Tuesday, January 27, 2015

சாலையோர இந்தியர்கள்

ஆறு மாதங்கள் இருக்கும். போரூரில் இருந்து அம்பத்தூர் செல்லும் பைபாஸ் சாலையில் என்னுடைய பைக் பழுதானதால், வாகனத்தில் யாராவது லிப்ட் தருவார்களா? என்று ஒரு மணி நேரம் முயற்சி செய்து பார்த்தேன். யாரும் தருவது போல் இல்லை. அந்த வெயில் வேலையில் நொறுங்கி போனேன்.நியாயமாக பார்த்தால் நான் இனிமேல் வாழ்க்கையில் யாருக்கும் லிப்ட் தரக்கூடாது என்று முடிவு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நான் வித்தியாசமாக இனிமேல் பைக்கில் செல்லும்பொழுது யார் லிப்ட் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

                                                         முதல் ஒரு மாதம், லிப்ட் கேட்பவர்கள் யாராவது தென்பட்டால் வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். குறிப்பாக பைபாஸ் சாலையில் யாராவது இருந்தால் அவர்களை ஏற்றாமல் சென்றதே இல்லை. அவர்கள் கூறும் நன்றி என்கின்ற ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது. நான் பைக்கில் செல்லும்போது யாராவது லிப்ட் கேட்கவில்லை என்றால் அந்த நாளில் சிறிது கவலையாக இருக்கும்.

அதனால் இரண்டாவது மாதத்தில் இருந்து, நான் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்குமேல் வண்டியை செலுத்தவில்லை.அதற்குமேல் வேகத்தில் போகும் அளவிற்கு நிச்சயமாக பெரிய காரியம் எனக்கு எதுவும் இல்லை. ஏன்? உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் தவிர வேறு யாருக்காவது அவ்வளவு வேகத்தில் செல்ல காரணம் இருக்குமா? என்று தெரியவில்லை. குறிப்பாக பேருந்து நிலைய ஓரத்தில் எல்லாம் மிக மெதுவாக செல்வேன். வண்டி வாங்க முடியாமல் பேருந்தில் செல்லும் இளைஞர்கள், பேருந்து கூட்டத்தில் செல்ல முடியாமலும், காசு கொடுத்து ஷேர் ஆட்டோவில் போக முடியாமலும் தவிக்கும் மக்கள் யாராவது நம்மிடம் லிப்ட் கேட்க மாட்டார்களா? என்று நினைப்பேன். நான் பைக்கில் செல்லும்பொழுது எல்லாம் யாராவது இரண்டு பேருக்காவது தினமும் லிப்ட் கொடுப்பேன்.

சில பேர் நன்றி கூறுவார்கள், சில பேர் நான் எந்த பக்கம் போகிறோம் என்று கூட கேட்காமல் ஏறி கொள்வார்கள்,சில பேர் மது வாங்கிக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்கு செல்வதற்காக லிப்ட் கேட்பார்கள். இதற்கு எல்லாம் மேலாக ஒருவர் என்னிடம் கிறித்தவ மத போதனையும் செய்தார். நான் எதைப் பற்றியும் கண்டு கொள்வது இல்லை.ஏனென்றால் மிகவும் சிரம படாமல், என்னிடம் இருந்த எதையும் இழக்காமல் நான் தினமும் குறைந்தபட்சம் இருவருக்கு உதவி செய்வது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.நான் என்னை பெரிய கொடை வள்ளலாக நினைத்து கொள்வேன்.

இவன் என்னடா? செய்த காரியத்தை சொல்லிக் காட்டுகிறானே! என்று நீங்கள் என்னலாம். இடது கைக்கு தருவது வலது கையுக்குத் தெரிய கூடாது என்று நீங்கள் கூறலாம்.என்னை பொறுத்தவரை நாம் உதவி செய்வதை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறினால் நம் நண்பர்களில் இரண்டு பேராவது அந்த உதவியை செய்ய மாட்டார்களா? என்று தான் எண்ணுவேன். அதேபோல் இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் இரண்டு பேராவது இதை பின்பற்றினால் எனக்கும் மகிழ்ச்சி! உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்!
நினைத்து பாருங்கள்! நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வண்டி வைத்து இருக்கும் நபரும், பேருந்து நிலையத்தில் உள்ள யாரையாவது தாங்கள் செல்லும் வழியில் இறக்கி விட்டால், பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் குறையும்.ஒரு சுமுகமான சமூக சூழல் உருவாகும்.எல்லாவற்றையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்காமல் நாமும் சிலவற்றை தொடங்குவோம்.ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவோம்.
நேற்றே இந்த பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் பாட்டி இறந்துவிட்ட காரணத்தால் இன்று எழுதினேன். அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...