Tuesday, January 27, 2015

சாலையோர இந்தியர்கள்

ஆறு மாதங்கள் இருக்கும். போரூரில் இருந்து அம்பத்தூர் செல்லும் பைபாஸ் சாலையில் என்னுடைய பைக் பழுதானதால், வாகனத்தில் யாராவது லிப்ட் தருவார்களா? என்று ஒரு மணி நேரம் முயற்சி செய்து பார்த்தேன். யாரும் தருவது போல் இல்லை. அந்த வெயில் வேலையில் நொறுங்கி போனேன்.நியாயமாக பார்த்தால் நான் இனிமேல் வாழ்க்கையில் யாருக்கும் லிப்ட் தரக்கூடாது என்று முடிவு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நான் வித்தியாசமாக இனிமேல் பைக்கில் செல்லும்பொழுது யார் லிப்ட் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

                                                         முதல் ஒரு மாதம், லிப்ட் கேட்பவர்கள் யாராவது தென்பட்டால் வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொண்டேன். குறிப்பாக பைபாஸ் சாலையில் யாராவது இருந்தால் அவர்களை ஏற்றாமல் சென்றதே இல்லை. அவர்கள் கூறும் நன்றி என்கின்ற ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது. நான் பைக்கில் செல்லும்போது யாராவது லிப்ட் கேட்கவில்லை என்றால் அந்த நாளில் சிறிது கவலையாக இருக்கும்.

அதனால் இரண்டாவது மாதத்தில் இருந்து, நான் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்குமேல் வண்டியை செலுத்தவில்லை.அதற்குமேல் வேகத்தில் போகும் அளவிற்கு நிச்சயமாக பெரிய காரியம் எனக்கு எதுவும் இல்லை. ஏன்? உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் தவிர வேறு யாருக்காவது அவ்வளவு வேகத்தில் செல்ல காரணம் இருக்குமா? என்று தெரியவில்லை. குறிப்பாக பேருந்து நிலைய ஓரத்தில் எல்லாம் மிக மெதுவாக செல்வேன். வண்டி வாங்க முடியாமல் பேருந்தில் செல்லும் இளைஞர்கள், பேருந்து கூட்டத்தில் செல்ல முடியாமலும், காசு கொடுத்து ஷேர் ஆட்டோவில் போக முடியாமலும் தவிக்கும் மக்கள் யாராவது நம்மிடம் லிப்ட் கேட்க மாட்டார்களா? என்று நினைப்பேன். நான் பைக்கில் செல்லும்பொழுது எல்லாம் யாராவது இரண்டு பேருக்காவது தினமும் லிப்ட் கொடுப்பேன்.

சில பேர் நன்றி கூறுவார்கள், சில பேர் நான் எந்த பக்கம் போகிறோம் என்று கூட கேட்காமல் ஏறி கொள்வார்கள்,சில பேர் மது வாங்கிக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்கு செல்வதற்காக லிப்ட் கேட்பார்கள். இதற்கு எல்லாம் மேலாக ஒருவர் என்னிடம் கிறித்தவ மத போதனையும் செய்தார். நான் எதைப் பற்றியும் கண்டு கொள்வது இல்லை.ஏனென்றால் மிகவும் சிரம படாமல், என்னிடம் இருந்த எதையும் இழக்காமல் நான் தினமும் குறைந்தபட்சம் இருவருக்கு உதவி செய்வது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.நான் என்னை பெரிய கொடை வள்ளலாக நினைத்து கொள்வேன்.

இவன் என்னடா? செய்த காரியத்தை சொல்லிக் காட்டுகிறானே! என்று நீங்கள் என்னலாம். இடது கைக்கு தருவது வலது கையுக்குத் தெரிய கூடாது என்று நீங்கள் கூறலாம்.என்னை பொறுத்தவரை நாம் உதவி செய்வதை வெளிப்படையாக மற்றவர்களிடம் கூறினால் நம் நண்பர்களில் இரண்டு பேராவது அந்த உதவியை செய்ய மாட்டார்களா? என்று தான் எண்ணுவேன். அதேபோல் இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் இரண்டு பேராவது இதை பின்பற்றினால் எனக்கும் மகிழ்ச்சி! உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்!
நினைத்து பாருங்கள்! நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வண்டி வைத்து இருக்கும் நபரும், பேருந்து நிலையத்தில் உள்ள யாரையாவது தாங்கள் செல்லும் வழியில் இறக்கி விட்டால், பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் குறையும்.ஒரு சுமுகமான சமூக சூழல் உருவாகும்.எல்லாவற்றையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்காமல் நாமும் சிலவற்றை தொடங்குவோம்.ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவோம்.
நேற்றே இந்த பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் பாட்டி இறந்துவிட்ட காரணத்தால் இன்று எழுதினேன். அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!

Sunday, January 18, 2015

சர்க்கார் புகுந்த வீடு - தவறவிடக் கூடாத நகைச்சுவை புத்தகம்பொதுவாக சோ.ராமசாமி அவர்கள் மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதற்கு காரணம் நான் நாத்திகனாக இருப்பது கூட இருக்கலாம்.மேதாவி தனமாக பேசுகிறாரோ என்று பல சமயம் எண்ணியதுண்டு.நம் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத அனைவரையும் கெட்டவர்களாக நினைப்பது மனித இயல்பு தானே?

                              கடந்த புத்தக கண்காட்சியில், இந்த புத்தகத்தின் பெயர் என்னை இழுத்தது. முதல் இரண்டு பக்கங்கள் எடுத்து படித்துப் பார்த்தேன். சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. கண்டிப்பாக நன்றாக இருக்கும் என்று எண்ணி இந்த புத்தகத்தை வாங்கினேன். நான் நினைத்தது வீண் போகவில்லை.

புத்தகத்தின் சில சிறப்பு அம்சங்கள்:

1) இந்த புத்தகம் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. எம்.ஜி.ஆர். மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது முதல்வன் பட பாணியில் ஒரு குடும்பஸ்தன் எழுந்து, உங்களுடைய ஆட்சியில் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது. எங்களால் குடும்பமே நடத்த முடியவில்லை. வேண்டுமென்றால் என் குடும்பத்தை நீங்கள் எடுத்து நடத்தி பாருங்கள் என்று சவால் விடுகிறார். அந்த சவாலை எம்.ஜி.ஆர் ஏற்கிறார். இதுதான் நான் படித்த அந்த முதல் இரண்டு பக்கங்கள். அப்பொழுது தொடங்கும் சிரிப்பு சரவெடி, புத்தகம் முடியும் வரை முடியவில்லை.

2) அந்த குடும்பத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி நடத்தும் போராட்டங்கள் இன்னும் கேலிக்குரியவை.

3) கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவரும் பிரதமராகிய இந்திரா காந்திக்கு அடிக்கும் சொம்புககளைப் படித்து என் வயுறு புண்ணாகிவிட்டது.

4) எம்.ஜி.ஆரின் அமைச்சரவைக் கூட்டத்தில் ரஜினியின் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும் பகுதி இன்னும் அதகளம்.

இந்த புத்தகத்திற்கு அப்பொழுது எதுவும் எதிர்ப்பு வரவில்லையா? என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் கலாய்த்து ஒரு நகைச்சுவை கதையை திறம்பட எழுதி உள்ளார்.நீங்களும் படித்து பார்த்து இன்புறுங்கள்.

Thursday, January 15, 2015

சச்சின் டெண்டுல்கர் - சுய சரிதை
சச்சின் டெண்டுல்கர் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது மின்சாரம் துண்டிக்கபட்டால், கோபத்தில் அதே நொடியில் உங்கள் பகுதியில் உள்ள மின் ஊழியரின் அம்மாவின் தொழிலை மாற்றுபவரா நீங்கள்? சிறு வயதில் வறுமை வாட்டி வதைத்தாலும் டெண்டுல்கர் ஆடும் போது உலகத்தையே மறந்து மகிழ்ச்சியாக இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது.
சமீபத்தில்தான் டெண்டுல்கரின் சுயசரிதையை படித்து முடித்தேன். சிறு வயதில் இருந்து டெண்டுல்கரை கவனித்து வருவதால், அந்த புத்தகத்தில் வரும் என்பது சதவீத சம்பவங்கள் எனக்கு முன்பே தெரிந்ததுதான்.அந்த புத்தகத்தில் வரும் சில சுவாரசியமான சம்பவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

1) டெண்டுல்கரின் முதல் சர்வேதேச கேப்டன் யார் தெரியுமா? கேள்விக்கான பதில் மிகவும் ஆச்சிரியமா ஒன்று. பாகிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் இம்ரான் கான்தான் டெண்டுல்கரின் முதல் சர்வேதேச கேப்டன். டெண்டுல்கர் 15 வயதாக இருக்கும்போது (அப்பொழுது அவர் மும்பை அணிக்காக விளையாடிக்கொண்டு இருக்கிறார்), இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் அணியில் substitute தேவைப்பட்ட போது டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினர். அது இம்ரான் கானிற்கு நினைவு இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை என்று சச்சின் குறிப்பிட்டு இருந்தார்.

2) டெண்டுல்கரின் முதல் ரூம் மேட் ராமன் லம்பா.அவர் 1998 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் விளையாடும் போது, பந்து தாக்கி மரணம் அடைந்தார்.

3) நெல்சன் மண்டேலா இதுவரை டெண்டுல்கர் விளையாடுவதை இரண்டு முறை பார்த்து இருக்கிறார். இரண்டு முறையும் டெண்டுல்கர் சதம் விளாசி உள்ளார்.

4) டெண்டுல்கரைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் நாசீர் ஹுசைன்தான் சிறந்த கேப்டன்.

5) டெண்டுல்கரின் அப்பா இறந்ததற்கு காரணம் அங்கியோபிளாஸ்டி என்கின்ற வியாதி. அந்த வியாதி வந்தவர்கள் தினமும் மது அருந்த வேண்டும். இதனால் தன தந்தையுடன் சாயங்கால நேரங்களில் மது அருந்தியுள்ளார் டெண்டுல்கர். மது மற்றும் சிகரட் விளம்பரங்களில் நடிக்க மறுத்த டெண்டுல்கர், அவர் அப்பாவிடம் தான் தினமும் சேர்ந்து மது அருந்தியது தான் கனவிலும் நினைக்காத ஒன்று என்று கூறியுள்ளார்.

6) 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாட இந்தியா சென்று இருந்தபோது, நவ்ஜோத் சிங் சித்து ட்ரெயினில் ஒருவரிடம் தகராறு செய்து உள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், சித்துவை துப்பாக்கியால் சுட வந்து உள்ளார். அப்பொழுது உடன் இருந்த சௌரவ் கங்குலி அந்த நபரின் காலில் விழுந்து, அழுது சித்துவை காப்பாற்றி உள்ளார்.

7) டெண்டுல்கர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி, கபில்தேவின் நூறாவது டெஸ்ட் போட்டி.

8) நாட்வெஸ்ட் சீரீஸ் இறுதிப் போட்டியில், இந்தியா 146/5 என்று தத்தளித்து கொண்டு இருந்தபோது, வெற்றி பெற்று விடுவோம் என்கின்ற நினைப்பில் இங்கிலாந்து அணியினர் champagne ஆர்டர் செய்து வைத்து இருந்தனர். அனால் யுவராஜ் சிங்க் மற்றும் கைபின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியினர் ஆர்டர் செய்து இருந்த அனைத்து champagne பாட்டிலும் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைப்போல் பல இடங்களில், பல சுவராசியமான தகவல்களைக் கூறியுள்ளார். குறிப்பாக சௌரவ் கங்குலி பற்றி பல இடங்களில் கூறியுள்ளார். கங்குலி தனக்கு 13 வயதில் இருந்தே நண்பன் என்று தெரிவித்து உள்ளார். டெண்டுல்கர் கங்குலி இடையேயான சுவராசியமானத் தகவல்களை வேறு ஒரு பதிவில் கூறுகிறேன்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...