Tuesday, December 30, 2014

சென்னையில் ஒரு மழை நாள்:

சென்னையில் நேற்று பெய்த மழையும், நிலவிய ரம்மியமான வானிலையும் எப்பொழுது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு செல்வோம் என்று எண்ணத் தோன்றியது.அதனால் விரைவாக வீடு செல்ல எண்ணி தரமணி தொடர்வண்டி நிலையத்திற்கு விரைந்தேன்.செல்லும் சாலை எங்கும் வழக்கம் போல் ஏதோ ஒரு அரசுத்துறை மரணக்குழிகளை தோண்டி வைத்து இருந்தனர்.
சாலை எங்கும் ஆறாக ஓடியது.சென்னையில் எப்பொழுது மழை பெய்தாலும் ஆறாக ஓடும் நீரைப்பார்க்கும் போது தஞ்சையை விட சென்னையில் விவசாயம் செய்தால் முப்போகம் விளையுமோ? என்ற எண்ணம் தோன்றியது, இந்த சாலையில் நடக்க கண்டிப்பாக நீளம் தாண்டுதல் பயிற்சியும், உயரம் தாண்டுதல் பயிற்சியும் வேண்டும்.

                                           


பைக்கில் சென்றவர்கள், காரில் சென்றவர்கள் அனைவரும் சாலையின் ஓரத்தில் நாய்கள் நடந்து செல்வதாக எண்ணி சேற்றை வாரி இறைத்து விரைவாக சென்றனர்.எல்லா மக்களுக்கும் அவசர வேலை உள்ள நாடு எப்படி வல்லரசாக மாறாமல் போனது என்று எண்ணினேன்.ஒரு வழியாக தொடர்வண்டி நிலையம் வந்து வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க ஆரம்பித்தேன். வழக்கம்போல் விஐபி கலாச்சாரத்தைமட்டும் எதிர்க்கும் பல மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்த்து நடுவில் புகுந்தும், பெண்களில் பலர் புதுமை பெண்கள்போல் காட்சி அளித்தாலும், தான் பெண் என்பதை காரணம் காட்டி சில ஆண்களிடம் பணத்தைக் கொடுத்து டிக்கெட்டை பெற முயற்சித்தனர். பெண்களுக்கு சேவை செய்வதையே தங்கள் குறிக்கோளாக கொண்ட பல ஆண்கள் பின்னால் நிற்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்காக டிக்கெட் எடுத்தனர்.

ரயிலுக்காக 30 நிமிடங்கள் காத்து இருந்தேன். பக்கத்தில் இருக்கும் ஒருவர் தன நண்பரிடம் தொலை பேசியில் பேசியதை வைத்து கோட்டுர்புரம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து இருக்கிறது என்று அறிந்து கொண்டேன். வெயில் காலத்திலே இந்த மாதிரி பிரச்சனையை விரைந்து வந்து செயல்பட்டு இரண்டு நாட்களில் சரி செய்யும் நம் ரயில்வே ஊழியர்கள் எப்படியும் இதனை மூன்று நாட்களில் சரி செய்து விடுவார்கள் என்று எண்ணி அங்கு இருந்து நடையைக் கட்டினேன்.

எனக்கு மிகவும் வேதனை அளித்த செய்தி என்னவென்றால், பேருந்து வேலை நிறுத்தத்தின் காரணமாக பலர் ரயில்களில் செல்வதற்காக காத்து இருந்தனர். அவர்களை சக மனிதர்களாக மதித்து ஒலி பெருக்கியில் செய்தி சொல்ல கூட ரயில்வை நிர்வாகம் தயாராக இல்லை. டிக்கெட் வாங்கும் இடத்திலும் ரயில்கள் வருவது சந்தேகம் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. என்னால் முடிந்த அளவு பலருக்கு தகவல் கொடுத்து, டிக்கெட் வாங்குபவர்களையும் தடுத்தேன்.

வெளியில் வந்து பேருந்து நிலையத்தில் நின்றால், எழுபத சதவீத பேருந்துகள் ஓடுவதாக செய்திகளில் தெரிவிக்கப்பட, ஒரு பேருந்து கூட சாலைகளில் இல்லை. யார் வந்து பேருந்துகளை கணக்கு எடுக்கப் போகிறார்கள் என்கின்ற நினைப்பில் போக்குவரத்துத்துறை அந்த செய்தியை வெளியிட்டு இருக்கலாம். இந்த கரடு, முரடான சாலையிலும்,இரும்பு கடைக்கு போட தயாராக இருக்கும் வண்டியையும் ஓட்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரலாம் என்றாலும், அவர்கள் பணியில் காட்டும் அலட்சியமும், பயணிகளை நடத்தும் விதமும் மக்களிடையே மிகுந்த அவப்பெயரை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஆதலால் இந்த பிரச்னையில் யார் அடித்துக்கொண்டு செத்தாலும் மக்களுக்கு கவலையில்லை, அவர்களுக்குத் தேவை பேருந்து ஓட வேண்டும் அவ்வளவுதான்.

அப்பொழுது ஒரு நடுத்தர இளைஞன் என்னிடம் வந்தான். ப்ரோ, இருந்த காசுல ட்ரைன் டிக்கெட் எடுத்துட்டேன், பஸ்சும் வரல, ஷேர் ஆட்டோல போகணும், ஒரு ஐம்பது ருபாய் இருக்குமா? என்று கேட்டார்.நான் இல்லை என்றேன். அப்பொழுது என்னிடம் இருந்ததும் ஐம்பது ரூபாய்தான். அவர் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நடையை கட்டினார். நானும் ஒரு சராசரி இந்தியன் என்று அவர் நினைத்து இருக்கலாம். அவரை மாதிரி பலர் கொட்டும் மழையில் நடந்து செல்வதை கண்டேன். அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

மழை என்பது வரமாக அமைய வேண்டிய நம் நாட்டில் அது ஒரு சாபமாக அமைந்து இருக்கிறது.

இப்படிக்கு,
அ.அருள்செல்வன்.

Sunday, December 14, 2014

லிங்கா ஒரு ரசிகனின் குமுறல்
 

லிங்கா படம் நன்றாக இல்லை என்று பதிவிட்டது தான் தாமதம், நான் ரசிகன் என்னும் போர்வையில் வாழும் துரோகி என்று என்னை வசைப்பாடியவர்கள் மிக அதிகம். நான் ரஜினியின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பது, எனது வலைப்பூவை(www.arulselvan.com) பின்தொடருபவர்களுக்கு நன்றாகவே தெரிந்து இருக்கும். ஒரு படத்தைப் பற்றி குறை கூறுவதால், அவர்கள் ரஜினியைப் பற்றி குறை கூறுவதாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இப்படிதான் பல ரசிகர்கள் தற்பொழுது செய்து கொண்டு இருக்கிறார்கள். படத்தைப் பற்றி குறை கூறியவர்களை வசை பாடும் செயலை ரசிகர்கள் பலர் செய்து வருகின்றனர்.

அது அவர்கள் குற்றம் அல்ல. நாம் வாழும் இந்திய சமூகம் அப்படிப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் எவ்வளவு குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கான வாக்கு வங்கி அப்படியே இருப்பது அதனால்தான். தலைவர்கள் எதை செய்தாலும் அதை கண்மூடி தனமாக ஆதரிப்பதும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருப்பதும்தான் நமது சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். விஜய், அஜித் போன்றவர்கள் இன்றுவரை ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நடிக்காமால் இருப்பதற்கும் அதுதான் காரணம். அவர்களை சுற்றி இருப்பவர்கள் எதிர்மறையான விமர்சனங்களை அவர்களை சென்றடையாமல் செய்து விடுகின்றனர். 

ஆனால் ரஜினி அப்படிப்பட்டவர் அல்ல. பாபா,குசேலன் போன்ற திரைப்படங்கள் தோல்வி குறித்து வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர். ஏன் சமீபத்தில் கோச்சைடையான் தோல்வி குறித்து கூட லிங்கா இசை வெளியீட்டு விழாவில் கூறினார். இன்னும் கொஞ்ச நாளில் அவரே கூட லிங்கா படத்தை நான் செய்து இருக்கக்கூடாது என்று கூறுவார். அப்பொழுது இந்த ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. உங்களை பொறுத்தவரை படம் நன்றாக இருந்தால், விமர்சனம் போடுங்கள். அனால் படம் நன்றாக இல்லை என்று கூறுபவர்களை வசைப்பாடாமல் இருங்கள் அதுபோதும். ஏனென்றால் அனைவருக்கும், அனைத்தும் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சரி லிங்கா படத்திற்கு வருவோம். இது ஒரு ரஜினி படம் என்று ஒத்துக்கொள்ளவே என்னால் முடியவில்லை. ஒரு காட்சி கூட பிடித்த காட்சி என்று சொல்ல முடியாத அளவில் தான் இருக்கிறது படம். எப்பொழுதோ தமிழ் சினிமாவில் செத்துப்போன ஒரு பார்முலாவை வைத்து நம்மை எல்லாம் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டார் இயக்குனர்.
இந்த படத்தில் ரஜினியை புகழ்ந்து ஒருவர் கவிதை பாடுவதாக ஒரு காட்சி வரும். அந்த காட்சியும், அதற்கு ரஜினி கூறும் பதிலும் ஐந்து நிமிடங்கள் ஓடும். இந்த காட்சி பலமுறை நாம் வடிவேல் மற்றும் செந்தில் நகைச்சுவை காட்சிகளில் பார்த்ததுதான். இந்த ஒரு காட்சி போதும், கதை, திரைக்கதை இந்த படத்தில் எப்படி இருக்கும் என்று கூறுவதற்கு. ஒரு காட்சி கூட புதுமையான காட்சி கிடையாது.
அதேபோல் ரஜினியும், அனுஷ்காவும் சாவி திருடும் ஒரு காட்சி, ஆங்கில படத்தில் இருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட காட்சி. இப்படி வசனம், காட்சி என்று எதுவும் மனதில் ஒட்டாத ரஜினி படத்தை இதுவரை நான் பார்த்தது இல்லை.(குசேலன், பாபா உட்பட). அடுத்ததாக பாடல் மற்றும் இசை. பாடல்கள் வந்த புதிதில் நான் பாடல்கள் நன்றாக இல்லை என்று கூறி இருந்தேன். உடனே நான் மேலே கூறியது போல அவரது ரசிகர்கள், ரகுமான் பாடல்கள் கேட்க,கேட்கதான் பிடிக்கும். உனக்கு இசை ரசனை நன்றாக இல்லை என்று என்னை வசைப்பாட ஆரம்பித்துவிட்டார்கள். பாடல்கள் கூட பொருத்து கொள்ளலாம், ஆனால் படத்திற்கு அவர் போட்டிருக்கும் பின்னணி இசை படு மட்டம். 

ஏற்கனெவே ரஜினியை வைத்து காமெடி செய்து வரும் வட இந்தியர்களுக்கு தீனி போடும் விதமாக லிங்கா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உள்ளது. இந்த காட்சியை வைத்து எப்படி எல்லாம் கிண்டல் செய்ய போகிறார்களோ என்ற எண்ணம் என் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. எப்படி பாண்டியன் படத்தோடு எஸ்.பி.முத்துராமன் படம் எடுப்பதை நிறுத்திக்கொண்டாரோ, அதேப்போல் கே.எஸ்.ரவிகுமாரும் நிறுத்திக்கொள்வது சால சிறந்தது.
ரஜினி கண்டிப்பாக அடுத்து ஒரு சிறந்த படம் கொடுப்பார் என்பதில் சிறிதும் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவர் யானை அல்ல குதிரை. விழந்தவுடன் உடனே எழுவார்.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...