Thursday, October 23, 2014

கத்தி- தமிழன் தலையில சுத்தி


                                                           வேலாயுதம் படத்திற்கு எனது பக்கத்தில் திரைவிமர்சனம் எழுதி கொலை மிரட்டல் வந்த பிறகு, நீங்க எந்த படத்தை வேணும்னா பார்த்து நாசமா போங்கடா! என்று அதன் பிறகு விஜய் படம் பற்றி ஒன்றும் எழுதுவது கிடையாது. அந்த விமர்சனத்தைப் பார்க்க கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

http://www.arulselvan.com/2011/11/velayudham-review.html

தலைவா திரைப்படத்தை பற்றி ஊரே கழுவி ஊற்றிய போது கூட, நான் ஒரு வார்த்தை எழுத வில்லை. ஜில்லா திரைப்படம் ஒரு உலக திரைப்படம் என்று என் நண்பன்(விஜய் ரசிகன்) கூறியபோது கூட, நான் அவன் உலக அறிவைப் பார்த்து வியந்தனே ஒழிய, ஒரு வார்த்தை எதிர்த்து பேசவில்லை. இருந்தாலும் நேற்று கத்தி திரைப்பட அரங்கில் நடைபெற்ற இந்த சம்பவம் இந்த பதிவை மீண்டும் எழுத என்னைத் தூண்டியது.

இலங்கையில் போர் உச்சத்தில் இருக்கும்போதே நாம் ஐ.பி.எல் மேட்ச் பார்த்து நம் தமிழ் உணர்வைக் காட்டியவர்கள். இலங்கை அதிபரின் பினாமி என்று நம்பப்படும் ஒருவர் எடுத்த படத்தை முதல் நாளே பார்கவில்லை என்றால் நான் தமிழனே இல்லை என்று முடிவு செய்து முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றேன்.

நான் தலை தீபாவளிக்காக என் மனைவியின் ஊரான திருத்திரைபூண்டிற்கு சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு திரையரங்கில் படம் பார்ப்பதற்காக சென்றேன். அங்கு டிக்கெட் முன்பதிவு எல்லாம் கிடையாது. அதனால் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றேன். செம கூட்டம். வழக்கம் போல் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் குடித்து விட்டு வருங்கால முதல்வர் விஜய் வாழ்க! என்று கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். அடுத்த படமும் ஒழுங்காக ரிலீஸ் ஆகாது என்று அவர்கள் போட்ட கோஷத்தில் இருந்தே தெரிந்தது.

விஜய்யின் பானரில் ஏறி பால் ஊற்ற முயன்றான் ஒருவன். அப்பொழுது அந்த 40 அடி பானர் குழுமி இருந்தவர்கள் மீது விழப் பார்த்தது. ஆனால் அதனை 20 இளைஞர்கள் தாங்கிப்பிடித்து கொண்டனர். மற்றொரு பக்கத்தில் டிக்கெட் வாங்க நேர்ந்த தள்ளுமுள்ளில் ஒரு இளைஞன் மயங்கி விழுந்தான். அவனுக்கு வலிப்பு வந்து விட்டது. அவனை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. டிக்கெட் வாங்குவதில் குறியாக இருந்தனர்.ஆனால் காலையில் சரக்கு கிடைக்காதலால் குடிக்காத இரண்டு இளைஞர்கள் அவனைத் தூகிக் கொண்டு எங்கோ வெளியில் ஓடினார்கள்.

எனக்கு இதற்கு மேலும் அங்கு இருந்தால் விபரீதம் என்று தோன்றியது. நாளை காலை வரும் செய்தித்தாளில்,

“தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளை திரையரங்கில் மயங்கி விழுந்தார்”
என்று செய்தி வந்தாலும் வரும் என்று நினைத்தேன்.

அதுகூட பரவாயில்லை. எப்பொழுதும் செய்தியைத் திரித்துக்கூறும் செய்தி தாள்கள், அந்த செய்தியை பின்வருமாறு வெளியிட வாய்ப்பு உள்ளது என்று நினைத்தேன்.

“விஜய் ரசிகர் டிக்கெட் வாங்கும் முயற்சியில் மயங்கி விழுந்தார்.”

அந்த பயங்கர எண்ணம் வந்தவுடன் படம் பார்க்கும் ஆசையைக் கைவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன்.

கோக்ககோலா குளிர்பான நிறுவனம், ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலத்தடி நீரையும் உறிஞ்சி, விவசாயத்திற்கு குடிநீர் இல்லாமல் செய்து விட்டது என்ற போராட்டம் பல காலமாக நடந்து வருகிறது. அந்த நிறுவனத்திற்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு விளம்பரத்தில் நடிக்கும் ஒரு நடிகன், விவசாய நிலத்தைப் பற்றி கூறும் கருத்தைக் கேட்க பல இளைஞர்கள் இப்படி வரிசையில் நிற்கிறார்கள் என்று நினைக்கும்போது, உங்கள எல்லாம் எத்தனை கவுண்டமணி வந்தாலும் திருத்த முடியாதுடா என்று தோன்றியது.

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...