில் அறிக்கை ரிலீஸ் பண்ணி இருக்கோம்.

                       



கேள்வி: நீங்க குறும்படம் எடுக்கறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க. 

பதில்: எல்லார்கிட்டயும் கடன் வாங்கிட்டு இருந்தேன்.

கேள்வி: இப்போ?

பதில்: இப்போவும் அதான் பண்ணிட்டு இருக்கேன்.

கேள்வி: உங்க படத்துல நடிக்கிறவங்களுக்கு எல்லாம் சம்பளம் தருவீங்களா?

பதில்: எங்க படத்துல யாரு சார் நடிக்குறா? ஏதோ கேமராவுக்கு போஸ் கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு போறாங்க! வெறும் சாப்பாடு மட்டும்தான். அதுவும் அடுத்த படத்துல இருந்து அவங்களே பார்த்துகிட்டா நல்லா இருக்கும்.

கேள்வி: சுபாஷ் நிறைய படங்கள ஹீரோவா நடிக்க என்ன காரணம்?

பதில்: அவன விட காமெடி மூஞ்சு எதுவும் கிடைக்கல! வேற யாராவது இருந்தா சொல்லுங்க!

கேள்வி: உங்க படத்துக்கு budget எவ்வளவு? நீங்க பாட்டுக்கும் ஜிம், ரைஸ் மில்லுன்னு எடுத்து தள்ளுரிங்க

பதில்: எங்க படத்தோட budget இரண்டு ஆயிரம், மூவாயிரம் தாண்டினது இல்லை. ரைஸ் மில், ஜிம்,அலுவலகம் எல்லாம் என் நண்பர்கள் இரத்தின குமார், லோகநாதன், பிரசாத் உள்ளிட்ட பலர் எனக்கு இலவசமா கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் என் மனபூர்வமான நன்றிய தெருவிச்சுகிறேன். அதே மாதிரி படம் எடுக்கிறதுக்கு எல்லாம் ரொம்ப செலவு ஆகாதுங்க! ஒரு குறிப்பட்ட பேர் சினிமா துறையில அவங்க மட்டுமே இருக்கணும்னு மத்தவங்கள வளர விட மாட்றாங்க! சினிமா படம் எடுக்க நல்ல ரசனையும், கற்றுக்கொள்கிற ஆர்வமும் இருந்தா போதும்.

கேள்வி: படத்துல நடிக்கிறவங்க எல்லாம் BAD BOYZ அப்படின்னு சொல்றிங்க! யார் இல்லனா உங்களால படம் எடுக்க முடியாது

பதில்: கிருஷ்ணா! அவர மாதிரி ஒரு மனிஷன நீங்க பார்க்கவே முடியாது. உதவி செய்யறதுல மன்னன். எங்கள் அண்ணன். எந்த ரோல் கொடுத்தாலும் 5 நிமிசத்துல மாறிடுவாரு! சில சமயம் வசனம் எல்லாம் சொல்லுவாரு பாருங்க! அது பயங்கர ஹிட் ஆகும் (உதாரணம்: “ஒரு ரூபா அரிசியா சார்” படம்: மாமா டௌசெர் கழன்டுச்சு).அவருக்கு நாங்க ரொம்ப கடமைப்பட்டு இருக்கோம்.

கேள்வி: உங்க படத்துல ஏன் பொண்ணுங்க அவ்வளவா நடிக்கவே மாட்றாங்க?

பதில்: பொண்ணுங்க நெறைய பேர் dating னா கூட ஓகே சொல்றாங்க! ஆனா shooting னா சொல்ல மாட்றாங்க! நிஜமா எங்க கிட்ட நிறைய லேடீஸ் subject இருக்கு. ஆனா நடிக்க பொண்ணுங்க இல்லை. இந்த பேட்டி மூலமா நான் கேட்டுகறது தயவு செஞ்சு எங்க படத்துல நடிச்சு help பண்ணுங்க. உங்க எல்லாரையும் எங்க சகோதரி மாதிரி நடத்துவோம். இது வரை எங்கள் படத்தில் எந்த பிரதிபலனும் பாராமல் நடித்த அபிராமி, கிருஷ்ணவேணி மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூன்று பேருக்கும் எங்கள் ஆத்மார்த்த நன்றிகள்.

கேள்வி: உங்க படத்த பார்த்து யாராவது செருப்பால அடிச்ச சம்பவம் இருக்கா?

பதில்: ஆமாம் ! இன்னைக்கு நல்லா மழை பெய்யுற மாதிரிதான் இருக்கு! அடுத்த கேள்வி

கேள்வி: உங்களுடைய அதிகபட்ச ஆசை என்ன?

பதில்: நாளைய இயக்குனர் ஷோ-ல கலந்துக்கனும். யாராவது இருந்தா உதவி செய்யுங்க!

கேள்வி: நீங்க எடுத்ததுல உங்களுக்கு பிடிச்ச மற்றும் பிடிக்காத படம்?

பதில்: பிடிச்ச படம்: H2S04. பிடிக்காத படம்: MR.PREGNANT. இன்னும் கொஞ்சம் சிரிப்பா எடுத்து இருக்கலாம்னு தோணுது

கேள்வி:சொம்பு இரண்டாம் பாகம் வராதான்னு ரசிகர்கள் கேட்குறாங்களே?

பதில்: கண்டிப்பா வரும். FEATURE FILM –ஆ வரும்.

கேள்வி:நீங்க என் ROMANCE படம் எல்லாம் எடுக்க மாட்றீங்க?

பதில்: ஏன்யா எங்க FACE CUT பார்த்தாலே தெரியலையா நாங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டோம்னு சொல்லிட்டு!

கேள்வி: கடைசி கேள்வி! வெளி வர இருக்குற உங்க “சங்கி மங்கி” திரைபடத்த பத்தி சொல்லுங்க

பதில்: முதல் முறையா நாங்க ஒரு பேய் படம் எடுத்து இருக்குறோம். இது ஒரு நகைச்சுவை கலந்த, சமுதாய அக்கறை உள்ள பேய் படம். இந்த படம் முழுவதும் நாங்க 5D ல தான் எடுத்து இருக்கோம். இந்த படத்துல ஒரு CHINESE தான் பேய். இதுக்கு மேல படம் மார்ச்சுல ரிலீஸ் ஆகும். பார்த்து தெரிஞ்சுக்குங்க! நன்றி!


Thursday, February 5, 2015

என்னை அறிந்தால் – திரை விமர்சனம்

மங்காத்தாவிற்கு பிறகு அஜித்தின் சிறந்த படம் என்று கூறலாம்.ஆனால் கௌதம் மேனனுக்கு? விமர்சனத்தைப் பார்க்கலாம்.
                     


உடல் உறுப்புகளுக்காக மனிதர்களை கடத்தும் அருண் விஜய் மற்றும் அவர்களது கூட்டாளிகளை அஜித் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மைய கரு. ஆனால் இதனை சுற்றி பல கிளைக்கதைகள் உண்டு. அந்த கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் கௌதம் மேனனின் பழைய படங்கள், சத்திரியன், அஞ்சாதே உள்ளிட்ட ஒவ்வொரு படங்களில் இருந்தும் உருவப்பட்ட நல்ல நல்ல காட்சிகள். ஆனால் இவை எல்லாம் நாம் யோசிக்கும் முன்பே படம் முடிந்து விடுகிறது. அந்த வகையில் இந்த படம் மிக பெரிய வெற்றி பெரும் என்பதில் ஐயம் இல்லை.

அஜித் படம் நெடுக வருகிறார்.எந்த கெட் அப்பில் வந்தாலும் ஆண்களே பொறாமைப்படும் அளவிற்கு மிக அழகு. அலட்டாத நடிப்பு என்று கௌதம் மேனனின் பழைய திரைக்கதைக்கு புது பொலிவு தருகிறார். அனுஷ்கா, இவரைவிட தலைக்கு அழகான பெண் ஜோடியாக கிடைப்பாரா? என்று தெரியவில்லை. இந்த படத்தில் இணைந்ததே மிக தாமதம் என்று நான் கருதுகிறேன். இரண்டு பேரும் காட்சிகளில் தோன்றும் பொழுது கொள்ளை அழகு. மற்ற எதை பற்றியும் யோசிக்கத் தோன்றவில்லை. அருண் விஜய், அட்டகாசம். அவரது தலை முடியும், உடல் கட்டமைப்பும், நடிப்பும், அட்ராசக்க. இவர் இந்த படத்தில்தான் நன்றாக நடித்தார் என்று கூறினால் நமக்கு மனசாட்சியே இல்லை. இனிமேலாவது இவருக்கு நல்ல காலம் பிறக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்த படத்தில் இவருக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.

திரிஷா ஏன் இப்பொழுது கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார் என்பது அவரது முதிர்ச்சியை படத்தில் பார்க்கும் பொழுதே தெரிகிறது. சுமன் திரையில் தோன்றியதும் பக்கத்தில் அமர்ந்து இருந்த நபர் அலறி விட்டார். ஏகன் படம் ஞாபகத்திற்கு வந்து இருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. நல்ல வேலையாக அவருக்கு ஒரு ஊறுகாய் பாத்திரம்தான்.

படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக நன்றாக இருந்தது. யார் இசை போட்டது என்று கூடிய விரைவில் நமது இளைஞர்கள் கண்டுபிடித்து கூறி விடுவார்கள்.


படத்தின் திரைக்கதை பழைய கதையாக இருந்தாலும், படத்தில் குழப்பங்கள் இருந்தாலும், லாஜிக் பள்ளத்தாக்கு இருந்தாலும், மூன்று மணி நேரம் நம்மை உட்கார வைத்ததில் கௌதம் மேனன் வெற்றி பெறுகிறார். அருண் விஜய்க்கு காசி தியேட்டரில் கிடைத்த அந்த வரவேற்ப்பும், அவரது ஆனந்த கண்ணீரும் போதும், இந்த படம் மாபெரும் வெற்றிபெறும் என்று கூறுவதற்கு.

Sunday, February 1, 2015

இசை – திரை விமர்சனம்




எஸ்.ஜே.சூர்யா இயக்கும் படத்தை முதல் நாள் பார்ப்பது என் வழக்கம். அது படம் நன்றாக இருப்பதற்காக அல்ல, நியூ படத்தில் கடைசி வரை கிரண் ஆடும் அந்த பாடலைப் பார்க்காமல் விட்ட அனுபவம் கற்றுத் தந்த பாடம். இன்று காலை படத்தில் இருந்து எட்டு நிமிடங்கள் நீட்கப்பட்டு விட்டதாக என் நண்பன் கூறியவுடன் தூக்கி வாரி போட்டது. எந்த காட்சிகளைத் தூக்கினார்களோ? என்று மனம் பதபதைத்தது. 

                 



இன்றும் படத்திற்கு செல்லவில்லை என்றால் பல காட்சிகள் தூக்கப்படும் அபாயம் இருப்பதால் படத்திற்கு சென்றேன். ஆனால் என் மனைவியும் கூட கூப்பிட்டு சென்றது எவ்வளவு பெரிய தப்பு என்பது படம் பார்த்தக்கொண்டு இருக்கும்போது தான் தெரிந்தது.படத்தின் முக்கியமான காட்சிகளுக்கு இல்ல(?) நெளிவதா? இல்லை ரசிப்பதா என்று தெரியாமல் ரெண்டும்கெட்டான் நிலையில் முகத்தை வைத்துக்கொண்டேன். இந்த விமர்சனம் முடிந்த பிறகும் இந்த படத்தை பார்க்க யாருக்காவது ஆவல் இருந்தால் தயவு செய்து குடும்பத்துடன் செல்ல வேண்டாம். அதன் பிறகு நடக்கும் பிரச்சனைகளை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும்.

கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். தன்னுடைய சிஷ்யன் எஸ்.ஜே.சூர்யா வளர்ந்தது பிடிக்காமல் இசையமைப்பாளர் சத்தியராஜ் செய்யும் வில்லத்தனங்கள்தான் படம்.படத்தின் முதல் பாதி முழுவதுமே எங்கே மலையாள பிட்டு படத்திற்கு வந்து விட்டோமோ? என்று எண்ண வைத்துவிட்டது. இரண்டாம் பாதி முழுவதும் சூர்யாவை பைத்தியம் ஆக்குகிறேன் என்று சத்தியராஜ் செய்யும் அனைத்து செயல்களும் திரையரங்கில் உள்ள நம் அனைவரையும் மிகவும் சோதிக்கிறது. சோதிக்கிறது என்பதை விட தநமக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது என்றே கூறலாம்.

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு நன்றாக இருந்தது என்று கூறினால், இந்த விமர்சனத்தின் நம்பகத்தன்மை மீது உங்களுக்கு சந்தேகம் வரலாம். அதனால் சந்தேகமே இல்லாமல் அவர் நடிப்பு மிக மோசம். அவர் நடிப்பு என்று செய்கிற அனைத்துமே திரையரங்கில் நல்ல சிரிப்பை வரவழைத்தது. சத்யராஜ் எப்பொழுதுதான் “ என் காரக்டரே புரிஞ்சுக்க மாட்ரிங்களே? “ என்கின்ற ஸ்டைலில் இருந்து மாறுவார் என்று தெரியவில்லை. படத்தில் நடித்த மற்றவர்களுக்கு சுத்தமாக வேலை இல்லை.

இசை எஸ்.ஜே.சுர்யாவாம். அவன் அவனுக்கு தெரிஞ்ச வேலைய பண்ணுங்கபா? என்று தலைவர் கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. இசை என்பது எங்கிருந்து வருகிறது? என்று எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டால் பெண்களின் உடம்பில் இருந்து வருகிறது என்று கூறுவார் போல. அந்த அளவில்தான் இந்த படத்தில் கதாநாயகியை பயன்படுத்தி உள்ளார். மற்றபடி உங்களுக்கு மறுநாள் ஆபீஸ் அல்லது ஸ்கூல் லீவு போடவேண்டுமானால் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...