Thursday, November 21, 2013

சச்சின் டெண்டுல்கர் - ஒரு கவிதை



சச்சின் டெண்டுல்கர் – க்கு BAD BOYZ இன் சமர்ப்பணம் இந்த கட்டுரை. கவிதைனும் சொல்லலாம்.
இதை சச்சின் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பொழுதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் மனம் இன்றுவரை சாந்தி அடையவில்லை. இப்பொழுதும் இக்கட்டுரையை கண்ணீரைக் கொண்டுதான் எழுதுகிறேன்.

                      சச்சின் டெண்டுல்கர்
                        


சதத்தில் சதம் கண்ட சத்ரியனே!
நீ எதிரியின் பந்தை மீண்டும் பதம் பார்ப்பது எப்பொழுது?”

இனி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் வருகைப்பதிவு அதிகமாக இருக்கும். ஆனால் யார் முகத்திலும் சந்தோஷப் பதிவு இருக்காது.

நீ ஓய்வு பெற்ற நாள்தான் பலபேருக்கு ஓய்வு நாள்!
கிரிக்கெட் பார்ப்பதில் இருந்து!

அன்று தான் பல வீடுகளில் துக்க தினம். கண்ணீர் மழை பெருக்கெடுத்து
புயல் சின்னமாக மாறியது.

ஒருவனுக்கு சாகும் நாள் தெரிந்தால் தெரியும் வேதனை!
நீ ஓய்வு அறிவித்த நாளில் இருந்து எங்களுக்கு கிடைத்தது.

தேசத்தந்தையான காந்தியின் மீது கூட விமர்சனம் உண்டு. ஆனால்
தேசத்தின் மகனான உன் மீது ஒரு விமர்சனம் கூட இல்லை.

ரசிகர்களாகிய நாங்கள் உன்னிடம் இருந்து எதிர் பார்த்தது மிகவும் குறைவு தானே?
நீ அனைத்துப் போட்டிகளிலும் 5௦ ஓவர் அவுட் ஆகாமல் விளையாட வேண்டும்!
சதம் அடிக்க வேண்டும்.!
இந்தியாவிற்கு வெற்றி தேடித் தர வேண்டும்.!
இதைத் தவிர உன்னிடம் இருந்து எதையாவது எதிர்ப்பார்த்து நாங்கள் நெருக்கடி தந்தோமா?


புத்தர் தோற்றுவித்தது புத்திசம். மகாவீர் தோற்றுவித்தது ஜைனிசம்.
ஆனால் மக்கள் உனக்காக தோற்றுவித்த மதம் தான் சச்சினிசம்.(Sachinsm)

எல்லா மதத்தை விடவும் நாங்கள் பாக்கியசாலிகள் தான். ஏன் என்று கூறு பார்க்கலாம்?
எந்த மதத்திலும் கடவுளை நேரில் கண்டவர்கள் இல்லை.

என் அம்மாவிற்கு நான் நாத்திகனாக இருக்கிறேன் என்று வருத்தம். அவருக்கு என்ன தெரியும் நீ 99 இல் இருக்கும் பொழுது நான் எத்தனை கடவுளைக் கும்பிட்டு இருப்பேன் என்று?
ஒரு முறை நீ 2௦௦ அடித்ததற்காக திருப்பதியில் மொட்டைக்கூட போட்டு இருக்கிறேன்.

தந்தை பெரியாரே நீ அடிக்கும் Straight drive – வை நேரில் கண்டு இருந்தால்
கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டு இருப்பார்.

இந்தியாவில் “ஓம்!ஓம்!” என்ற மந்திரம் ஒலித்ததை விட “சச்சின்!சச்சின்!” என்ற மந்திரம் ஒலித்தது தான் அதிகமாக இருக்கும்.

இருந்தாலும் உன் மீது சிறிது கோபம்தான். இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது நீதான்.
ஒரு முறை நான் தும்மும்போது நீ சிக்ஸர் அடித்தாய் என்பதற்க்காக நான் எத்தனை முறை தும்மினேன் என்று எனக்குதான் தெரியும்!
இது பரவாயில்லை! என் நண்பன் ஒருவன் பாத்ரூம் செல்லும்போது நீ அவுட் ஆகிவிட்டாய். அதில் இருந்து நீ ஆடி முடிக்கும்வரை அவன் பாத்ரூம் சென்றதில்லை.

யார் சொன்னது இதய அடைப்பு 30 வயதிற்குமேல் தான் வரும் என்று. நீ அவுட் ஆகும் பொழுது 6 வயது சிறுவனுக்கும் இரண்டு நிமிடம் இதய அடைப்பு வரும்.

நீ இருக்கும் பொழுதும் இல்லாத பொழுதும் நிறைய பேர் இந்தியாவிற்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். அதை நாங்கள் யாரும் பெரிதாக எடுத்ததில்லை.
அதற்கு காரணம் சினிமா மோகம் தான்.
நாங்கள் எப்பொழுதும் கதாநாயகன் வில்லனை அடித்து ஜெயித்தால்தான் ஒத்துக் கொள்வோம். காமெடியன்கள் அடித்து ஜெயித்தால் அல்ல.

பேசாமல் திருவள்ளுவர் படத்திற்கு பதில் உன் படத்தைப் பயன் படுத்தலாம். எந்த குறள் எடுத்தாலும் அதற்கு நீ ஒரு எடுத்துக்காட்டு. என்னைப் பொறுத்தவரை அது இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உன்னைப் பற்றி எழுதப்பட்ட சரிதை.

நீ ஓய்வு பெரும் நாள் அன்று பேசிய பேச்சு வரலாற்றில் மிக சிறந்த பேச்சுகளில் ஒன்று.
இந்திய துணைக் கண்டம் ஒரே நேரத்தில் கண்ணீர் சிந்தி நான் கண்டது இல்லை.
அந்த கண்ணீர் வெள்ளத்தில் கங்கையும் காவிரியும் இணைந்தது.
அந்த பேச்சில்தான் தெரிந்தது நீ கிரிக்கெட்டிற்கான இந்தியாவின் தூதர் மட்டும் அல்ல.
கலாசாரத்திற்கான இந்தியாவின் தூதர் என்று.

வேற்றுமையில் ஒற்றுமைதான் பாரதம்! என்பது நீ விளையாடும் பொழுதுதான் கண் கூடாக தெரிந்தது.

பூஸ்ட் மட்டையில் நீ போட்டு இருக்கும் கையெழுத்தின் அழகு! ரவிவர்மாவின் ஓவியம் தோற்றது.

எனக்குத் தெரிந்து நீ விளையாடும் போட்டியிற்கு நடுவர்களே தேவை இல்லை. மனசாட்சியை மீறுபவனுக்கு தானே நடுவர், விதிமுறைகள் எல்லாம்?

உன்னுடைய பெருமைகளில் பாரத ரத்னா விருது பற்றி நான் குறிப்படவில்லை. வேண்டும் என்றால் பாரத ரத்னா பெருமைகள் பற்றி குறிப்பிடும் பொழுது உனக்கு வழங்கப்பட்டது என்று எழுதுகிறேன்.

இறுதியாக,

ஊழல் பெருகிவிட்ட இந்தியாவில் வாழ நீ ஒரு முக்கிய காரணமாக இருந்தாய். இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்தாய்! இதுவரை வாரிசு அரசியலை நாங்கள் விரும்பியது இல்லை. முதல் முறையாக உன் மகன் கிரிக்கெட் விளையாட வர வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். கண்டிப்பாக உன் வளர்ப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இப்படிக்கு,

மனதில் உன் நினைவை சுமந்து நடைப்பிணமாக வாழும் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்.

அ.அருள்செல்வன்.

Wednesday, October 23, 2013

மாமா டௌசெர் கழண்டுச்சு – குறும் படம்


                         

BAD BOYZ நண்பர்கள் குழு “மாமா டௌசெர் கழண்டுச்சு” என்ற நகைச்சுவை குறும்படத்தை எடுத்து உள்ளோம். படத்தைப் பார்த்து உங்கள் மேலான ஆதரவைத் தெருவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.









இப்படிக்கு,
அ.அருள்செல்வன்






                                                     

Friday, July 12, 2013

தற்கொலைப் படை - குறும்படம்

                                           

நண்பர்களே,

"தற்கொலை படை" என்னும் புதிய குறும்படத்தை இயக்கி உள்ளேன். சென்னையில் விஸ்வரூபம் வெளியிட்டுள்ள திரையரங்குகளில் வைக்கப்படும் வெடிகுண்டை மைய்யபடுத்தி  எடுத்து உள்ள குறும்படம். படத்தை பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை கூறவும்.


Tuesday, February 19, 2013

பிரபாகரன் மகன் - வேங்கையின் மைந்தன்




இன்று காலை நாம் பார்த்தப் புகைப்படம் சற்று நேரம் நெஞ்சை அடைப்பதாய் இருந்தது.போரின்போது கொல்லப்பட்டான் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தின் பதுங்கு குழியில் இருப்பது போன்ற புகைப்படமும், அதன் பின்னர் தான் துப்பாகியால் கொல்லப்பட்டான் என்ற உண்மையும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

பல உணர்ச்சிகள் என் உள்ளத்தில் வந்தன.

ஒன்றும் அறியாத ஒரு சிறுவனை, பால் மனம் மாறாத பாலகனைக் கொன்றதை நினைத்து கண்ணீர் விடுவதா?ஈழத்துக்காக பலி கொடுத்த மாவீரன் பிரபாகரனின் வீரத்தை மெச்சுவதா?

குழந்தைகளைக் கொல்லும் கோழை இலங்கை ராணுவத்தை நினைத்து கோபப்படுவதா?

தன் குடும்பம் தான் முக்கியம் என்று பலர் இருக்க தன் குழந்தைகளையும் தமிழ் என்று புரியவில்லை.


இந்த கொழைத்தனத்தைப் பார்க்கும்போது ,

"என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...?’" என்று இலங்கை ராணுவத்தைப் பார்த்து தலைவர் ரஜினி கேட்ட கேள்வி தான் ஞாபகம் வருகிறது.

கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். விடியலை நோக்கும் அந்த விழிகளைப் பாருங்கள். இதைப் பார்த்துதான் அந்த கோழைகள் மிரண்டனரோ?



இவர்கள் மனதில் பிரபாகரன்மேல் எந்த அளவு பயம் இருந்தால் அவர் பிள்ளையும் வேங்கையின் மைந்தனாக வர வாய்ப்பு உள்ளது என எண்ணி இந்த சிறு வயதிலேயே அவன் உயிரை எடுத்து இருப்பார்கள்?

."எந்த நாட்டில் பெண்களும், குழந்தைகளும், ஏழைகளும், அப்பாவி மக்களும் உதிரம் சிந்துகிறார்களோ அந்த நாடு உருப்படாது" என்று ரஜினி கூறினார். அது உண்மை ஆகட்டும். இந்த ஓநாய்களை விரைவில் இயற்கை தண்டிக்கட்டும். ஏனென்றால் நம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவால் அவர்களுக்கு ஒன்றும் நேரப் போவது இல்லை.

இங்கே ஒரு நடிகையின் மானத்திற்காக போராட ஒரு தலைவர் உண்டு, மாபெரும் கட்சி உண்டு.

இங்கே ஒரு நடிகனின் வியாபாரம் செய்யும் உரிமையைக்காக்க ஒரு மாபெரும் கூட்டம் உண்டு.

அடுத்த வேலை சோற்றுக்கு போராடும் 50% மக்கள் உண்டு.

ஆனால் தமிழனுக்காக, அல்லது மனித உரிமைக்காக போராட ஒரு நாதி இல்லை.

நண்பர்களே இதில் கலைஞரை மட்டும் நாம் குறைகூறி பிரோஜனம் இல்லை. நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் அந்த நேரத்தில்? தென் ஆப்ரிக்காவில் நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.இப்பொழுது வருத்தப்படும் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பதை சிந்துத்துப் பார்க்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் ஒரு நல்ல தலைவர் உண்டாவதற்கு என்ன காரணம்? ஒரு தலைமுறையே சினிமா என்னும் மோகத்தில் விழுந்து கிடக்கிறது. நான் உட்பட. போராடும் எண்ணம் சுத்தமாக இல்லை. நாளையே ஆதிபகவன் படம் நன்றாக இருக்கிறது என்றால் அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவோம். ஏன் ? நானே என் ப்ளாக்கில் திரை விமர்சனம் எழுதலாம். இது தான் நடந்து வருகிறது. இது தான் கண்டிப்பாக நடக்கும்.

அட போங்கப்பா! அடுத்த தலைமுறையாவது காப்பாத்துங்க!போராடும் குணத்தோடு குழந்தைகளை வளருங்கள்.













































Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்


இந்த பதிவு கண்டிப்பாக உலக  சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது. தொடர்ந்து படிக்க வேண்டாம்.            


         

கமல் படங்கள் மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. அதுவும் மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு கமல் படங்களைத்  தியேட்டரில் பார்க்கக்  கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால் வழக்கம்போல் கமல் ஒரு விளம்பரத்தைத்தேடி படம் பார்க்கும் எண்ணத்தை வரவழைத்து விட்டார்.

இந்த படம் பார்த்தப்போது எனக்கு ஒன்று புரிந்தது.

உலக நாயகன் கமல்ஹாசன் உலக சினிமாவை தான் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு கொண்டு போகவில்லை.

அதாவது ஆங்கிலத்தைத்  தமிழ்நாட்டிற்குக்  கற்பித்து அனைவரையும் அமெரிக்கர்போல மாற்றி விட்டேன் என்று கூறுவதற்கு சமம் இது. நம் தமிழை அல்லவா உலகிற்கு எடுத்து செல்ல வேண்டும்.

ஏற்கனேவே உதடோடு உதடு வைக்கும் காட்சிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அரும்பாடு பட்டவர்.

கமல் ஒரு அறிவாளி, மேதாவி என்று எல்லாரும் கூறுகிறார்கள். இந்தியாவில் இன்னும் 90% பேர் வறுமை கோட்டிற்கு கீழும், கல்வி அறிவும் இல்லாதவர்கள் என்ற உண்மை எப்பொழுது இவருக்கு புரியபோகிறது ?

இவர்களுக்காக இவர் எப்பொழுது ஒரு படம் எடுப்பார்? ஈரானிய படங்களும், கொரிய படங்களும் அமெரிக்க படங்களுக்குப்  போட்டியாக இருக்கின்றன. அதுபோல் அல்லவா அவர் தமிழ் சினிமாவைக்  கொண்டு சென்று இருக்க வேண்டும்?

மாறாக தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி கொண்டு அமெரிக்காவிற்கு நல்ல ஜால்ரா அடித்து இருக்கிறார்.

அடுத்த படத்தில் 15 கோடி சம்பளம் வாங்கி  விடும் நடிகருக்கு பணம் கொடுக்கத்  தயாராக இருக்கும் நம் தமிழ் நாட்டு  மக்கள் , நூறு முறை நான் வெளிநாடு போக தயாராக இருக்கிறேன் என்று கூறும் நடிகருக்கு தன் வீட்டுப்  பத்திரத்தைத்   தரும் தமிழ் நாட்டு மக்கள், கொஞ்சம் காவேரியில் தண்ணீர் வராமல், தமிழ்நாட்டில் வாழ வழி இல்லாமல் இருக்கும் விவசாய மக்களுக்கும் உதவி செய்தால் தமிழ்நாடு முன்னேற வாய்ப்பு  உள்ளது.

சரி விஸ்வரூபம் கதையாவது கொஞ்சம் தகவல் சேர்த்து எடுத்து இருப்பாரா? என்றால் அதுவும் இல்லை .

 முல்லா ஓமரை அடிக்கடி புகைப்படம் எடுப்பதைப்  போல காட்டுகிறார். முல்லா ஒமரின் புகைப்படம் கிடைக்காமல் அமெரிக்கா  திண்டாதுவது  அவருக்கு தெரியவில்லை போலும்.

 இவர் அல் கொய்தாவில் இணைவது போன்ற காட்சி, விருதகிரி படத்தில் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் விஜயகாந்த் சேரும் காட்சிக்கு இணையானது.

இந்த படத்தைப்பற்றி நான் விமர்சனம் பண்ண விரும்பவில்லை.

ஆனால்  கமல் அவர்களுக்கு நாம் கேட்பது ஒன்றே ஒன்று தான். தமிழ் சமூகம்  உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு படம் எடுங்கள். ஹாலிவுட் இயக்குனர் உங்களைப்பாராட்ட வேண்டும் என்று படம் எடுக்காதீர்கள்.

முடிந்தால் இந்திய கலாச்சாரத்தைப்  பறைசாற்றும் வகையில் படம் எடுங்கள்.

இதைப்பற்றி எழுத நீ யார் என்று கேட்கலாம்? இது என் ப்ளாக், இது என் கை, இங்கே கருத்து சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது.


இப்படிக்கு ,


அருள்செல்வன்




Tuesday, January 8, 2013

சொம்பு - தமிழ் குறும்படம்

                                              

நண்பர்களே!

எங்கள்  BAD BOYS நண்பர்கள் குழுமத்தின் அடுத்த படைப்பு "சொம்பு" . அலுவலக அரசியலை நகைச்சுவையோடு பதிவு செய்துள்ளோம்.படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு,

அ.அருள்செல்வன்

Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...