Sunday, June 8, 2014

தெலுங்கானாவால் யாருக்கு நன்மை – தலைவர்களுக்கா? தொண்டர்களுக்கா?
“ தொண்டரை ஏமாற்றிய தலைவன் உண்டு. ஆனால் இதுவரை தலைவரை ஏமாற்றிய ஒரு தொண்டனும் இல்லை” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் கூறியிருப்பார். அது இந்திய திருநாட்டை பொறுத்த அளவு எந்த அளவிற்கு உண்மை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக தீக்குளித்து முதன் முதலில் உயிர் இழந்த தாளமுத்து – நடராசன் ஆகிய இருவர் குடும்பங்களின் இன்றைய நிலை சொல்லோனா துயரம். எழும்பூரில் உள்ள ஒரு அரசு கட்டிடத்திற்கு இவர்களின் பெயரை வைத்ததைத் தவிர, இவர்களுக்கு என்று இவர்கள் நேசித்த கட்சியும், தலைவர்களும் எதுவும் செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

                  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதலில் உயிர் இழந்த இருவரின் நிலைமையே இப்படி என்றால்? அதற்கு பின் போராடி உயிர் இழந்தவர்களின் வரலாற்றுக் குறிப்பு கூட இப்பொழுது இல்லை. ஆனால் அவர்களால் உயர்ந்த தலைவர்களின் நிலை என்ன? என்பதை இந்த நாடே அறியும். அதை விட கொடுமை! அந்த தலைவர்களின் குடும்பத்தினர் பலர் தற்போது இந்தி மொழியில் கைதேர்ந்தவர்கள் என்பதுதான். இதே நிலை தான் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும் தொண்டர்களின் நிலைமை. அவர்களை ஒரு வாழைப்பழ தோல் போல தூக்கி வீசிவிட்டு, தலைவர்கள் பழம் என்னும் பதவி சுகத்தை அடைந்து விடுவார்கள். தற்போது தெலுங்கானாவின் நிலைமையின் கிட்டதட்ட அதேதான்.

தெலுங்கானாவை ஆந்திராவில் இருந்து பிரிக்க நடந்த போராட்டம் என்பது மிக பெரிய போராட்டம். அதற்காக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை என்பது 600 –ஐ தாண்டும். அவர்களின் நினைவிடத்திற்கு மலர் வளையம் வைத்துவிட்டு, பதவியேற்ற சந்திரசேகர் ராவ் ஆட்சியில், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். அதற்கு அவர் கூறிய காரணம், “ எங்கள் குடும்பம் தெலுங்கானா  மாநிலம் உருவாவதற்கு கடும்பாடு பட்டதாகக் கூறியுள்ளார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் கிடையாது. ஆனால் அதே அளவு தியாகத்தை உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரும் செய்து உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர்களது குடும்பத்தினர் யாருக்காவது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்து இருக்கலாமே? அல்லது குறைந்தபட்சம் கட்சியில் உயர் பதவி? ஒன்றும் கிடையாது. அவர்களும் சரி, அவர்கள் குடும்பத்தினரும் சரி, காலங்காலமாக தொண்டர்களாக இருந்து மடிய வேண்டும் என்பதுதான் தலைவர்கள் அவர்களுக்கு எழுதிய தலைவிதி.

ஒரு மாநிலத்தைப் பிரிப்பதால், அந்த மாநிலம் முன்னேற்ற பாதையில் செல்லுமா? அல்லது இத்தனை நாட்கள் அந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்ற தலைவர்கள் முன்னேற்ற பாதையில் செல்கிறார்களா?அரசியல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? சத்தீஸ்கர், உத்தராஞ்சல், உத்தரகான்ட் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் உருவான பிறகு அந்த மாநிலங்களின் வளர்ச்சி 12% அதிகரித்து உள்ளது என்று இந்திய திட்டமிடுதல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த மாநிலங்கள், கல்வியறிவு மற்றும் விவசாயத் துறைகளிலும் முன்னேறியுள்ளன என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. 

அதே நேரத்தில் மிகவும் பிற்படுத்த வகுப்பில் ஏழையாக பிறந்து வளர்ந்த சிபு சோரன், மது கோடா ஆகியவர்களின் சொத்து மதிப்பு பல நூறு சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனவே மாநிலங்களை பிரிப்பதால் மக்கள் பயன் அடைவதை விட தலைவர்கள் பல மடங்கு பயன் அடைகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை.

இதேபோன்ற ஒரு நிலையை தெலுங்கானாவிலும் ஏற்ப்படுத்தாமல், தன் முன் மலை போல் நிற்கும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, மாநிலத்தையும், மக்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டிய கடமை சந்திரசேகர் ராவிடம் உள்ளது. முக்கியமாக தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் 8-இல் நக்சலைட்டுகள் தலைவிரித்து ஆடுகிறார்கள். அவர்களை ஒடுக்க வேண்டியது முதல் கடமை. அதை விடுத்து, ஹைதராபாத்தில் உள்ள சீமந்திராவை சேர்ந்த அனைவரும் வெளியேற வேண்டும் என்று தொண்டர்களை வைத்து மிரட்டுவது என்பது, மீண்டும் தொண்டர்களின் தியாகத்தில் குளிர் காய நினைக்கும் செயலே அன்றி வேறு எதுவும் இல்லை. 

எனவே தொண்டர்கள், மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து சென்றால் மட்டுமே, உயிர் இழந்த அந்த 600 பேரின் ஆன்மா சாந்தி அடையும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.

தெலுங்கானா மாநிலத்தால் வளர்ச்சி அடைந்தது தலைவர்களா? அல்லது தொண்டர்களா? என்பது இன்னும் ஐந்து ஆண்டுகளில் தெரிந்து விடும்.

No comments:

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...