Sunday, December 14, 2014

லிங்கா ஒரு ரசிகனின் குமுறல்
 

லிங்கா படம் நன்றாக இல்லை என்று பதிவிட்டது தான் தாமதம், நான் ரசிகன் என்னும் போர்வையில் வாழும் துரோகி என்று என்னை வசைப்பாடியவர்கள் மிக அதிகம். நான் ரஜினியின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பது, எனது வலைப்பூவை(www.arulselvan.com) பின்தொடருபவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். ஒரு படத்தைப் பற்றி குறை கூறுவதால், அவர்கள் ரஜினியைப் பற்றி குறை கூறுவதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்படிதான் பல ரசிகர்கள் தற்பொழுது செய்து கொண்டு இருக்கிறார்கள். படத்தைப் பற்றி குறை கூறியவர்களை வசை பாடும் செயலை ரசிகர்கள் பலர் செய்து வருகின்றனர்.

அது அவர்கள் குற்றம் அல்ல. நாம் வாழும் இந்திய சமூகம் அப்படிப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கான வாக்கு வங்கி அப்படியே இருப்பது அதனால்தான். தலைவர்கள் எதை செய்தாலும் அதை கண்மூடி தனமாக ஆதரிப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பதும்தான் நமது சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். விஜய், அஜித் போன்றவர்கள் இன்றுவரை ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடிக்காமால் இருப்பதற்கும் அதுதான் காரணம். அவர்களை சுற்றி இருப்பவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை அவர்களை சென்றடையாமல் செய்து விடுகின்றனர். 

ஆனால் ரஜினி அப்படிப்பட்டவர் அல்ல. பாபா,குசேலன் போன்ற திரைப்படங்கள் தோல்வி குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர். ஏன் சமீபத்தில் கோச்சைடையான் தோல்வி குறித்து கூட லிங்கா இசை வெளியீட்டு விழாவில் கூறினார். இன்னும் கொஞ்ச நாளில் அவரே கூட லிங்கா படத்தை நான் செய்து இருக்கக்கூடாது என்று கூறுவார். அப்பொழுது இந்த ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. உங்களை பொறுத்தவரை படம் நன்றாக இருந்தால், விமர்சனம் போடுங்கள். அனால் படம் நன்றாக இல்லை என்று கூறுபவர்களை வசைப்பாடாமல் இருங்கள் அதுபோதும். ஏனென்றால் அனைவருக்கும், அனைத்தும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சரி லிங்கா படத்திற்கு வருவோம். இது ஒரு ரஜினி படம் என்று ஒத்துக்கொள்ளவே என்னால் முடியவில்லை. ஒரு காட்சி கூட பிடித்த காட்சி என்று சொல்ல முடியாத அளவில் தான் இருக்கிறது படம். எப்பொழுதோ தமிழ் சினிமாவில் செத்துப்போன ஒரு பார்முலாவை வைத்து நம்மை எல்லாம் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர்.
இந்த படத்தில் ரஜினியை புகழ்ந்து ஒருவர் கவிதை பாடுவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சியும், அதற்கு ரஜினி கூறும் பதிலும் ஐந்து நிமிடங்கள் ஓடும். இந்த காட்சி பலமுறை நாம் வடிவேல் மற்றும் செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்ததுதான். இந்த ஒரு காட்சி போதும், கதை, திரைக்கதை இந்த படத்தில் எப்படி இருக்கும் என்று கூறுவதற்கு. ஒரு காட்சி கூட புதுமையான காட்சி கிடையாது.
அதேபோல் ரஜினியும், அனுஷ்காவும் சாவி திருடும் ஒரு காட்சி, ஆங்கில படத்தில் இருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட காட்சி. இப்படி வசனம், காட்சி என்று எதுவும் மனதில் ஒட்டாத ரஜினி படத்தை இதுவரை நான் பார்த்தது இல்லை.(குசேலன், பாபா உட்பட). அடுத்ததாக பாடல் மற்றும் இசை. பாடல்கள் வந்த புதிதில் நான் பாடல்கள் நன்றாக இல்லை என்று கூறி இருந்தேன். உடனே நான் மேலே கூறியது போல அவரது ரசிகர்கள், ரகுமான் பாடல்கள் கேட்க,கேட்கதான் பிடிக்கும். உனக்கு இசை ரசனை நன்றாக இல்லை என்று என்னை வசைப்பாட ஆரம்பித்துவிட்டார்கள். பாடல்கள் கூட பொருத்து கொள்ளலாம், ஆனால் படத்திற்கு அவர் போட்டிருக்கும் பின்னணி இசை படு மட்டம். 

ஏற்கனெவே ரஜினியை வைத்து காமெடி செய்து வரும் வட இந்தியர்களுக்கு தீனி போடும் விதமாக லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. இந்த காட்சியை வைத்து எப்படி எல்லாம் கிண்டல் செய்ய போகிறார்களோ என்ற எண்ணம் என் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படி பாண்டியன் படத்தோடு எஸ்.பி.முத்துராமன் படம் எடுப்பதை நிறுத்திக்கொண்டாரோ, அதேப்போல் கே.எஸ்.ரவிகுமாரும் நிறுத்திக்கொள்வது சால சிறந்தது.
ரஜினி கண்டிப்பாக அடுத்து ஒரு சிறந்த படம் கொடுப்பார் என்பதில் சிறிதும் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர் யானை அல்ல குதிரை. விழந்தவுடன் உடனே எழுவார்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...