Saturday, November 22, 2014

ரஜினியைப் பற்றிய அரசியல் விமர்சனங்கள் – ஒரு ரசிகனின் பதில்                         


 
லிங்கா பட பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து ரஜினி பேசிய கருத்துகள் குறித்து நண்பர்கள் பலர் என்னிடத்தில் கேட்டனர். கேட்டனர் என்பதை விட கேலி செய்தனர் என்பதே சரியாக இருக்கும். சிறு வயதில் இருந்து ரஜினி ரசிகனாக இருப்பதால் ஏற்படும் கஷ்டங்களை என்னுடைய “ரஜினிசம்” சிறுகதையில் ஏற்கனெவே கூறி இருந்தேன். அதனைப் படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.


இப்பொழுது நண்பர்கள் கேட்ட கேள்விகள். அதற்கான பதில்களைக் காண்போம்.

கேள்வி 1: ரஜினி லிங்கா படத்தின் விளம்பரத்திற்காக அரசியல் பற்றி பேசினாரா?

பதில்: ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதற்கான பதில் படத்தில் உள்ளது என்று சில பத்திரிக்கைகளால் செய்தி வெளியிடப்பட்டு வெளிவந்த முதல் படம் “வள்ளி”. அந்த படம் அடைந்த இமாலய தோல்வி தமிழ் மக்கள் அறிந்தது தான். 20 வருடங்களுக்கு முன்னாலே அந்த நிலைமை என்றால் இப்பொழுது சொல்லவே வேண்டாம். அதனால் படம் நன்றாக இருந்தால்தான் ஓடும் என்பதை அறியாதவர் அல்ல ரஜினி. அதனால்தான் இந்த வயதிலும் சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் சிரமப்பட்டு நடிக்கிறார். ரஜினி தும்மினாலும் அதனை செய்தியாக்கி விளம்பரம் தேடும் பத்திரிக்கைகள்தான் இன்று அவரை இந்த அளவிற்கு விமர்சிக்கின்றன.

மற்ற நடிகர்கள்போல் படத்திற்கு சாதி பெயர் வைத்தோ! அல்லது பிற மதத்தினரை சங்கடப்படும் விதத்தில் கருத்துக்கள் கூறியோ! விளம்பரம் தேடும் மனிதர் அல்ல ரஜினி. லிங்கா பட விழாவில் சில நடிகர்கள் கூறிய கருத்துகளுக்கு அவர் பதில் கூறினார் அவ்வளவுதான். பட விழாவில் ஏன் அரசியல் குறித்து பேசினார் என்று ரஜினிடம் கேள்வி கேட்பதை விட அமீர், சேரன்,வைரமுத்து ஆகியோரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
எனவே ரஜினி என்ற பிம்பத்திற்கு தமிழ்நாட்டில் விளம்பரம் தேவை இல்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். ஆகவே, இந்த கேள்வி அர்த்தமற்றது.

கேள்வி 2: நதிநீர் இணைப்பிற்காக எப்பொழுது ஒரு கோடி ருபாய் கொடுப்பார்?

ரஜினியின் மீது எவ்வளவு காழ்ப்புணர்வு இருந்தால் இந்த மாதிரியான கேள்விகள் எழும்? நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் முதல் ஆளாக நான் ஒரு கோடி ருபாய் தருகிறேன் என்று ரஜினி கூறி இருந்தார். இன்று வரை நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல் படுத்தினார்களா? பிறகு எதற்கு அவர் ஒரு கோடி ருபாய் தர வேண்டும்?

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல் படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று ராகுல்காந்தி கூறினாரே? அவரை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டீர்களா? அல்லது நதிநீர் இணைப்பை செயல் படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டீர்களா? ரஜினியை மட்டும் கேள்வி கேட்க வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்.

கார்கில் நிதிக்கு 10 லட்சம், சுனாமிக்கு 20 லட்சம், இலங்கை தமிழர்களுக்கு 10 லட்சம் என லட்சம், லட்சமாக வழங்கியவர் அவர். அதுமட்டுமல்லாமல் பல கோடி ருபாய் மதிப்புள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தை தமிழர்கள் பெயரில் படையப்பா வெள்ளிவிழாவின் போதே எழுதி கொடுத்தவர். அதற்கான சுட்டி கீழே.


அதனால் ரஜினிக்கு ஒரு கோடி என்பது ஒரு பொருட்டே கிடையாது. நாளைக்கே நதி நீர் இணைப்பு திட்டம் அறிவித்தால், முதல் ஆளாக ஒரு கோடி ருபாய் தருவது ரஜினியாக தான் இருக்கும் என்பது, அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் தெரியும். ஆகவே இந்த கேள்வி கேலிக்குரியது.

கடைசி கேள்வி: கடவுள் சொன்னால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறாரே?

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட எனக்கு, கடவுள் சொன்னால் நாளைக்கே அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி சொல்வதில் உடன்பாடு இல்லைதான். அதனால் ரஜினி விழாக்களில் கூறிய ஒரு சிறுகதையில் இருந்தே அதற்கு விளக்கம் தர விழைகிறேன்.

ஒரு ஊரில் வெள்ளம் வந்து அனைத்தையும் அடித்து சென்று விட்டது. சிவ பக்தன் ஒருவன் மட்டும் பனை மரத்தின் மீது ஏறி தப்பித்துக்கொண்டான். அப்பொழுது அந்த வழியாக படகில் வந்த ஒருவன், வா! படகில் வந்து ஏறிக் கொள் என்றான். அதற்கு சிவ பக்தன், இல்லை என்னை கடவுள் வந்து காப்பாற்றுவார்! என்று கூறி பனை மரத்திலே இருந்து விட்டான்.

இப்பொழுது பனை மரத்தின் பாதி அளவிற்கு தண்ணீர் வந்து விட்டது. அப்பொழுது அந்த வழியாக படகில் வந்த இன்னொருவன், வா! படகில் வந்து ஏறிக் கொள் என்றான். மறுபடியும் அந்த சிவ பக்தன், இல்லை என்னை கடவுள் வந்து காப்பாற்றுவார்! என்று கூறி பனை மரத்திலே இருந்து விட்டான்.

தற்பொழுது பனை மரத்தின் கழுத்து அளவிற்கு தண்ணீர் வந்து விட்டது. அப்பொழுதும் அந்த வழியாக படகில் வந்த இன்னொருவன், வா! படகில் வந்து ஏறிக் கொள் என்றான். மீண்டும் அந்த சிவ பக்தன், இல்லை என்னை கடவுள் வந்து காப்பாற்றுவார்! என்று கூறி பனை மரத்திலே இருந்து விட்டான்.அதே நேரத்தில் அந்த பனை மரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

இறந்த சிவ பக்தன் நேராக கடவுள் இடத்தில் சென்று, உன்னையே நம்பிய என்னை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே! என்று கேட்டான். அதற்கு கடவுள், அடப்பாவி! மூன்று முறையும் மனிதன் ரூபத்தில் வந்து உன்னை காப்பாற்ற நினைத்தது நான் தான்! அதை புரிந்து கொள்ளாமல் நீ உன் உயிரை விட்டு விட்டாயே! என்று கூறினார்.

அதனால் கடவுள் யாருடைய காதிலும் நேரடியாக வந்து எதையும் சொல்ல மாட்டார். ரஜினிக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுத்துள்ளார்.

1996 – இல் மூப்பனார் வடிவில் ஒன்று. அன்று மட்டும் ரஜினி முடிவு எடுத்து இருந்தால் இந்நேரம் அவர் முதல் அமைச்சராகி 18 ஆண்டுகள் ஆகி இருக்கும்.

1999 – இல் இயக்குனர் ஷங்கர் வடிவில் ஒன்று. அப்பொழுது முதல்வன் படத்தில் நடித்து இருந்தால், கண்டிப்பாக 2001 இல் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து இருக்கலாம்.

2004 – ராமதாஸ் வடிவில் ஒன்று. அப்பொழுதும் கட்சி ஆரம்பித்து இருந்தால் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்து இருக்கலாம்.

இப்பொழுதும் கூட கடவுள் நீதிபதி மைக்கல் குன்கா அவர்கள் வடிவில் வந்து இருக்கிறார். தற்பொழுதும் நீங்கள் கடவுளின் கட்டளைக்காக காத்து இருக்கிறேன் என்று கூறி, நல்ல தலைவர் இல்லாமல் யாருக்கு 2016 ஆம் ஆண்டு ஓட்டு போட வேண்டும் என்பது தெரியாமல் அல்லல்பட்டுள்ள தமிழக மக்களை மீண்டும் காக்க வைக்காதே!

முடிவெடு தலைவா! இருண்டு கிடக்கும் தமிழகத்தை காப்பாற்ற வா! மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா? என்று எல்லாம் யோசிக்காதே! தற்போதைய மக்களுக்கு முதல் விருப்பம் தங்களை ஏமாற்றாத தலைவர் தான், இரண்டாவது விருப்பம் மட்டுமே நல்லது செய்யும் தலைவர்கள்.

நீயும் தொண்டனை ஏமாற்றிய தலைவனின் பட்டியலில் சேர்ந்து விடாதே! உன்னுடைய உடல் நிலை ஒத்துழைக்காது என்று நீ நினைத்தால் அய்யா நல்லகண்ணு அல்லது சகாயம் போன்ற உத்தமர்கள் கட்சி தொடங்கினால், அவர்களுக்கு ஆதரவு கொடு! அதுதான் நீ தமிழ்நாட்டிற்கு செய்ய காத்திருக்கும் மிக பெரிய நன்மை.

இப்படிக்கு,
உன் உண்மை ரசிகன்,
அ.அருள்செல்வன்.Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...