Monday, December 24, 2012

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் – ஒரு ஏமாற்றுக்காரர்:

என் வாழ்வில் எந்த நாள் வரக்கூடாது என்று நான் நினைத்து இருந்தேனோ! அந்த நாள் வந்துவிட்டது. இதை விட உலகம் Dec – 21 உலகம் அழிந்து இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பேன். Dec – 23 இனி என் வாழ்வில் ஒரு கருப்பு தினம். சச்சின் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார் என்ற செய்தி (செந்தீ) காதில் பாய்ந்தது.

ஒரே ஒரு முறை மட்டும் இந்த செய்தி உன்மை தானா? என்று தொலைக்காட்சியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். அவர்கள் சச்சினின் புகழ் பாடிக்கொண்டு இருந்தார்கள். கடந்த வாரம்வரை சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று உதவாக்கரை கிரிக்கெட் நிபுணர்களை வைத்து கருத்துக்கூறி கொண்டு இருந்த இதே மீடியாக்கள் இன்று சச்சின் புகழ் பாடிக்கொண்டு இருக்கின்றன. சஞ்சய் மன்ஜ்ரேகர் போன்ற நாய்கள், இன்னும் சச்சினின் நிழலைக் கூட தொட அருகதை இல்லாதவர்கள், சூதாட்டம் செய்து நாட்டின் மானத்தைக் கப்பலில் ஏற்றியவர்கள் இவர்களை வைத்து விளம்பரம் செய்து கொண்டு இருந்தன மீடியாக்கள். இப்பொழுது சச்சினின் புகழைப் பாடிக்கொண்டு இருக்கின்றன.

நண்பர்களே! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாட்டின் இப்பொழுது மிக பெரிய பிரச்சனை, மோசமான அரசியல்வாதிகள் அல்ல! மிக மோசனமான மீடியாக்கள் தான்.

சச்சினோடு வாழ்கை:
1994 என்று நினைக்கிறன். 4 வது படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுதுதான் முதல் முறையாக சச்சின் ஆடுவதை தொலைக்காட்சியில் பார்த்தேன். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அப்போட்டியில் சச்சின் 66 ரன்கள் எடுத்தார்.

அந்த போட்டியை என்னைப் பார்க்க வாய்த்த என் அண்ணனுக்கு என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

அதற்குப்பின் 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை. ஒரு ஆளாக நின்று அவர் ஆடிய அந்த ஆட்டம்! அதை நேரடியாக பள்ளியை விடுமுறை போட்டுவிட்டு பார்த்த நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. 22 வயதில் இப்படி எல்லாம் ஆட முடியுமா? ஒவ்வொரு இளைஞர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை விதைத்தார்.

அவர் அடித்த சதங்களை நினைவு கூறிதான் என் வாழ்க்கை எனக்கு ஞாபகம் இருக்கும்.

என்னால் இந்த கட்டுரையை எழுத முடியவில்லை. கண்ணீர் வருகிறது. நமக்கு எல்லாம் தேசப்பற்றை விதைப்பதற்கு காந்தி, நேதாஜி போன்ற தலைவர்கள் இல்லை. சச்சின் ஒருவர்தான் என்னை இந்தியாவில் பிறந்ததற்காக பெருமை பட வைத்தார். காந்தி தேசத்தந்தை என்றால், சச்சின் தேசத்தின் மகன்.
இப்படி இந்தியாவையே தவிக்க வைத்துவிட்டு, ஏமாற்றிவிட்டு சச்சின் ஓய்வு பெரும் முடிவை அறிவித்து விட்டார்.

இதனால் கண்டிப்பாக சச்சின் ஒரு ஏமாற்றுக்காரர்தான்.

Wednesday, November 14, 2012

துப்பாக்கி ஒரு உண்மை விமர்சனம்                                 
முதல் நாள், முதல் காட்சி பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. எந்திரன் படத்திற்கு பிறகு நேற்று தான் சென்றேன். விஜய்யின் ரசிகர் பட்டாளம் பிரமிப்பை ஏற்படுததுகிறது. அரக்கோணத்தில் நான் பார்த்த திரைஅரங்கில் உட்கார இடம் இல்லை. 

படத்தின் கதை:

 
மும்பை நகரில் பல இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டை அப்புறப்படுத்தும் விஜய்க்கும், தீவரவாதிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் ஒரு வரி கதை.

படத்தின் மைனஸ்:

படத்தின் முதல் காட்சியில் வழக்கமபோல் விஜய் படத்தில் வருவதுபோல் ரயிலைக் காட்டியதும் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று நினைத்தேன். நல்ல வேலையாக அப்படி எதுவும் நடக்க வில்லை. ஒரே ஒரு பாடலுடன் முடிந்து விடுகிறது. அந்த ஹாரிஸ் ஜெயராஜின் பாடலுக்கு விஜய்யின் குருவி பட ரயில் காட்சியை நூறு முறை பார்த்து விடலாம். படத்தின் முதல் எதிரியே ஹாரிஸ் ஜெயராஜ் தான். சொதப்பலான பின்னணி இசை, பாடல்கள் என படத்தில் சில இடங்களில் ஏற்படும் தொய்விற்கு இவர்தான் முக்கிய காரணம்.

ஜெயராம் வரும் காட்சிகள். இந்த படத்திற்கு இவர் வரும் காட்சிகளில காண்டீன்களில் கூட்டம் அலை மோதுகிறது.
கிளைமாக்ஸ் காட்சி மிக மட்டம். விஜய் ஒவ்வொரு கோரிக்கையாக வைப்பதும் அதை தீவிரவாதி ஏற்பதும், ரசிகர்களை படம் முடிந்து வரும் போது இது நல்ல படமா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் ராணுவத்திற்கு ஆதரவாக கருத்து சொல்கிறேன் என்று கடைசியில் வைக்கப்பட்ட பாடல் காட்சி கொடுமையோ கொடுமை.


படத்தின் பிளஸ்:சந்தேகமே இல்லாமல் விஜய் தான். அடக்கமான நடிப்பு. சுறுசுறுப்பான சண்டை காட்சிகள், ஸ்டைல், உடல் மொழி என அனைதிலம் கன கச்சிதம். இதேபோல் இவர் வரும் படங்களில் நடித்தால் கண்டிப்பாக இவர் இன்னும் மேலுக்கு செல்வது உறுதி.
அழகு தேவதை காஜல் அகர்வாலின் ஆட்டம், அனைவரையும் உச் கொட்ட வைக்கிறது.அணைத்து காட்சிகளிலும் மிக அழகாக இருக்கிறார்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி. முருகதாசுக்கு இந்த படம் ஒரு முழுமையான படம் இல்லை என்றே தோன்றுகிறது. மிக சிறந்த திரைக்கதை அமைத்து இருந்தாலும் பல லாஜிக் மீறல்கள். இதுவே படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் வருவதை தடுக்கும்.

மொத்தத்தில் துப்பாக்கி குறி தப்பாது.

Saturday, November 10, 2012

மொக்கை பையன் ரிடர்ன்ஸ் - நகைச்சுவை குறும்படம்

                   


நண்பர்களே ,
இது எங்களுடைய அடுத்த நகைச்சுவை குறும்பட முயற்சி. உங்களுடைய மேலான கருத்துகள் வேண்டும்.அருள்செல்வன்

Wednesday, August 15, 2012

வேகத்தடை - தமிழ் குறும்படம்

நண்பர்களே,

எங்கள் "BAD BOYZ" நண்பர்கள் குழுவின் இரண்டாவது குரும்படம் "வேகத்தடை" இன்று இணையதனத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த படத்திற்காக நாங்கள் ஒரு ருபாய் செலவு செய்யவில்லை. இந்த படத்தைப்பற்றி உங்கள் மேலான கருத்துகளை பதிவு செய்யவும்.

இது ஒரு த்ரில்லர் திரைப்படம்.


Tuesday, July 10, 2012

திறந்த வெளி புல்வெளிக்கழகம்

                                
இது ஒரு கில்மா பதிவு என்று நினைத்துப்  படிக்க வந்தவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை படிக்க வேண்டாம். இந்த நாட்டிற்க்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மேலே படிக்கவும்.
                                                        
கடந்த வாரம் பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி என்னைப் பதற வைத்தது.கடந்த வருடம் குரூப் 2  எழுத்துத் தேர்வில் தேர்வான நிறைய தேர்வாளர்கள் +2  முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்தார்கள் என்ற காரணத்தினால் நேர்முகத் தேர்வுக்கு செல்ல தகுதி இல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.அதாவது 10 ,+2 முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவாம்!

அடப்பாவிகளா! திரும்ப  திரும்ப ஏழையின் வயிற்றில் அடிக்கும்  செயலையே இந்த நாட்டில் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏழைகள் முன்னேறி விட கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் ஒரு சில பேர். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பவர்கள் யார்? சின்ன வயதில் படிக்க வழி இல்லாமல், வேலைக்கு சென்று வாழ்க்கையில் தானும் முன்னேற வேண்டும் என்று துடிக்கும் ஏழை மாணவர்கள் தான்.இவர்கள் தான் 90 % இதில் படிக்கிறார்கள்.

நாம் எழுப்பும் சில நியாயமான சில கேள்விகள். இதை சரி என்று நினைக்கும் இதை படிக்கும் வழக்கு அறிஞர்கள் யாரவது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நியாயம் பெற்றுத் தரலாம்.

1 ) திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு அரசு பணியில் வேலை இல்லை என்றால் எதற்காக இந்த பல்கலைகழகங்கள்?.
2 )திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எழுத்து தேர்வில் மற்றவர்களை விட தேர்ச்சி பெறுகிறார்கள். அதாவது முழு நேர கல்லூரியில்  பயின்றவர்களை விட தேர்ச்சி பெறுகிறார்கள். நாம் நாட்டில் தற்போது உள்ள கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளின் யோக்கிதை நாம் அறியாததா?
3 ) ஒரு வேலை முழு நேர கல்லூரிக்கு சென்றால் ஒழுக்கம் வரும் என்று நினைத்தால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது இன்று தினசரி கல்லூரிகள்  நடக்கும் விதத்தில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
4 ) இந்த விஷயத்தில் நியாயமாக மேல்முறையீடு செய்ய  வேண்டியது திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் தான். அவர்கள் தான் அதில் படிக்கும் மாணவர்களுக்கு நன்மை செய்து தர வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு பணம் வந்தால் மட்டும் போதுமானது.நமக்கு நாம் முழு நேர கல்லூரியில் முடித்துவிட்டு வேலையில் இருக்கிறோம்,அது போதுமானது.
இது இப்படியே சென்றால் நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகள்  ஆவர்கள் என்பதில் இம்மி அளவு கூட சந்தேகம் வேண்டாம்.

இவர்களால் மேலே  எதிர்த்து  போராட முடியாது. தற்போது நாட்டில் 20 % மாக இருக்கும் சாப்பாட்டிற்கு மார் அடிப்பவர்களின் எண்ணிக்கை 50 % மாக மாறும் போது தான் "இந்திய புரட்சி" வெடிக்கும். அதுவரை இவர்களை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்களைப்   பணிகளில் சமமாக பார்க்கும் வரை அவை திறந்த வெளி புல்வெளி கழகங்கள் தான்.

பி.கு இதே நிலை தான் தனியார் அலுவலகங்களிலும் உள்ளது.
Tuesday, June 26, 2012

தல தளபதி

                                                                 

ஜூன் -22 ஆம் தேதி நடிகர் விஜய் அவர்களின் பிறந்த நாள்.அன்று வெள்ளிக்கிழமை ,ஆதலால் வழக்கம் போல் நான் வேலை செய்யும் கார்பரெட் கம்பெனியில் எதாவது விளையாட வேண்டும்(fun  games ) என்று இவர்களாக போட்ட சட்டம் இருக்கிறது.நான் இதற்கு எதிரானவன். அதனால் இது போன்ற விளையாட்டுகளில் கலந்து கொள்வது இல்லை.இவன் மட்டும் கலாச்சார சீரழிவிற்கு ஆளாகாமல் இருக்கிறானே! இவனை எப்படியாவது மாட்டி விட வேண்டும் என்று எண்ணி, நான் தான் போட்டியை நடத்த வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள்.சத்தியமாக எனக்கு இது போன்ற ஆட்டங்களைப்பற்றி ஒன்றும் தெரியாது.என்ன செய்வது என்று யோசித்தேன்.

அன்று விஜய் அவர்கள் பிறந்த நாள் என்று தெரியும். சின்ன வயதில் ஒருவர் விஜய் படத்தின் பெயரை சொன்னால், மற்றொருவர் அஜித் படத்தின் பெயரை சொல்ல வேண்டும். யார் சொல்லாமல் விடுகிறார்களோ அவர்கள் தோற்று விட்டார்கள்.இந்த ஆட்டத்தை நடத்தலாம் என்று தீர்மானித்து, மொத்தம் உள்ளவர்களை விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் என்று பிரிய சொன்னேன். வழக்கம் போல் அஜித் பக்கம் 80% பேர் சேர்ந்து விட்டார்கள்.

நிச்சயமாக தெரியவில்லை. அஜித்திற்கு எப்படி இவ்வளவு ரசிகர் வட்டம்? நம் தமிழ் ஆட்கள் நிறத்தைப் பார்த்து தீர்மானிப்பவர்கள் அல்ல. பிறகு எப்படி அஜித்திற்கு இவ்வளவு  ரசிகர்கள். குறிப்பாக அழகாக இருக்கும் நடிகருக்கு பெண்கள் தான் அதிக ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் அஜித் பக்கம் கூடியவர்களில் 90% ஆண்கள் தான்.

சரி அணி பிரிந்து ஆகி விட்டது. இனி போட்டியின் விதிமுறைகள்.

இந்த விளையாட்டின் பெயர் தான் "தல தளபதி"

1) ஒரு முறை கூறிய படம் பெயரை மீண்டும் கூற கூடாது.
2)தவறான படத்தைக் கூற கூடாது
3)2 நிமிடங்களக்கு மேல் படம் பெயர் சொல்லாமல் உள்ள அணி தோற்றதாக அறிவிக்கப்படும்.

(பின் குறிப்பு: போட்டி நடத்தும் நானும் ஒரு அஜித் ரசிகன் தான்.)

போட்டி தொடங்கியது. ஒருவர் மாற்றி ஒருவர் படத்தின் பெயர்களை சொல்ல ஆரம்பித்தார்கள்.ஏதோ மந்திரம் உச்சரிப்பது போல் கூறிக் கொண்டு இருந்தார்கள். பிரபலமான படங்கள் முடிந்தவுடன்  சற்றுத்  திணற ஆரம்பித்தார்கள்.

விஷ்ணு என்று  கூறி விஜய் ரசிகர்கள்  முடித்து இருந்தார்கள்.அஜித் ரசிகர்களால் அடுத்தப் படத்தை கூற முடியவில்லை. உடனே நான் ரெட் நிறம் போட்டு இருக்கும் நபர் பெயர் கூற வில்லையே என்று கூறினேன். இதனால் அஜித் ரசிகர்கள்  உடனே ரெட் படத்தின் பெயரைக்  கூறினார்கள். உடனே நடுவர் அஜித் ரசிகர்களுக்கு  ஆதரவாக செயல் படுகிறார் என்று சிறுது சலசலப்பு ஏற்ப்பட்டது.அது அடங்கியவுடன் மீண்டும் போட்டி தொடங்கியது.

மறுபடியும் விஜய் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மாண்புமிகு மாணவன் படத்தை கூறினார்கள். இந்த முறை அஜித் ரசிகர்கள்  மிகவும் திணறினார்கள் .

திடீர்  என்று ஒருவன் "நாளைய தீர்ப்பு" என்று கூறி விட்டான். அது விஜய் நடித்த முதல் படம். அவ்வளவு தான் அஜித் அணி தோற்றது.அனைவரும் பதில் கூறியவனை அடிக்க சென்று விட்டார்கள். விளையாட்டு  வினையில் முடிந்தது.

இந்த மொக்கை பதிவின் மூலம் நான் சொல்ல விரும்பும் கருத்து  இது தான்.


                                                 "வாய்மையே வெல்லும்".

சிறிய விஷயமாக இருந்தாலும் அவ்வளவு நபர்கள்  இருந்தும் அஜித் அணி தோற்றதுக்கு காரணம் நான் ஆட்டத்தின் விதியை மீறி கூறிய அந்த ஒரு பதில் தான் என்று நினைத்தேன். கடவுள் இந்த விளையாட்டைக் கூட பார்த்துக் கொண்டு இருக்கிறாரா? என்று ஆசிரியப்பட்டேன்!.

மீண்டும் இன்னொரு மொக்கையில் சந்திப்போம்.

நேரம் இருந்தால் என்னுடைய இரண்டாவது குறும் படத்தின் முன்னோட்டத்தை கீழே காணவும்.

                               


Monday, June 25, 2012

ரஜினியின் பொய்

                                               
                                                 


கடந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் பேட்டி அளித்து இருந்த சுப்ரமணிய சுவாமி 1996 ஆம் ஆண்டு மதுரையில் தன்னை எதிர்த்து தி.மு.க வினர் யாரும் போட்டி இடாமல் தான் பார்த்துக் கொள்வதாக  கூறிய ரஜினிகாந்த், பின் தான் அப்படி கூறவில்லை என்று ஏமாற்றி விட்டதாக தெருவித்து இருந்தார்.ரஜினி இந்த மாதிரி பொய் சொல்வாரா? இதற்கு முன் யாரவது இந்த மாதிரி குற்றச்சாட்டு வைத்து இருக்கீறார்களா?

மற்றவர்களை விடுங்கள்.ரஜினி ரசிகனாக 2011 வரை நான், இந்த மாதிரி என் வாழ் நாளில் நினைத்தது கூட இல்லை. ரஜினி ஒரு அவதார புருஷன் என்று நினைத்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.

ஆனால்  ரஜினியும் பொய் கூறினார் என்று 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நினைத்தேன்.அப்பொழுது அண்ணா ஹஜாரேவின் போராட்டம் தொடங்கிய காலக்கட்டம்.இந்தியாவில் அனைத்து  மூலையில் இருந்தும் அவருக்கு ஆதரவு குரல்கள் வந்து கொண்டு இருந்தன. ஆனால் காந்திய வழியை விரும்பும் ரஜினியிடம் இருந்து ஒரு குரல் கூட வரவில்லை. இது பலரது விமர்சனத்தை எழுப்பியது.

அப்பொழுது ரானா பட வேலையில் ஈடுப்பட்டு இருந்தார் நம் தலைவர்.அந்த சமயத்தில், ரஜினி அவர்கள் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தார். நிருபர்கள் அவரிடம் நீங்கள் அண்ணா ஹஜாரேவிற்கு ஆதரவு தருவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ரஜினி, நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அனால் என் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்று கூறினார். இது மிகவும் சம்பர்தாயமான பதிலாக எனக்கு தோன்றியது. தலைவர் முதல் முறையாக பொய் சொல்கிறார் என்று நினைத்தேன்.ரானா பட வேலையில் ஈடுபடும் இவர் உடல் நிலை சரி  இல்லை என்று பொய் சொல்கிறாரே என்று வருத்தப்பட்டேன்.


ஆனால் அதற்குப்பின் நடந்தது நாடு அறிந்தது.தலைவர் மறு ஜென்மம் எடுத்தார் என்று தான் கூற வேண்டும்.மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.அப்பொழுது தான் நினைத்துப் பார்த்தேன். தலைவர் எவ்வளவு உடல் நிலை சரி  இல்லாமல் இருந்து இருப்பார்? எந்த நிலையில் ஓட்டுப்  போட வந்து இருப்பார். தன்னை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்று அவ்வளவு சிரத்தை எடுத்து இருக்கிறார்.தலைவா உயிரே போனாலும் உன் வாயில் இருந்து பொய் வராது என்று அன்று புரிந்து கொண்டேன்.

இப்பொழுது முதல் பத்திக்கு செல்வோம். தலைவர் அப்படி கூறி இருப்பாரா? எவ்வளவு ஒரு வடி கட்டின பொய்.தலைவரைப்பற்றி குறை கூறி புகழ் பெற வேண்டும் என்று இப்பொழுது புதிதாக வந்து இருக்கிறார் சுப்ரமணிய சுவாமி.வழக்கம் போல் வார இதழ்கள் இதை ஒரு வாரத்திற்கு கவர் ஸ்டோரியாக வெளியிடும். ஆனால்  முடிவில் தலைவர் பெயர் மேலும் கூடும், தலைவரைப்பற்றி குறை  கூறியவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது நாடு அறிந்தது.

Tuesday, May 15, 2012

வழக்கு எண் 18/9- ஒரு புரட்சி


                            வழக்கு எண் 18/9- ஒரு புரட்சி

             
இயக்குனர் ஷங்கர் அவர்களின் கண்டுபிடிப்புகள் யாவரும் தமிழ் சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் (Trend Setters) என்ற கருத்தை மீண்டும் ஒரு முறை நிருபித்து உள்ளார் பாலாஜி சக்திவேல்.

இவரின் முந்தைய படைப்பு கல்லூரி சரியாக வெற்றி அடையாததற்கு காரணம் என்ன என்று இப்பொழுதுதான் புரிந்தது. அவரிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இது போன்ற ஒரு திரைபடத்தைத்தான். மனிதனின் அபார திறமை இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிர்கிறது.

இந்த திரைப்படத்தில் என்னைப்பொறுத்தவரை நடிகர்,நடிகைகள்,இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் அனைவரும் மிக நன்றாக தங்கள் பணிகளை செய்து இருந்தார்கள். மிக சிறந்த ஒளிப்பதிவு, நடிப்பு என்று கூறி விட முடியாது. எதார்த்தமான நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.குறிப்பாக இரண்டாம் பாதியில் நம் பக்கத்து வீட்டில் யாரோ கேமராவை வைத்துவிட்டு படம் எடுத்தது போல் ஒவ்வொரு காட்சியும் பிரமாதம்.

கடைசி காட்சி சினிமா தனமாக உள்ளதாக பல விமர்சனங்களில் பார்த்தேன். எல்லா இயல்பான படத்திலும் ஏழைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் படம் பார்க்கும் நாமும் மனதைக் கை விட்டு விடுவோம்.அந்த வகையில் படத்தின் கடைசி காட்சி மிக சிறந்ததே.

இந்த படம் கனான் 5D(Canon 5D) கேமராவில் எடுக்கப்பட்டது என்ற செய்தி இன்றைய இளைஞர்களுக்கு இனிப்பான ஒன்று. இவ்வளவு விறுவிறுப்பான ஒரு படத்தை இந்த கேமராவில் குறைந்த செலவில் எடுக்க முடியும் என்றால், பல குறும்படம் எடுக்கும் இளைஞர்கள் முழுப்படத்தை எடுப்பார்கள்.

ஒரு முழுத்திரைப்படம் என்பது நாயக, நாயகிகள் முக்கியத்துவம் கொண்டது அல்ல.படைப்பாளி, அவன் கதை,இதை வைத்துதான் வெற்றி முடிவு செய்யப்படுகிறது.இந்த மாதிரி நிறைய படங்கள் புது படைப்பாளிகளிடம் இருந்து வரும்போது நாயகர்கள் வழிப்பாடு குறையும். திரைப்படத்தை மக்கள் திரைப்படமாக மட்டுமே பார்க்கும் காலம் வரும். படைப்பாளிகள் மதிக்கப்படுவார்கள்.

திரைஅரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறையும். இந்த மாதிரி படங்கள்தான் இந்தியா மாதிரி நாடுகளுக்கு உகந்தது.

எனவே, இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு புரட்சி ஏற்ப்பட்டுள்ளது என்றால் அது மிகை அல்ல. கூடிய விரைவில் குறும்படம் எடுக்கும் நானும், எனது நண்பர்களும் கூட இது போன்று குறைந்த செலவில் முயற்சிகளை செய்ய தூண்டி உள்ளது.

அந்த ஒரே காரணத்திற்க்காகத்தான் இந்த பதிவில் பாலாஜி சக்திவேல் அவர்கள் பெயரைத்தவிர வேறு பெயரைக் குறிப்பிடவில்லை.Related posts

Related Posts Plugin for WordPress, Blogger...